முத்துசாமிக் கிழவன்

0
Muthuswamy Kilavan

‘ஜிகிடான்’ ஊர்க்காவல் கொட்டகையிலிருந்து காவல்காரன் “டாண் டாண்” என்று பதினொருமுறை அடித்த மணியோசை, தரையில் சிறிய பாயை விரித்துத் தலைக்கு ஒரு கட்டையை அணையாக வைத்துப் படுத்துக் கொண்டிருந்த முத்துசாமிக் கிழவனைத் தட்டி எழுப்புவது போலிருந்தது. மணியோசையைக் கேட்டவுடன் படுக்கையைவிட்டு எழுந்திருக்க முயன்றான்; முடியவில்லை. அன்று மாலை சாப்பிட்ட இரண்டு துண்டு மரவள்ளிக்கிழங்கும் உப்பு இல்லாததற்குப் பதிலாகக் கானாங்கெளுத்திக் கருவாட்டைக் கடித்துக்கொண்டு குடித்த சுண்ணாம்பு அரிசிக் கஞ்சியும் எப்போதோ இரைப்பையை விட்டுப் பெருங்குடலுக்குச் சென்றுவிட்டது. கிழவன் தூங்கவில்லை; பசி மயக்கத்தில் சோர்ந்து படுத்திருந்தான். 

அன்று அவனுக்கு ‘ஜிகிடான்’ காவல் பகுதியில் இரவு பதினொரு மணி முதல் விடிய ஆறு மணிவரை காவல் இருக்க வேண்டிய முறை. சோர்வு என்று சும்மா இருந்தால் ஜப்பான்காரன் விட்டுவிடுவானா? கிழிந்த பாயையும் அளவு இல்லாத குறையும், அவனது வாழ்க்கைப் பாதையில் நிகழ்ந்த சோக நிகழ்ச்சிகளும் 

முத்துசாமியைக் கிழவனாகவே ஆக்கிவிட்டது. ஆயினும், எல்லாரையும் போலவே அவனும் ஊர்க் காவலுக்குச் செல்லுகிறான் கடமையை நிறைவேற்ற. 

தோளில் கிடந்த சிறிய துண்டை எடுத்துக் குளிராமலிருக்கக் காதோடு சேர்த்துத் தலையில் சுற்றிக்கொண்டு நடந்தான். சிறிது தூரத்தில் அந்த வட்டாரத்திற்குப் பொறுப்பாளனான ஜப்பான்காரனின் அலுவலகம் இருந்தது. சுற்றிலும் முள்வேலி. வாயிலில் சிறு காவல் கொட்டகை. முத்துசாமியின் ஒளியிழந்த கண்களுக்கு அங்கே யாரோ நிற்பதுபோல் தோன்றியது வாயிலிருந்த ‘ரோக்கு’த் துண்டைக் கீழேபோட்டு மிதித்து நெருப்பை அணைத்துவிட்டு மெதுவாக நடந்தான். யாரோ எப்போதோ இரவில் சொன்னதை நினைவுபடுத்திக் கொண்டு, “ஒயாசுமி நசாய்” (இரவு வணக்கம்) என்று கூறிக்கொண்டே இடுப்பை 7 போல் மடக்கென் வளைத்து வணக்கம் செய்து நிமிர்ந்தான். நிப்பங்கோவில் (ஜப்பான் மொழியில்) தனக்கும் ஒரு வாக்கியத்தைச் சொல்ல முடிந்ததில் கொஞ்சம் மகிழ்ச்சியும் ஏற்பட்டது அவனுக்கு. இதழோரத்தில் சிறு புன்னகை. இரண்டடி முன்சென்று திரும்பிப் பார்த்தான். அவன் நிப்பங்கோவில் சொன்ன இரவு வணக்கத்தை ஏற்றுக்கொள்ள அங்கு யாரும் இருக்கவில்லையென்பதை மங்கிய லாந்தர் ஒளியில் காணமுடிந்தது. அங்கே காவல்கார ஜப்பானியன் இருக்கிறானோ இல்லையோ அந்த இடத்திற்கு வந்தால் கண்டிப்பாக ஜப்பானிய முறையில் இடுப்பை வளைத்து வணக்கம் செய்துவிட்டுத்தான் செல்லவேண்டும். முத்துசாமிக் கிழவனும் அந்த முறையை மீறாமல் வணக்கம் செய்துவிட்டு நடந்தான். வணக்கம் செய்யத் தவறியமையால் வாயில் சவர்க்காரத் தண்ணீர் ஊற்றப்பட்டுக் கட்டிப்போட்டு ஜப்பானியரால் அடிக்கப்பட்ட பல காட்சிகளை அவன் பார்த்திருக்கின்றான். அதை மறக்க முடியுமா? 

மேலும் சிறிது தூரம் நடந்து பெரிய சுற்றுவேலியின் தலைவாயிலிலிருந்த காவல் கொட்டகையை அடைந்தான் முத்துசாமிக் கிழவன். அந்த இடத்திலிருந்து வெளியே செல்லவும் உள்ளே வரவும் அது ஒன்றே வழி. காவல்காரன் அனுமதியின்றி எவரும் உள்ளே நுழையவோ வெளியே செல்லவோ முடியாது. அன்று விடிய ஆறு மணிவரை முத்துசாமிதான் அந்தக் கேட்டிற்கு ராசா. ஊதியமில்லாத கட்டாயக் காவல் வேலை. 

லாந்தரைக் கொட்டகையின் முன்னுள்ள கம்பியில் மாட்டினான். மூங்கில் சிம்புகளால் அமைத்திருந்த பரண் மீது ஏறி உட்கார்ந்தான். காவலுக்குரிய மண்வெட்டிக் கணையை மட்டும் கையிலேயே பிடித்திருந்தான். பசி மயக்கத்தில் அந்த இருட்டில் அரை மைல் தூரம் நடந்து வந்தது முத்துசாமிக்கு மிகு அசதியாய் இருந்தது. ‘கேட்’ பூட்டியிருக்கின்றதா இல்லையா என்பதை இறங்கிப் போய் பார்க்கக்கூட அவனுக்குத் தெம்பில்லை. 

சோர்ந்து உட்கார்ந்திருந்த அவனுக்கு அப்போது தான் திடீரென்று நினைவுக்கு வந்தது. அவசரமாக இடுப்பைத் தடவினான். அவன் தேடியது அங்கிருந்தது! அந்த நேரத்தில் அது இருந்தது புதையல் அகப்பட்டது போலிருந்தது அவனுக்கு. வேட்டியின் முனையில் முடிந்து இடுப்பில் செருகியிருந்த அந்தச் சிறிய 

முடிச்சை அவிழ்த்தான். அன்று பகலில் போட்டதுபோக மீதமான அரை வெற்றிலையும் ஒரு கொட்டைப் பாக்குத் துண்டும் இருந்தது. கொட்டைப்பாக்கைக் கடக்கென்று கடித்தான். உடல்தான் கிழமானதேயன்றி வாயிலுள்ள முப்பத்திரண்டு பற்களும் அப்படியே இருந்தன. கடித்த கொட்டைப் பாக்கோடு வெற்றிலையையும் சேர்த்து மென்று அந்தச் சாற்றை இரண்டு தடவை விழுங்கினான். காலியான இரைப்பையில் சில்லென்று விழுந்தது வெற்றிலைச் சாறு.  அது புதுத் தெம்பையளித்தது. தூரத்தில் அடித்த மணியோசையைக் கேட்டுவிட்டுக் கீழிறங்கிச் சென்று, அங்கு கட்டித் தொங்கிக்கொண்டிருந்த தண்டவாள இரும்புத் துண்டை “டாண் டாண்” என்று பன்னிரண்டு முறை அடித்தான். 

லாந்தரைக் கொஞ்சம் தூண்டிவிட்டபின் வெற்றிலை பாக்கை மென்றுகொண்டே பரண்மீது ஏறி உட்கார்ந்தான். பல்லில் சிக்கிக்கொண்ட பாக்குத் துண்டை மூங்கில் குச்சியினால் குத்திக்கொண்டிருந்தான். நேரம் என்னவோ ஆமைபோல் நகர்ந்துகொண்டிருந்தது. பன்னிரண்டு மணிக்குச் செல்லும் பாரவண்டியும் சென்று விட்டதால், சிறிது தூரத்திலிருந்த இரயில்வே கேட் காவல்காரனும் இரயில்வே லைனை அடைத்துவிட்டுத் தூங்கச் சென்றுவிட்டான். ஒற்றைக்கண் பேய்போல் கேட்டில் மாட்டியுள்ள சிவப்பு விளக்கு கண் கொட்டாமல் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தது. பக்கத்துப் பள்ளத்திலுள்ள ஒரு வரட்டுத் தவளை மட்டும் “பாங் பாங்” என்று விட்டுவிட்டுக் கத்திக்கொண்டிருந்தது. அந்த அமைதியான நேரத்தில் முத்துசாமிக் கிழவனுக்கு ஓர் ஆண்டுக்கு முன் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் கனவுபோல் கண்முன் நிழலாடிக் கொண்டிருந்தன. 

சிறுசிறு கால்வாய்கள் ஒன்றுசேர்ந்து பேராறாகிக் கடலை நோக்கி ஓடுவதுபோல், எங்கெங்கோ இருந்து வரும் லோரிகள் கோலாலம்பூர் செல்லும் நெடுஞ்சாலையில் ஒன்றுசேர்ந்து இரயில்வே நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தன. சாலையில் வரிசை வரிசையாகச் சென்று கொண்டிருந்த லோரிகளுக்கு முடிவேயில்லையோ என்பதுபோல் நீண்டுகொண்டிருந்தது. அந்த லோரிகளில் சாமான்களைக் குவிப்பதுபோல் மனிதர்களை ஏற்றியிருந்தனர் 

அவர்களுடைய சிரமங்களையோ கவலையையோ யாரும் இலட்சியம் செய்ததாகத் தோன்றவில்லை. 

முத்துசாமி லோரியில் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தான். பதினெட்டு வயது நிரம்பிய ஒரே மகனான முருகனைச் சிறு குழந்தையை அணைத்துக்கொண்டிருப்பதுபோல் அவனுடைய வலக்கரம் அணைத்துக் கொண்டிருந்தது. முருகனுக்கு அப்படி முடங்கித் தந்தையை நெருங்கி உட்கார்ந்திருப்பது இயலவில்லையாயினும், அப்படி இருப்பதைத் தவிர அந்த நெருக்கடியில் வேறு வழி இல்லாமையால் அசையாது உட்கார்ந்திருந்தான். லோரி செல்லும் வேகத்தில் சில சமயங்களில் தந்தையோடும் மோதிக்கொண்டான்.

முத்துசாமிக்கு மகனைப் பார்க்கப் பார்க்கத் துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டுவந்தது. ஆணாகப் பிறந்துவிட்டமையால் துக்கத்தைப் பகிரங்கமாக வெளியில் காட்டிக் கொள்ள முடியவில்லை. வாய்விட்டுக் கதறவும் முடியவில்லை. ஆனால் அவனையும் மகன் முருகனையும் லோரியில் ஏற்றும்போது அவன் மனைவி செல்லம்மா துடித்த துடிப்பும், கதறிய கதறலும் அடக்கிய துக்கத்தையும் உடைத்தெறிந்துவிட்டுக் கண்களில் நீரைக் கலங்கச் செய்தது. மேல் துண்டினால் முகத்தை மூடிக் கொண்டான்.

“ஐயோ, என் ஒரே மகனை என்னை விட்டுப் பிரித்துக் கொண்டு போகிறீர்களே! என்னை அநாதையாகவிட்டுச் செல்கிறீர்களே! நான் இனி என்ன செய்யப்போறேன்? எப்படி என் பிள்ளையைவிட்டுப் பிழைக்கப் போறேன்?” 

என்று கதறிய செல்லம்மாவின் சோகக் குரல் இன்னும் முத்துசாமியின் காதுகளில் விடாமல் ஒலித்துக்கொண்டிருந்தது. 

“அழாதே செல்லம்மா, நாம் என்ன செய்யமுடியும்? போய்விட்டுக் கொஞ்ச நாளில் திரும்பி வந்து விடுகிறோம்” என்று கூறிவிட்டுத் தன்னிடமிருந்த ஐம்பது வெள்ளி வாழைத்தார் நோட்டை மனைவியிடம் கொடுத்து விடைபெற்றுக் கொண்டதும், “பிள்ளையைத் தனியே விட்டுடாதீங்க! தனியே விட்டுடாதீங்க!” என்று கணவனையும் மகனையும் ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டே விம்மியபடி அவன் மனைவி கூறியதும், எல்லாரையும் ஏற்றிக் கொண்டு லோரி புறப்பட்டபோது அங்கு நிலவிய சோகக் காட்சியும் இன்னும் முத்துசாமியின் கண்களைவிட்டு அகலவில்லை. மகனுக்குத் தெரியாமல் கண்களில் கலங்கிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டான். லோரி நாற்பது கல் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. 

யாரால் வேலைசெய்ய முடியும், யாரால் வேலை செய்ய முடியாது என்பதைக் கூடக் கவனிக்கவில்லை சியாம் ரயில்வே போட ஆள் திரட்டிய ஜப்பானியர். ஐம்பது வயதைக் கடந்த முத்துசாமியும் இருந்தான் பதினெட்டே வயதான அவன் மகன் முருகனும் இருந்தான். தாத்தாக்களும் இருந்தனர். மாமனார்களும் இருந்தனர். மருமக்கள்மாரும் இருந்தனர். வரிசை வரிசையாகச் செல்லும் அந்த லோரிகளில் இளம் இன்ப மனைவியைப் பிரிந்து செல்லும் காளைகள், அன்புத் தாயைப் பிரிந்து செல்லும் இளங்குமாரர்கள், அருமைச் செல்வங்களைப் பிரிந்துசெல்லும் தந்தையர்கள், ஆக எல்லாவகையினரும் சோகம் தோய்ந்த முகத்துடனிருந்தனர். கண்காணாத இடத்திற்கு உற்றாரையும் பெற்றாரையும் விட்டுப் பிரிந்து செல்கிறோம் என்ற கவலை லோரிகளில் நிரம்பியிருந்தது. சில சிறுசுகள் மட்டும் கவலை என்பது தெரியாமல் புதிய இடத்திற்குப் போகப் போகிறோம் என்ற தெம்பில் உற்சாகமாக வேடிக்கை பார்ப்பதில் ஈடுபட்டிருந்தனர். கவலையை மொத்தமாகத் தாய்மார்களிடம் கொடுத்துவிட்டுச் செல்கிறார்கள் அல்லவா அவர்கள்!

லோரிகளில் கொண்டுவந்து குவிக்கப்பட்ட மக்கள் கூட்டம், கோலாலம்பூர் இரயில்வே நிலையத்தில் தயாராயிருந்த, சாமான்களை ஏற்றிச் செல்வதற்கென்றே தயாரிக்கப்பட்ட கூட்ஸ் வண்டிகளில் ஏற்றப்பட்டது. முத்துசாமி தனக்கும் தன் மகனுக்குமாகப் பாரவண்டியில் ஒரு மூலையில் இடம்பிடித்துக் கொண்டான். மூலையில் இருப்பது முருகனுக்கு விருப்பமில்லையாயினும் தந்தையின் முடிவை மீறிச் செல்ல விரும்பவில்லை. தோட்டத்தில் எங்கோ மூலையில் வசித்த அவனுக்குப் புதிய புதிய இடங்களைப் பார்க்கப் போகிறோம் என்பதில் அளவற்ற மகிழ்ச்சி. கவலை என்பது அதிகமாகத் தெரியவில்லை. தாயைப் பிரியும்போது மட்டும் கொஞ்சம் அழுகை வந்தது.

பாரவண்டிப் பிரயாணிகளுக்கு ஒரு நிமிடம் கழிவது ஒரு நாள் கழிவது போலிருந்தது. புழுக்கம் தாங்க முடியவில்லை. ஒருவர் மூச்சுக் காற்றில் ஒருவர் வெந்து கொண்டிருந்தனர். வண்டி நகர்ந்தபோதுதான், குளிர்ந்த காற்று உள் நுழைந்தது. வியர்வையால் நனைந்து கொண்டிருந்த அவர்களை உலரவைத்தது. ஆனால், அவர்கள் கண்களில் தேங்கிக்கிடக்கும் கண்ணீரை அந்தக் காற்றால் உலரவைக்க முடியவில்லை. 

ஒரு முழுநாள் நெடும் பயணத்திற்குப் பின் அந்தப் பாரவண்டி மலாயாவின் வட எல்லையை அடைந்தது. அங்கிருந்து மறுபடியும் லோரிகளில் அள்ளிக்கொண்டு போய்த் தள்ளினர். சியாம் நெடுங்காடு அவர்களை வரவேற்றது. அந்தத் தடவையில் வந்த இருநூறு பேரையும் மூன்று ஜப்பான்காரர்கள் ஆடுமாடுகளை ஓட்டிக்கொண்டு போவதுபோல் ஓட்டிச் சென்றனர். காட்டை அடுத்த பகுதியில் அவர்களுக்கென்று தயாராய்க் கொட்டகைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதற்கு முன் வந்த பலர் அங்குப் பழைய குடிகளாக இருந்தனர்.

முத்துசாமி தன் மகனுக்குமாக அந்த நீண்ட கொட்டகையில் கொஞ்சம் இடத்தை ஒதுக்கிக் கொண்டான். மலாயாவில் சுண்ணாம்பு அரிசிச் சோற்றையும் அதுவும் கிடைக்காமல் மரவள்ளிக் கிழங்கையும் தின்று மக்கள் உணவுக்குத் திண்டாடும் போது, இங்குச் சயாமில் கண்டபடி சோற்றை அவித்துக் கொட்டுவதைக் காண முத்துசாமியின் உள்ளம் வேதனையால் விம்மியது.

அன்று இரவு அவனுக்குத் தூக்கமே வரவில்லை. கொசுக்கடி ஒருபுறம்; பக்கங்களில் கொட்டிக்கிடக்கும் புளித்த சோற்றின் நாற்றம் ஒருபுறம்.  மூங்கிலை இரண்டிரண்டாகப் பிளந்து அமைக்கப்பட்ட படுக்கை, உடலை உருட்டியெடுத்தது. குளிர்வேறு. கொண்டு வந்திருந்த ஒரே வேட்டியை மகன் முருகன் மீது போர்த்திவிட்டு, அன்று இரவெல்லாம் விழித்துக் கொண்டிருந்தான்.

மறுநாள் காலை புதிதாக வந்திறங்கிய அத்தனை பேரும் வரிசையாக வந்து நின்றனர். அவர்களை அழைத்து வந்த ஜப்பான்காரர்கள் மூவரும் அவர்களைத் தனித்தனிப் பகுதிகளுக்கு அனுப்பச் சிறுசிறு குழுக்களாகப் பிரித்தனர். முதல் இருபதுபேரை ஒரு லோரியில் ஏற்றி ஒரு பகுதிக்கு அனுப்பினர். அடுத்த இருபதுபேரை வேறு லோரியில் ஏற்றினர்.அதில் முருகனும் சேர்க்கப்பட்டான். திகைத்து விட்டான் முத்துசாமி. லோரிக்கு ஓடினான். அவன் எதிர்பார்க்கவேயில்லை. 

“ஐயா, அவன் என் மகன் ஐயா; சின்னப்பையன் அவன் என்னோடே வேலை செய்யட்டும்” என்று கெஞ்சினான். முத்துசாமி என்ன சொல்கிறான் என்பதை விளங்கிக் கொள்ளாத ஜப்பான்காரன், “குரா, நனி?” ஒரு அதட்டல் போட்டான். தொடர்ந்து, “அனந்தவா நனிகா இரிமாசுகா?” (உனக்கு என்ன வேண்டும்?) 

என்று கத்தினான். ஒருகாலை லோரிப் படியிலும், மறுகாலைக் கீழுமாக வைத்திருந்த முருகன் ஜப்பான்காரன் போட்ட அதட்டலில் நடுங்கிப் போனவனாய் லோரிக்குள் குதித்துவிட்டான். ஜப்பான்காரன் சைகை காட்டியதும் லோரி விருட்டென்று புறப்பட்டது. ஒன்றும் செய்ய முடியாதவனாய்த் திகைத்து நின்றான் முத்துசாமி. “மகனைத் தனியே விட்டுவிடாதீங்க, மகனைத் தனியே விட்டுவிடாதீங்க” என்று அவன் மனைவி செல்லம்மா கூறிய வார்த்தைகள் நாலாபக்கத்திலிருந்தும் ஈட்டிகள் வந்து பாய்வதுபோல் அவனைக் குத்தின. உடல் நடுங்கியது. வாய்விட்டே அழுதுவிட்டான். உள்ளம் வெடித்துவிடும் போலிருந்தது அவனுக்கு. 

இரண்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டன முத்துசாமியால் தன் மகனைப் பார்க்கவே முடியவில்லை. எத்தனையோ பேரை விசாரித்துவிட்டான். ஏமாற்றந்தான். அவன் எந்த இடத்தில் இருக்கிறான் என்ற தகவல்கூட அவனுக்குக் கிடைக்கவில்லை. அந்த இரண்டு மாதத்தில் முத்துசாமி சியாமில் கண்ட காட்சிகள் அவன் வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாதவை. 

காட்டாற்று இரைச்சலோடு காட்டு மரங்களை வெட்டி வீழ்த்தும் பேரொலி போட்டியிட்டது; டிரக்குகளிலிருந்து இறக்கப்படும் தண்டவாளங்களின் உரசலோடு, நோயாளிகளின் முனகல் இணைந்தது; ஜப்பானியர்களும் அவர்களின் கையாட்களும் செய்யும் அட்டகாச அதிகாரக் கட்டளைகளோடு, எலும்பொடியப் பெருமரங்களையும் தண்டவாளங்களையும் புரட்டும்போது எழும் தொழிலாளிகளின் பெருமூச்சு ஒன்று கலந்தது; மேலாடை அணியாது நெஞ்சுவரை கைலியை உயர்த்திக் கட்டிய சியாமிய இளம்வனிதையர் அங்கு வியாபாரம் செய்யப் பொரித்துக் கொண்டுவந்த கோழியின் மணத்தோடு, அட்டைக் கடியால் ஏற்பட்ட உள்ளங்கை அகலமான புண்களில் சீழ்வடிய, அதில் மொய்க்க வரும் ஈக்களை ஓட்டிக்கொண்டு இடத்தைவிட்டு அசைய முடியாதவர்களின் மேலிருந்து எழும் துர்நாற்றம் இரண்டறக் கலந்தது. இன்னும் எத்தனையோ காட்சிகள்.

குளிராலும் கொசுக்கடி அட்டைக்கடியாலும் வருந்துபவர் ஒருபுறம்; சியாம்காரர்கள் காய்ச்சிக்கொண்டு வந்து விற்கும் ஒருவிதச் சாராயத்தைக் குடித்துவிட்டுக் குடல் வெந்து அவதிப்படுபவர் ஒருபுறம்; சரியாக வேகாத கல்லும் மண்ணும் கலந்த சோற்றையும், குழம்பு என்ற பெயரில் மிளகாய்த் தூளைக் கொட்டி கிளறியதையும் தின்று வயிற்றோட்டங்கண்டு அவதிப்படுவோர் ஒருபுறம்; ஜப்பானியரிடம் அடி உதை பட்டு நலிந்தவர்கள் ஒருபுறம் மலாயாவில் விட்டு வந்த குடும்பத்தினரை எண்ணி ஏங்கி மெலிந்தவர்கள் ஒருபுறம்; சாலையில் சென்று கொண்டிருக்கும்போதே லோரியில் தூக்கிக்கொண்டு போய் இரயிலில் ஏற்றி சியாம் கொண்டுவந்து தள்ளியமையால், குடும்பத்தவரிடம் கூடச் சொல்லிக் கொள்ளாமல் வந்து தவிப்பவர்கள் ஒருபுறம். எத்தனையோ ரகம். மலாயாத் தமிழர்களில் சுமார் ஒரு இலட்சம் பேர் இந்தச் சோக மரண ரயில்வேக் குழியில் அகப்பட்டுத் தவித்தனர். தமிழர்களின் இரத்தம் வியர்வையாகவும் கண்ணீராகவும் சீழாகவும் ஓடியது. 

மகனைப் பிரிந்த சோகமும் காட்டுப் பகுதியிலுள்ள குளிரும் கொசுக்கடியும் முத்துசாமியின் உடலை உருக்குலைத்துவிட்டது. மூன்றுமாத காலத்தில் பத்தாண்டு வயது முதிர்ச்சியும் தளர்ச்சியும் அடைந்தது போலிருந்தது அவனுக்கு குளிர் காய்ச்சலில் நடுங்கிக்கொண்டிருந்தான். மூன்று நாட்களாக வேலைக்குப் போகவும் முடியவில்லை. அவனால் எழுந்திருக்கவே முடியவில்லை.

அதிக நோயால் வேலை செய்ய முடியாதிருப்பவர்களை மலாயாவுக்குத் திருப்பி அனுப்ப முடிவு செய்தனர் அதிகாரிகள். வேலை செய்ய உதவமாட்டார்கள் என்ற கூட்டத்தில் முத்துசாமியும் சேர்க்கப்பட்டான். மலாயாவுக்குத் திரும்பலாம் என்ற செய்தியைக் கேட்டவுடனே சில நோயாளிகளுக்குப் பாதிநோய் குறைந்தது போலிருந்தது. ஆனால், முத்துசாமிக்கோ…? மகனைக் கொண்டுவந்து இங்கே விட்டுவிட்டு எப்படி மலாயா திரும்புவது என்ற மனப்போராட்டம். “மகன் எங்கே?” என்று மனைவி கேட்டால் என்ன பதில் சொல்வது? 

இவர்கள் மனப் போராட்டத்தையும் கவலைகளையும் ஜப்பான்காரன் கேட்கவா போகிறான்! ‘போ’ என்றால் போகவேண்டும்; ‘இரு’ என்றால் இருக்கவேண்டும். யார் எதிர்த்துப் பேசமுடியும்?

நோயாளிகள் பாரவண்டிகளில் ஏற்றப்பட்டனர். சில நோயாளிகள் பாதி வழியிலேயே இறந்துவிட்டனர். ஒவ்வொரு கூட்ஸூம் ஒரு சவக்கிடங்கு போல்தான் இருந்தது. செத்தவர்களும், செத்துக் கொண்டிருந்தவர்களும், மொண்டிகளும், நொண்டிகளும், வீங்கியவர்களும், மெலிந்தவர்களும் கோலாலம்பூர் இரயில்வே நிலையத்தில் கொண்டுவந்து தள்ளப்பட்டனர். 

உருப்படியாகப் போனவர்கள் உடல் நலிந்து உருக்குலைந்து வந்தனர். வழியில் வண்டியிலேயே இறந்தவர்களைப் பற்றி உறவினர்களுக்குக் கூடத் தெரிவிக்காமல் ஒரே குழியில் இரண்டு மூன்று பிணங்களைப் போட்டு மண்ணைத் தள்ளி மூடினர். குழியை வெட்டச் சொல்லிக் குழி வெட்டியவனையே அந்தக் குழியில் வெட்டித்தள்ளி மூடிய காலந்தானே அது! 

நீண்டு வளர்ந்த முடியும் தாடியுமாகத் தள்ளாடிக் கொண்டே பாரவண்டியிலிருந்து இறங்கினான் முத்துசாமி. முத்துசாமியாகச் சென்றவன் ஆறே மாதத்தில் முத்துசாமிக் கிழவனாகத் திரும்பிவந்திருக்கிறான்! கோலாலம்பூரிலிருந்து செல்லும் ஒரு லோரிக்காரனிடம் கெஞ்சிக் கேட்டுத் தொற்றிக்கொண்டு தன் பழைய இடத்தை அடைந்தான். ஆறு மாதங்களில் அங்கு அத்தனை மாற்றம்? எங்கும் வெறிச்சோடியிருந்தது.

‘செல்லம்மா, நான் உனக்கு என்ன பதில் சொல்வேன்? மகனைக் கண்காணாத தேசத்தில் விட்டுவிட்டு நான்மட்டும் உயிரைக் காப்பாற்றிக்கொண்டு திரும்பி வந்திருக்கிறேனே; உன் முகத்தில் எப்படி விழிப்பேன்?’ வீட்டை நெருங்க நெஞ்க அவனுடைய மனப்போராட்டம் எல்லையற்று விரிந்தது. மனப்போராட்டத்துடனே வீட்டை அடைந்தான். 

வீடு சாத்தப்பட்டிருந்தது. கதவைத் தொடுவதற்கு முன்னரே அது திறந்துகொண்டது. உள்ளே சென்றான்; அங்கு யாரையும் காணவில்லை. குடிபோன வீடு போலிருந்தது. ‘செல்லம்மா எங்கே போயிருப்பாள்?’ என்ற கேள்வியை தனக்குள்ளே கேட்டுக்கொண்டே வெளியே வந்தான்.

“யாரு? முத்துசாமிப் பெரியவரா? அடையாளமே தெரியவில்லையே! சியாமிலிருந்து எப்போ வந்தீங்க?” என்று அடுத்த வீட்டுக் கன்னியம்மா வியப்புடன் கேட்டாள். அவளும் கணவனைச் சியாமுக்கு அனுப்பிவிட்டு, இரண்டு கைக்குழந்தைகளுடன் தனித்திருப்பவள்தான். அவளுடைய கேள்விகள் ஒன்றையும் முத்துசாமி கவனிக்கவுமில்லை, பதில் சொல்லவுமில்லை. 

“ஏம்மா, என் வீட்டுக்காரி எங்கே காணோம்? வீடு பாழடைஞ்சமாறி இருக்கே, வேற இடத்துக்குப் போயிட்டாங்களா?” என்று கம்மிய குரலில் கேட்டுக் கொண்டு கன்னியம்மாவின் வீட்டுவாசலை அடைந்தான் முத்துசாமி. 

“வாங்க பெரியவரே, உட்காருங்க” என்று கூறிக் கொண்டே வாசலில் நின்ற கன்னியம்மா வீட்டினுள் சென்று முத்துசாமியை உட்காரச் சொன்னாள். முத்துசாமி உட்சென்று உட்காரவில்லை. வாசலைப் பிடித்துக் 

கொண்டே நின்றான். உள்ளம் ‘திக் திக்’கென்று அடித்துக் கொண்டது. மனைவியைப் பற்றி அறியத் துடித்தது உள்ளம். 

‘மகன் எங்கே என்று கேட்கும் தாயிடம் என்ன பதில் சொல்வது’ என்று போராடிக் கொண்டுவந்த முத்துசாமிக் கிழவனுக்குப் பதில் சொல்லவேண்டிய அவசியமே இல்லாதுபோனது. கன்னியம்மா சொன்ன பதிலைக் கேட்டவுடன் அவனுக்குத் தலையில் பெரிய தடியால் அடித்ததுபோலிருந்தது. “ஐயோ, செல்லம்மா நீயும் என்னைத் தனியே விட்டுட்டுப் போயிட்டியா” என்று கூறிக்கொண்டே நிற்க முடியாமையால் தலையில் கையை வைத்துக்கொண்டு வாசலிலேயே உட்கார்ந்து கொண்டான். 

அடுத்த காவல் வாசலிலிருந்து எழுந்த மணியோசை முத்துசாமிக் கிழவனைச் சுயநினைவிற்கு வரச்செய்தது. அவனையறியாமல் கண்களில் நீர் கலங்கிக்கொண்டிருந்தது. வாய், “செல்லம்மா, என்னைவிட்டுப் போயிட்டியா? என்னை விட்டுப் போயிட்டியா? என்று முனகியது. ஓர் ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஆயினும் அந்த நிகழ்ச்சிகள் நேற்று நடந்தது போலிருந்தன. கண்களைத் துடைத்துக் கொண்டான். காவல் பரணிலிருந்து கீழே இறங்கி, மணி மூன்றாகிவிட்டது என்பதற்கு அடையாளமாக “டாண் டாண்” என்று மூன்றுமுறை அடித்தான். 

வாயில் அடக்கிக்கொண்டிருந்த தம்பலத்தை வெளியில் துப்பினான். முற்பகுதிக் காவல்காரன் மறந்துபோய் வைத்துவிட்டுச் சென்ற போத்தலிலிருந்த நீரால் வாயைக் கொப்பளித்துவிட்டுச் சிறிது குடித்தான். நெஞ்சை அழுத்திக்கொண்டிருந்த துக்கத்தையும் சோக நிகழ்ச்சியையும் அந்தக் குளிர்ந்த நீர் ஏற்படுத்திய குளிர்ச்சி சிறிது இதமாக்கியது. அந்த நினைவு 

சிறிது மாற, காவலுக்குப் புறப்படுமுன் அப்துல்லா கூறிய செய்தி அவனுடைய உள்ளத்தை மறு முறை கிளற ஆரம்பித்தது. எண்ணங்கள் மண் புழுவைப்போல் நெளிந்து நெளிந்து அதன் பழைய சுவடுகளை வெளியில் தள்ளிக்கொண்டிருந்தன. 

நாளைக்குச் சியாமிலிருந்து திரும்பி வருவோர் கூட்டத்தில் தன் மகன் முருகனும் வருவான் என்பதை நினைத்துப் பார்க்கும்போது, அவனுடைய உள்ளம் மகிழ்ச்சியால் விம்மியது. கால்களைத் தொங்க விட்டு உட்கார்ந்திருந்த அவன், சிறிது பின்னால் நகர்ந்து மூங்கில் தட்டியில் சார்ந்து சம்மணம்போட்டு உட்கார்ந்து கொண்டான். காவலுக்குரிய மண்வெட்டிக்கணை கையிலிருந்தது. மகன் வந்தால் என்னென்ன செய்வது என்று கற்பனையில் மூழ்கியிருந்தது அவனது நைந்துபோன உள்ளம். 

‘மகனைச் சியாமில் விட்டு வந்து ஓர் ஆண்டுக்கு மேலாகி விட்டது. முன் இருந்ததைவிட இப்போது கொஞ்சம் வளர்ந்திருப்பான். மீசை கூட முளைத்திருக்கும். என் அப்பாவுக்கு நானும் ஒரே மகன்; எனக்கும் முருகன் ஒரே மகன். அவனுக்கு நல்ல ஒரு பெண்ணாகப் பார்த்து விரைவில் திருமணம் செய்துவைக்க வேண்டும். அது வயிற்றில் ஒரு குழந்தை பிறந்தால்தான், என் குடும்பம் வளரமுடியும். என் குடும்பம் என் காலத்தோடு முடிவடைந்துவிடக் கூடாது. அது வாழையடி வாழையாக வளரவேண்டும். மகனுக்கு முதலில் பெண் குழந்தை பிறந்தால் செல்லம்மா என்று பெயர் வைக்கவேண்டும்; ஆண் குழந்தை பிறந்தால் செல்லப்பா என்று பெயர் வைக்க வேண்டும். என்னைப்போலவே என் மகனுக்கும் முதலில் ஆண்குழந்தைதான் பிறக்கும்!’ என்று கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த முத்துசாமிக் கிழவனின் கையிலிருந்த மண்வெட்டிக்கணை “டொக்” என்று கீழே விழுந்தது. அதைத் தொடர்ந்து மெல்லிய குறட்டை ஒலி எழுந்தது.

“குரா!”

இடியோசைபோல் எழுந்த அதட்டலைக் கேட்டுத் திடுக்கிட்டு விழித்தான் முத்துசாமிக் கிழவன். கிழவனுக்கு முன் அரக்கனைப்போல் கோபத்தால் முகம் சிவக்கப் பதற்றத்துடன் நின்று கொண்டிருந்தான் ஒரு ஜப்பான்காரன். இடுப்பில் தொங்கிய நீண்ட உடைவாள் தரையைத் தொட்டுக்கொண்டிருந்தது. 

‘சனியன்’ செருகிய துப்பாக்கியைக் கையில் பிடித்திருந்தான்.  அவனைக் கண்டவுடன் முத்துசாமிக் கிழவனின் உடம்பெல்லாம் ஆட்டங்கண்டுவிட்டது. நடுங்கியபடியே கீழே இறங்கினான்; தரையில் விழுந்துகிடந்த மண்வெட்டிக் கணையைக் குனிந்து எடுத்தான். அவன் கரத்தில் அது தள்ளாத கிழவன் தலைபோல் ஆடிக் கொண்டிருந்தது. ஜப்பான்காரன் ஓர் அடி முன் எடுத்துவைத்தான். 

“குரா, நனி ஓ நசாய் மாசுகா?” (ஏய், என்ன செய்து கொண்டிருக்கிறாய்?) என்று கத்திக்கொண்டே கன்னத்தில் ஓர் அறைவிட்டான். அந்த ஓர் அறையிலிலேயே தட்டுத்தடுமாறி மூங்கில் தட்டியில் போய் மோதி விழுந்தான் கிழவன். அவன் கிழவனானதால் ஓர் அறையோடு விட்டான். வாலிபனாய் இருந்திருந்தால், அவன் கதி அப்போதே முடிந்திருக்கும். ஜப்பான்காரன் மேலும் ஓர் அதட்டல் போட்டுவிட்டுக் கம்பியில் மாட்டியிருந்த லாந்தரை எடுத்துக்கொண்டு திறந்துகிடந்த கேட்டின் வழியே வெளியே ஓடினான். 

ஜப்பான்காரன் அங்கே வந்ததும், அவனை அடித்ததன் காரணமும் அப்போதுதான் கிழவனுக்குக் கொஞ்சம் புரிந்தது. கற்பனையில் மிதந்த அவன் 

கண்ணயர்ந்த சமயத்தில் யாரோ ஒருவன் பூட்டாதிருந்த கேட்டின் வழியே தப்பியோடியிருக்கின்றான். அவனைத் துரத்திக் கொண்டுதான் ஜப்பான்காரனும் ஓடிவந்திருக்கிறான். 

தூங்கியதால் திருடனைத் தப்பியோடவிட்ட தனக்குப் பொழுது விடிந்தால் என்ன தண்டனை கிடைக்குமோ என்றஞ்சிக் கொண்டே, கையில் மண்வெட்டிக் கணையை எடுத்துக்கொண்டு ஜப்பான்காரன் பின் லாந்தர் வெளிச்சத்தைப் பார்த்துக் கொண்டே ஓடினான். ஜப்பான்காரன் அடித்த அடியின் மயக்கம் கிழவனுக்கு இன்னும் தெளியவில்லை. கிழவன் அந்த இருட்டில் சிறிது தூரம் ஓடினான். ஓடியவேகத்தில் தடாலென்று எதிலோ மோதிக் கொண்டு கீழே சாய்ந்தான்.

பொழுதுவிடிந்தது. சுற்றுவேலிக்கு அப்பால் சிறிது தூரத்தில் உள்ள ‘கொங்சி’ தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. காய்ந்த அத்தாப்பு ஓலைகளால் ஆன குடிசைகளாதலால் சடசடாரென்று  சுடர்விட்டு எரிந்தது. கொங்சி பற்றி எரிகிறதே என்றெண்ணி அதை அணைக்க ஓடியவர்களை ஜப்பான்காரன் தடுத்து நிறுத்தினான். 

இரவு தப்பியோடிய எதிரி ஒருவன் அந்தக் ‘கொங்சி”யில் ஒளிந்திருக்கிறான். அவன் ஜப்பான்காரனிடம் அகப்படவில்லை. ஆகவே அந்தச் சீன கொங்சி முழுவதற்குமே நெருப்பு வைத்துவிட்டான் ஜப்பான்காரன். ஒருவனுக்காகப் பிள்ளைகுட்டிகள் நிரம்பிய அந்தச் சீனர் கொங்சியே பற்றி எரிகிறது என்பதை அவர்கள் அறிந்து கொள்ள அதிக நேரம் ஆகவில்லை. காவல் கொட்டகைக்குச் சிறிது தூரத்தில் மரத்தடியில் யாரோ விழுந்துகிடப்பதுபோல் தோன்றியது. சிலர் அதைப் பார்க்கச் சென்றனர். அங்கு முத்துசாமிக் கிழவனின் சடலம் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டனர். சடலத்தின் மீது ஒரு சாக்கைக் கொண்டுவந்து போர்த்தினான் அப்துல்லா. “பாவம் கிழவன்! நான்தானே இரவு பதினொரு மணிக்குக் கிழவனை இங்கு அனுப்பினேன்” என்று கூறிக் கொண்டே கண்ணில் அரும்பிய நீரைத் துடைத்துக் கொண்டான் அப்துல்லா. 

முத்துசாமிக் கிழவன், காலை எட்டு மணிக்குச் சியாமிலிருந்து திரும்பி வரப்போகும் மகனையோ அவனுக்குப் பிறக்கப்போகும் செல்லப் பேரனையோ பார்க்காமலேயே இந்த உலகத்தைவிட்டு மறைந்தான். திரைகடலோடி திரவியம் தேட வந்தவனல்லவா அவன், இந்த இருண்ட உலகில்! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *