Venmanal

‘அந்தக் காலத்திலே எங்கப்பாவுக்கு ஒரு பெரிய கடை இருந்துச்சு. ரெண்டு குதிரை பூட்டின வண்டியிலே அவரு ‘ஜம் ஜம்முன்னு’ தெருவிலே வர்ரப்போ ஒரு பய நிமிர்ந்து பார்க்க மாட்டான். வெள்ளக்காரன் கூட சலாம் வைப்பான்.’ காய்ந்த வெற்றிலையாகி விட்ட முகத்தில் இடுங்கிப் போயிருந்த கண்களில் ஒளி மின்ன பெருமாள் கிழவன் பேசினான். கடைவாய் வழியாக வெற்றிலை எச்சில் ஓடியது. அதை ஒருமுறை கையால் அழுந்தத் துடைத்த பொழுது மீண்டும் காயம்பட்ட இடத்தில் இரத்தம் பீறிடுவது போல் வெற்றிலை எச்சில் பீறிட்டுக் கொண்டு கிளம்பியது.

 

பெருமாள் கிழவன் முன்தாளில் மடித்து வைக்கப் பட்டிருந்த வெற்றிலைப் பாக்கில் தனது முழுக்கவனத்தையும் செலுத்தியவாறு ‘அந்தக் காலத்திலே எங்கப்பாவுக்கு ஒரு பெரிய கடை இருந்த கதையை’ ஆயிரத்து நாற்பத்து எட்டாவது தடவையாக பெருமாள் கிழவனிடமிருந்து கேட்டுக் கொண்டிருந்தான் சாமிக்கண்ணு. அந்த நேரத்தில் ஆயிரத்து நாற்பத்து எட்டாவது தடவையாக சாமிக்கண்ணுக்குக் கிழவனிடம் ஓசி வெற்றிலை தேவைப்பட்டது. பெருமாள் கிழவனிடம் ஓசி வெற்றிலை போடவரும் சமயமெல்லாம் ‘அந்தக் காலத்திலே எங்கப்பாவுக்கு ஒரு பெரிய கடை இருந்த கதை’ யையும் சேர்த்தே சாமிக்கண்ணு அனுபவித்து வந்தான். அந்தக் கதையைக் கேட்பதால் சாமிக்கண்ணுக்கு ஒன்றும் நட்டமில்லை. ஒரு  வாய்க்குக் காரமான ஊர்ப் புகையிலையுடன் கூடிய வெற்றிலையைக் கிழவனிடமிருந்து வாங்கிப் போட்டுக் கொள்வதின் மூலம் எல்லா நட்டமுமே அதில் அடங்கி ஒரு லாபத்தையும் அவனுக்கு ஏற்படுத்தி விடுகின்றது. 

 

சாமிக்கண்ணு ‘பொசு’க்கென்று எழுந்து ‘அப்போ நா போயிட்டு வர்றேன்’ என்று சொல்லிவிட்டுப் பக்கத்தில் இருந்த தனது வீட்டுக்குள் நுழைந்து விட்டான். 

 

‘டக் டக் டக்’ குரலில் வெற்றிலையைப் போட்டுப் பெருமாள் கிழவன் இடிக்கிறான். இரவில் அமைதி யைக் கிழித்துக்கொண்டு உரலிடிக்கும் ஒலி அந்த மணல்மேட்டு வட்டாரம் முழுதும் கேட்கிறது. கிழவனின் ‘அந்தக் காலத்திலே’ கதையைப் போலவே அவனுடைய வெற்றிலை இடிக்கும் ஓசையும் அந்த வட்டாரத்தில் பிரசித்தமானது. 

 

பெருமாள் கிழவன் தனிக்கட்டை. அவன் முதன் முதலில் அந்த மணல்மேட்டில் குடிசை போட்ட பிறகு தான் மற்றவர்கள் வீடு கட்ட ஆரம்பித்தார்கள். அந்த மணல்மேடு முன்பு ஈயம் எடுக்கும் இடமாக இருந்தது. அந்த மண்ணில் இருந்த ஈயமெல்லாம் எடுக்கப்பட்டு சுத்தமாகக் கழுவப்பட்டுவிட்டது. அந்த மண்ணில் கிழவன் எதை எதையோ போட்டுப் பயிர் செய்தான். ஒன்றும் சரியாக வரவில்லை. அந்த மண்ணில் இருந்த சத்தெல்லாம் கழுவப்பட்டுவிட்டது. அது வெறும் மணல் பிரதேசமாகக் கிடந்தபொழுது பெருமாள் கிழவன் ஒரு சிறிய குடிசையை அதில் கட்டினான். அதன் பிறகு பலர் அந்தப் பிரதேசத்தில் வந்து குடியேறிவிட்டார்கள். 

 

ஒன்று என்னும் எண் எப்படி காலம் காலமாகத் தோன்றியதிலிருந்து தனியாக பிரமச்சாரியாக இருக்கிறதோ அதேபோல பிரமச்சாரியாகவே பெருமாள் கிழவன் காலத்தைக் கடத்திவிட்டான். பெருமாள் கிழவன் முன்பு ஒரு கடையில் ‘எடு பிடி’ வேலை செய்து கொண்டிருந்தான். வயதாகிவிட்ட பிறகு அதைச் செய்ய முடியவில்லை. கையில் கொஞ்சம் பணம் தேங்கியிருந்தது. அதைக் குறைந்த வட்டிக்குக் ‘கொடுத்து வாங்கி’க் காலத்தைக் கடத்திக் கொண் டிருந்தான். கிழவன் இந்த வயதிலும் யாரிடமும் போய் கைநீட்டிக் கொண்டு நின்றதில்லை. அதுவே அவனுக்கு இருந்த பெருமை. ஆனால், அதையெல்லாம் அவன் பெருமையாகக் கருதியதேயில்லை. 

 

கிழவன் பிறந்தது இடுப்பில் தங்க அரைஞாண் கயிறுடனும் காதில் வைரக்கடுக்கனுடனும். வளர்ந்தது எல்லாம்  ஊர் மண்ணில்தான். அப்பொழுது பெருமாள் கிழவனின் தகப்பனுக்குப் பெரிய கடையும் நிலம் நீச்சல் என்று சொத்தும் இருந்தது. அந்தக் காலத்தில் இரண்டு குதிரை பூட்டிய வண்டியில் பெருமாள் கிழவனின் தகப்பன் வைரக்கடுக்கன் காதில் மின்னவரும் அழகே பெரிய அழகுதான்! வீதி முழுதும் நிறைந்து நிற்பதுபோல் ஓர் அழகு! வியாபாரத்தில் போய்விட்ட பிறகு நட்டம் ஏற்பட்டு எல்லாமே பெருமாளின் தகப்பனை ஊரில் காணவேயில்லை. சிலர் மலாயாவுக்கு கப்பலேறி விட்டதாகச் சொன்னார்கள். அதை நம்பி, பெருமாளும் தனது தாயுடன் தகப்பனைத் தேடி மலாயா வந்தான். இங்கே வந்து எங்கே தேடுவது? கடைசியில் அதே ஏக்கத்தில் தாய் கண்ணை மூடினாள். பெருமாள் தனியனானான். எப்படி எப்படியோ பிழைத்து இப்பொழுது எழுபது வயதைத் தாண்டி விட்டான். 

 

‘டக் டக்’ வெற்றிலை இடிக்கும் ஒலி. கிழவன் தனது பழைய சிந்தனைகளில் வெற்றிலையை இடித்துக் கொண்டிருக்கிறான். கிழவன் எத்தனை மணிக்குத் தூங்கி எத்தனை மணிக்கு எழுந்திருப்பான் என்று யாருக்கும் தெரியாது. இரவு வெகுநேரம் வரையிலும் வெற்றிலை இடிக்கும் ஒலி கேட்டுக்கொண்டே  இருக்கும். காலையில் எவ்வளவு சீக்கிரம் எழுந்து பார்த்தாலும் வாசலில் உட்கார்ந்து வெற்றிலை இடித்துக் கொண்டிருப்பான். 

 

பக்கத்து வீட்டில் சாமிக்கண்ணுவின் மகன் சுப்பிரமணியம் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான். சுப்பிரமணியம் ‘சீனியர் கேம்பிரிட்ஜ்’ படித்துவிட்டு டவுனில் வேலை செய்து கொண்டிருந்தான். அவனுக்கு எப்பொழுதும் பெருமாள் கிழவனின் வெற்றிலை இடிக்கும் ஓசைமீது ஒரு வெறுப்பு. படிக்கும்பொழுதும் அல்லது மேட்டுக் குழந்தைகளுக்கு ‘இரவு கிளாஸ்’ வைத்துப் படித்துக் கொடுக்கும்பொழுதும் கிழவனின் வெற்றிலை இடிக்கும் ஓசை மிகுந்த இடைஞ்சலாக இருக்கும். இதனாலேயே கிழவனுக்கும் சுப்ரமணியத்துக்கும் பலமுறை மோதல் வந்துள்ளது. ஆனால் சாமிக்கண்ணு இதிலெல்லாம் பட்டுக்கொள்ள மாட்டான். அவனுக்கு வேண்டியதெல்லாம் வாய்க்கு ‘ஓசி’ வெற்றிலைதானே! 

 

‘டக், டக், டக்’ வெற்றிலை இடிக்கும் ஓசை வேகமாகக் கேட்டது. சுப்பிரமணியத்தால் பொறுக்க முடியவில்லை. வீட்டைவிட்டு வேகமாக வெளியே வந்தான். 

 

‘“ஏய், தாத்தா! ஏன் இப்படி ராத்திரி பூரா டக், டக், டக்குன்னு இடிச்சிக்கிட்டு இருக்கே. மனுசன் படிக்கிறது தூங்குறது இல்லே?” படபட வென்று சுப்பிரமணியன் கொட்டினான். 

 

“டேய் சுப்பிரமணியா, ஏன்டா கத்துறே? நான் ஒன் வீட்டிலே வந்தா சத்தம் போட்டேன். நான் என் வீட்டிலே எதையுஞ் செய்வேன்! படிப்பு படிக்கிறானாம் பெரிய படிப்பு! அந்தக் காலத்திலே எங்க ஊரு வாத்தியாரு பாடம் சொல்லித் தருவாரு பாரு! இன்னிக்கெல்லாம் கேட்டுக்கிட்டே இருக்கலாம்டா! ராமாயணம் சொன்னார்னா விடியறது தெரியாது..” 

 

“நீயும் ஒன் பாடமும்! பேசாம போய் கதவைச் சாத்திக்க. நான் படிக்கணும்.” சுப்பிரமணியம் வந்த வேகத்திலேயே திரும்பிவிட்டான்.

 

பெருமாள் கிழவனுக்கு மிகுந்த எரிச்சலாகிவிட்டது. தனது கதையை எவனும் சரிவரக் கேட்கமாட்டேன்கின்றான்களே… என்ற வருத்தம் அவனுக்கு. ‘உம்… என் கதையைக் கேட்க எவனுக்கு லாயக்கு இருக்கு…! அந்தக் காலத்திலே பொறந்தவன்னா அதோட அருமை தெரியும்.’ 

 

மறுநாள் காலை. 

 

சுப்பிரமணியம் காலையில் வேலைக்குக் கிளம்பத் தனது மோட்டார் சைக்கிளை வெளியே எடுத்து வைத்து ‘ஸ்டாட்’ செய்து சிறிதுநேரம் ‘இன்ஜினை’ச் சூடாக்கினான். ஒரே‘படா படா’ சத்தம். புகைமயம். 

 

“மோட்டார் சைக்கிள் ஓட்டுறான்களாம் மோட்டார் சைக்கிள்! அந்தக் காலத்திலே இந்த எழவெல்லாம் ஏது? எங்கப்பா வைரக்கடுக்கன் காதிலே மின்ன ரெண்டு குதிரை பூட்டின வண்டியிலே வந்தார்னா தெருவே கூடிப் பார்க்குமே! அந்த அழகு என்ன; கெம்பீரம் என்ன? இன்னிக்கு முடியுமா? அந்தக் காலத்துலே கார் ஏது; லோரி ஏது! ஆனா அப்பவே எங்கப்பா ரெண்டு குதிரை பூட்டின வண்டி வச்சிருந்தாரு. வெள்ளெக்காரன்கூட நடந்து போகும்போது எங்கப்பா குதிரை வண்டியிலே போவாரு! வெள்ளெக்காரன் சலாம் வைப்பான். அதுபோல இவன்களாலே முடியுமா?’ பெருமாள் கிழவன் அந்த மோட்டார் சைக்கிள் சத்தத்தில் தனது குரல் கேட்க வேண்டுமென்பதற்காகச் சற்று உரக்கவே பேசினான். சுப்பிரமணியத்தால் கிழவனின் கிண்டல் பேச்சை பொறுக்க முடியலில்லை. 

 

‘பட்டென்று மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு என்ஜினையும் அடைத்துவிட்டு, வேகமாகக் கிழவனை நோக்கி வந்தான் சுப்பிரமணியம்.

 

அவன் வந்த வேகத்தைப் பார்த்து சாமிக்கண்ணுகூட சற்று அயர்ந்து விட்டான்.

 

“பெருமாள் தாத்தா, அந்தக் காலத்திலே உங்க அப்பா பெரிய கடையும், ரெண்டு குதிரை பூட்டின வண்டியும் வச்சிருந்ததாக நான் பொறந்ததிலேயிருந்து சொல்லிக்கிட்டு இருக்கியே. இப்போ, நீ ஓர் ஓட்டச் சைக்கிளாவது வைச்சிருக்கியா? அந்தக் காலத்துப் பெருமை ஒங்கப்பா பெருமை. இப்போ ஒன் பெருமை என்ன; வெறும் வெத்திலை இடிக்கிறது தானே? அதோ பாத்தியா வெள்ளை மணலு, அதிலே இப்போ ஒண்ணுமே இல்லே! எல்லாத்தியும் கழுவி எடுத்தாச்சு. முன்னே கப்பலாடுறதுக்கு முன்னே அதிலே எல்லாம் இருந்துச்சு. இப்போ அதிலேயும் தோண்டித் தோண்டி எடுத்தாச்சு! அது வெறும் வெள்ளை மணலு! நீயும் அப்படித்தான் தெரியுமா வெறும் மணலு! அதுவும் சுத்தமா கழுவப்பட்ட ஈய லெம்பத்து வெள்ளை மணலு!” சுப்பிரமணியம் கை நீட்டி நீட்டிப் பேசி விட்டுத் தனது மோட்டார் சைக்கிளில் ஏறிக்கொண்டு போய்விட்டான். 

 

மோட்டார் சைக்கிளின் சத்தமும் சுப்பிரமணியத்தின் இடிக்குரலும் ஓய்ந்த பிறகு அந்த இடம் மழை பெய்து ஓய்ந்தது போல் இருந்தது. 

 

மோட்டார் சைக்கிளில் இருந்து வெளியேறிய புகை சுருள் சுருளாக அந்த இடத்தில் அமைதியாகச் சுற்றிக் கொண்டிருந்தது. மோட்டார் சைக்கிள் ஏற்படுத்திய பெட்ரோலின் நெடி பெருமாள் கிழவனின் மூக்கைத் துளைத்தது. அவன் ஈ விரட்டுவது போல் புகையை அருகில் நெருங்க விடாமல் கையை வீசினான். என்றாலும் அதன் நெடி இறங்கவில்லை. 

 

பெருமாள் கிழவனின் கைகள் வெற்றிலை இடிப்பதை நிறுத்திவிட்டன. உரலில் வெற்றிலை பாதி இடிபட்டும் படாததுமாக அப்படியே இருந்தது. தூரத்தே கொட்டிக் குவிக்கப்பட்டிருந்த வெண்மணலில் அவனின் பார்வை அழுந்திக் கிடந்தது; 

 

‘நான் வெள்ளை மணலா? எனக்கு ஒரு பெருமையும் இல்லையா? எங்கப்பா குதிரை வண்டியும் கடையும் வைச்சிருந்தது எனக்குப் பெருமை இல்லையா?’ கிழவனின் சிந்தனைகள் சுருள் சுருளாக அந்த மோட்டார் சைக்கிளின் புகைபோல் மிதந்தன.

 

“நீ வெள்ளை மணல்” 

“நீ வெள்ளை மணல்!” 

“நீ வெள்ளை மணல்!” 

 

சுப்பிரமணியத்தின் குரல் அந்தக் குடிசை முழுவதும் ஓங்கி ஓங்கி ஒலித்தது. 

 

சாமிக்கண்ணு வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு கிழவனிடம் வந்து உட்கார்ந்தான். வெற்றிலைகள் இருந்த பொட்டலத்தை முன்னுக்கு இழுத்துவைத்துக் கொண்டு பாக்கை எடுத்துவாயில் போட்டு மென்றான்.

 

“என்ன,பையன் ஏதோ சொல்லிவிட்டுப் போறானே?” சாமிக் கண்ணுவின் வாயில் வெற்றிலைகள் ‘மடக் மடக்’கென்று அரைபட்டன. சாமிக்கண்ணுவின் வருகையால் பெருமாள் கிழவனின் சிந்தனை அறுபட்டது. 


கைகள் மீண்டும் இயங்க ஆரம்பித்தன. 

 

“டக் டக் டக்,” வெற்றிலைகள் இடிபட்டன. 

 

‘என்ன, பையன் ஏதோ சொல்லிட்டுப் போறானே” சாமிக்கண்ணு மீண்டும் தான் கேட்டதைத் திரும்பவும் கேட்டான்.

 

“கெடக்குறானுவ சின்னப் பயலுவ!அவனுக்கு என்ன தெரியும்?” பெருமாள் கிழவனின் பார்வை தூரத்தே தெரிந்த மணல் மேட்டிலிருந்து உரலுக்குத் தாவியது. 

 

சாமிக்கண்ணு புகையிலையை எடுத்து வாயில் திணித்தான். பெருமாள் கிழவன் உரலில் இருந்த வெற்றிலையை எடுத்து வாயில் போட்டுக் கொண்டே பேச ஆரம்பித்தான். 

 

“அந்தக் காலத்திலே எங்கப்பாவுக்கு…” 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *