சத்து ரிங்கிட் 

0
Satu Ringgit

ஃஃஃ

இப்போதெல்லாம் சேவல் கூவித்தான் பொழுது விடிய வேண்டும் என்பதில்லை. விருந்தினர் வேறு அடிக்கடி வந்துபோய்க் கொண்டிருப்பதால் தோட்டத்தில் இருந்த சேவற் கோழிகள் பாவம், கணிசமான அளவு குறைந்துவிட்டிருந்தன. கூவினால் எங்கே தாங்களும் இல்லாத நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற ஐயத்தால் எஞ்சியிருப்பவைகளும் கூவ மறந்துவிட்டன. அப்படியே கூவினாலும் நேரங்காலந் தெரியாமல் கூவி மறுநாள் வாசலில் வைத்து வெட்டப்பட வேண்டிய அபாய நிலை. 

வேலாயுதம் சேவற் கோழிகளையோ, அல்லது தனக்கு உதவியாக இருப்பதற்கு வைத்திருக்கும் அலாரத்தையோ என்றும் எதிர்பார்ப்பதே கிடையாது. மாலையில் முப்பது காசு என்பது, எண்பது காசுக்கு மேல் கூடிவிட்டாலுங்கூட, அதிகாலை நான்கு மணியானதும் அவரது குழி விழுந்த கண்கள் தன்னிச்சையாக மலரும். விழித்த கண்களோடு நீண்டதொரு கொட்டாவியை விட்டு, எலும்புந்தோலுமான தனது கைகளை உதறிவிட்டுத் தலைக்கு அருகில் வைத்திருக்கும் இரும்பாணியை எடுத்துத் தனது வீட்டின் முன் சட்டத்தில் கட்டித் தொங்க விடப்பட்டிருக்கும் தண்டவாளத் துண்டைக் கை ஓயும் வரையும், தனது தூக்கம் கலையும் வரையும் ‘டாங், டாங்’ என அடித்துவிட்டுப் பின், விட்டுவிட்டு நான்கு முறை அடித்துக் காலத்தையுங் காட்டிவிடுவார். 

கும்பகர்ணனாக இருந்தாலும் அந்தத் தண்டவாள மணி ஓசைக்குச் சற்று அதிர்ந்துதான் ஆகவேண்டும். வேலாயுதத்தின் மணியோசைக்குப் பின் தொடர்ந்து கங்காணிகள் அவரவர் கடமைகளில் ஈடுபட்டுவிட்டனர். அவரரவர் கணக்கு ஆட்களை எழுப்பி வேலைக்கு வருவோர், வராதாரைக் கண்டு கொண்டனர். வேலைக்குப் போக முடியாது திட்டி சொல்லி விட்டவர்களின் நிரைகளுக்குக் கெந்தியில் வெட்டுக்காரர்களை நியமித்து ஆகவேண்டும் அன்றும் பல கெந்தி வெட்டுக்காரர்களுக்கு வேலை.

இத்துணை ஆரவாரங்களுக்கிடையிலும் கல்யாணி தூங்கிக் கொண்டிருந்தாள். கல்யாணி அத்தோட்டத்து ஆயா. ஆதலால் எந்தக் கங்காணியும் அவ்வதிகாலை வேளையில் கல்யாணியைக் கண்டுகொள்வது கிடையாது. அதோடு தோட்டத்தில் “செக்ரோலில்” திட்டி போடாத ஒருவர் இந்த ஆயாதான். ஆதலால் கங்காணிகள் அந்த நேரத்தில் கல்யாணி அம்மாளை எழுப்பி தொந்தரவு கொடுப்பதும் இல்லை. 

தனது கணவர் இருந்த காலத்தில் நல்ல செல்வாக்குடன் இருந்தாள் கல்யாணி. பத்துப் பன்னிரண்டு உருப்படி மாடு கன்றுகளை வைத்திருந்தார்கள் எல்லாவற்றையும் விற்றுப் பணத்தை ஊருக்கு அனுப்பி வைத்த அவள் கணவர், ஊருக்குப் போய்ச் சேர முடியாது இந்த மண்ணிலேயே கொடுத்து வைத்து விட்டார். 

குடும்பத்தில் மூத்த பிள்ளைகளையெல்லாம் குடித்தனக்காரர்களாக்கி வெவ்வேறு தோட்டங்களில் தொழிலாளர்களாக்கி விட்டிருந்தாள். தனது கணவன் இறந்துபோன பிறகு எப்படியாவது தனது கடைகுட்டிப் பையனைக்  கடைத்தேற்றிவிடப் பாடுபட்டாள். தனது கணவன் எவ்வளவோ பாடுபட்டுப் படிக்க வைத்தும் “மூத்ததுகள்” மூளையுடன் படித்து முன்னேற முடியாது போய்விட்டனர். குடும்பத்தின் நற்பெயரைக் காக்க இந்தக் கடைக்குட்டிதான் முன்னேற வேண்டும். கல்யாணி அதற்காகப் பாடுபட்டாள். 

சட்டத்தில் மாட்டப்பட்டிருந்த சிமினி விளக்கு மங்கிய ஒளியுடன் எரிந்துகொண்டிருந்தது. கல்யாணியின் கடைசிப் பையன் அரசன். தான் கண்விழித்தபோது தனது மகன் இன்னும் படுக்கையில் இருந்தது கண்டு சற்றே அதிர்ந்துபோனாள் கல்யாணி. உடனே அவனை எழுப்பத் தொடங்கினாள். தூங்கிக் கொண்டிருந்தால் அல்லவோ எழுவதற்கு! 

“நான் முன்பே எழுந்துவிட்டேனம்மா” என்றான் 

“நல்லா விடிஞ்சிப் போச்சே! இன்னும் படுத்துக்கிட்டிருக்கிறியே. பஸ் வந்திடுமே, பள்ளிக்கூடம் போகலையாப்பா” என்று பதட்டத்துடன் கேட்டாள் கல்யாணி.

“இல்லேம்மா, நான் இன்னைக்குப் பள்ளிக்கூடம் போகலை. கோப்பி போட்டு வச்சிருக்கேன். குடிச்சிட்டு வேலைக்குப் போங்கம்மா” என்று தன் அம்மாவை வேலைக்கு அனுப்ப எண்ணினான் அரசன்.

“ஏம்பா! ஏன் பள்ளிக்கூடம் போகல?” 

“இன்னைக்குத் தேதி ஒண்ணும்மா. நேத்தோட பஸ் பாஸ் முடிஞ்சுப்போச்சு. இன்னைக்குப் பள்ளிக்கூடம் போகணும்னா, காசு கொடுத்துத்தான் போகணும் சொன்னாலும் அந்தக் கண்டக்டர் கேட்கமாட்டான். உங்க கையிலதான் காசு இல்லையே? அதனாலதான் இன்னைக்குப் பள்ளிக்கூடம் போகாம வீட்டில் தங்கிப் படிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்!” 

“என்னா! இன்னைக்குத் தேதி ஒன்னாச்சா? இந்த மாசம் முப்பத்தி ஒன்னுன்னுல்ல இருந்திட்டேன் தெரிஞ்சிருந்தா நேத்தே யாருகிட்டயாவது கேட்டு வாங்கி வச்சிருப்பேனேப்பா. ஏம்பா, நேத்தே என்கிட்ட சொல்லுல? ஒரு நாளைக்குப் பள்ளிக்கூடம் போகாட்டி புள்ளைக்கு எவ்வளவு படிப்புக் கெட்டுப் போகும்? சரி, சரி… எழுந்து சட்டை சிலுவாரைப் போட்டுக்கிட்டு பேக்குப் பையை எடுத்துத் தயாரா வெச்சிக்கிட்டிரு, இதோ ஓடியாந்துடறேன்” என்று தான் போர்த்திப் படுத்திருந்த அதே சேலையை மடித்து மேல் உடலைச் சுற்றியும் முக்காடு போட்டுக்கொண்டு, கையில் சிமினி விளக்குடன் கதவைத் திறந்து வெளியே கிளம்பிவிட்டாள்.

உணர்ச்சி உந்திய வேகத்தில் வெளிக் கிளம்பி வந்தவள் அப்போதுதான் எங்கே செல்வது, யாரைக் கேட்பது என்று எண்ணத் தொடங்குகிறாள் முன்னே பார்க்கிறாள், எதிர்வரிசை வீடுகளின் குசினிக் கதவுகள் திறக்கப்பட்டு. அவற்றின் ஊடே சிமினி விளக்குகளின் ஒளியும் அடுப்பில் எரிந்துகொண்டிருக்கும் விறகுக்கட்டடைகளின் ஒளியும் கூட தெருவில் பட்டை பட்டையாகப் படர்ந்திருந்தன. இவை தவிர்த்துக் காரிருள் எங்கும் சூழ்ந்திருந்தது. “சொய்ங்” என்ற ஓசை. முனியம்மாள் தோசை வார்த்துக்கொண்டிருக்கிறாள். காலையில் பசியாறுவதற்குத் தோசை சுட்டுச் சாப்பிடும் அளவிற்கு தகுதி வாய்க்கப்பட்ட குடும்பம் முனியம்மாளின் குடும்பம் கையில் ஒன்றிரண்டு வைத்திருக்கலாம். அந்த நம்பிக்கையாள் கல்யாணி அவள் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். 

காலைப் பனிக்காற்று கல்யாணியின் முகத்தைச் சில்லென்று கொடூரமாகத் தாக்கியது. குளிர்க்காற்று முகத்தில் தேங்கி நின்று குளிரை உண்டுபண்ணும் அளவிற்குக் கல்யாணியின் முகத்தில் சுருக்கங்களும் பள்ளங்களும் நிறைந்திருந்தன. தலையைச் சுற்றிப் போர்த்தியிருந்த போர்வை வலுவிழந்து விடுகின்றது. அவள் வாயில் வெற்றிலைக் காவியேறி எஞ்சியிருந்த கீழ்வாய்ப் பற்கள் மேல்வாய்ப் பற்களுடன் கடகடவென மோதிக் கொள்ளுகின்றன. குளிரின் கொடூரம் கல்யாணியை வாட்டியது. முனியம்மாள் வீட்டின் குசினிக் கதவை வந்தடைந்த கல்யாணி, குரல்கொடுக்கிறாள். 

“யாரது? ஆயாவா! என்ன ஆயா, குசினிப்பக்கமாக இந்த நேரத்தில?” என்று தேவையான வினாவை எழுப்பி வைத்தாள் முனியம்மாள்.

சுற்றி வளைத்து பேசி அக் காலை நேரத்தை வீணடிக்க விரும்பாத கல்யாணி நேரே விஷயத்திற்கு வந்தாள். “ஒரு வெள்ளியிருந்தா கொடு முனியமா, சம்பள வாசல்லியே திருப்பிக் கொடுத்துடறேன்” என்று தன்னிடம் ஆயாக் கொட்டகையில் ”ஆயா… பாலு” என்று கேட்டு ஏங்கி நிற்கும் குழந்தையைப் போன்று, ஏங்கி நின்றான் கல்யாணி. ஆனால் முனியம்மாள் அவளைப் போன்ற ஒரு நல்ல ஆயாவாக முடியாது என்பதை நிரூபிக்கத் தொடங்கிவிட்டாள். 

“எதுக்கு ஆயா இந்தக் கால நேரத்துல உனக்கு ஒரு வெள்ளி?” என்று சாதாரணமாகக் கேட்டாள் முனியம்மாள். கல்யாணியின் ஏக்கத்திற்கு ஆறுதல் அளிக்கும் விதத்தில் அவளது எந்தப் பாவங்களும் அமையவில்லை. சிறந்த காரணமாக இருந்தால் கொடுக்கலாம் என்பதற்காக முனியம்மாள் இப்படிக் கேட்டு வைக்கவில்லை; கொடுப்பதில்லை என்று பளிச்சென முடிவு செய்துவிட்டவள், உடனே இல்லை என்று சொல்லிவிட மனமில்லாதுதான் காரணத்தைக் கேட்டு வைத்தாள். 

“புள்ளைய பள்ளிக்கூடத்துக்கு அனுப்பணும் முனியம்மா. நேத்தோட மாசம் முடிஞ்சிப்போச்சாம், புள்ள இப்பத்தான் சொல்றான். இருந்தாக் கொடு முனியம்மா!” மீண்டும் கல்யாணியின் முகத்தில் அதே ஏக்கக் குறி. முனியம்மா தனது வெற்றிலை பாக்குப் பையைத் தேடிச் செல்வாள் என்று காத்திருந்தாள் கல்யாணி. ஆனால் முனியம்மாளோ, “எங்கிட்ட ஏது ஆயா ஒத்தக்காசு? இந்த மாசம் வேற என்னாத்தச் சம்பளத்தக் கொடுத்துப்புட்டானுங்க? கித்தா வெல கொறைஞ்சிப் போச்சாம். மலத்திட்டி வேற நாலாகிப் போச்சி. பண்டுக்காசுக்கும், சங்கத்துக்கும் வேற வெட்டிக்கிட்டானுங்க. இந்தப் பசங்க மாசம் ரெண்டு படத்தைக் காட்டி அதுக்கு வேற மூனு வெள்ளியை வாங்கிட்டானுங்க. நம்ப வூட்டிலியே ஒம்போது வெள்ளி சொளையா போச்சி. மிச்சத்தை வாங்கி சம்பள வாசலைத் தாண்டிவர முடியல. கடன்காரன் வந்து நிக்கிறான். அவன் போடற அநியாய வெலையில இப்ப தன்னக் கட்டத்தான் முடியுதா என்னா? சீனிய வேற கட்டி நாப்பத்தைந்து காசாக்கிட்டானுங்க. இந்த வூட்டுல ஒரு நாளைக்கு ஒரு கட்டி சீனி செலவாவுது” என்று இன்னும் தொடர்ந்து எதை எதையோ கிளற ஆரம்பித்தாள். 

கல்யாணிக்கு அவ்வளவு பொறுமையில்லை. முடிவு தெரிந்துவிட்டது. “சரி வர்றேன் முனியம்மா” என்று வாயெடுத்தாள் கல்யாணி. ஆனால் முனியம்மாள், “அப்படியும் சமாளிச்சி ரெண்டு வெள்ளிய முந்தானியில் முடிச்சித்தான் வெச்சிருந்தேன். அத எப்படியோ கண்டுபிடிச்சி எடுத்துக்கிட்டுப் போய் தண்ணிபோட்டு வந்திடுச்சி நம்ப வூட்டுல” என்று குறைபட்டுக் கொண்டாள். 

முனியம்மாள் தந்த முடிவு, தொட்டிலிலிருந்து நழுவிக் கீழே விழுந்து மண்டையடி பட்டுக் கதறும் குழந்தையின் துன்பத்தைக் கல்யாணிக்குக் கொடுத்தது. 

“இல்லாட்டிப் போவுது முனியம்மா” என்று விருட்டென விடைபெற்றுக்கொண்டு விரைந்தாள் கல்யாணி. அடுத்த கணம் அடுத்த வரிசை வீட்டுக் கதவொன்றைத் தட்டிக்கொண்டிருந்தாள். 

கதவைத் திறந்தவள் கமலம். முனியம்மாளைப் போன்று அதே ஆச்சர்யத்துடன் ஆயாவைப் பார்த்தவள் கேட்டாள், “என்ன ஆயா வேணும்?” என்று. 

“ஆராரோ, ஆரிரரோ” என்று ஆரம்பித்து ஒரே தாலாட்டைப் பலமுறை பாடி பாடி குழந்தைகளைத் தூங்க கல்யாணியின் வாயிலிருந்து முனியம்மாளிடம் கூறிய அதே வார்த்தைகள் மீண்டும் உதிர்ந்தன. கமலத்தின் வீட்டு வாசலில் நின்றுகொண்டிருக்கும் கல்யாணியின் மனம் மேலும் ஒரு ஏமாற்றத்தை எதிர்பார்க்காது ஏங்கி நின்றது. 

படுக்கையை விட்டு எழுந்த கையோடு வாயைக் கூடக் கொப்பளிக்காமல் வாய் நிறையப் போட்டுக் குழப்பிக்கொண்டிருந்த வெற்றிலைபாக்குச் சாற்றை இரு விரல்களை வாய்மீது வைத்து அழுத்தி வீட்டு வாசலில் நின்றபடி வீதியில் விருட்டென உமிழ்ந்தாள் கமலம். வீதியில் படர்ந்திருந்த மங்கலான சிமினி விளக்கின் ஒளியிலும் அவள் உமிழ்ந்த வெற்றிலைச் சாற்றின் சிவப்பு தெரிந்தது. முனியம்மாளைப் போன்று சுற்றி வளைந்து வராமல், வெற்றிலைச் சாற்றை விருட்டென உமிழ்ந்தது போலவே, “எங்கிட்டஏது ஆயா காசு” என்று ஆரம்பித்தாள். வைத்துக்கொண்டு இல்லை என்று தீர்க்கமாகச் சொல்லிச் சமாளிப்பதில் கமலம் கைதேர்ந்தவள் என்பது கல்யாணிக்குத் தெரியும் இருந்தாலும் அதிகாலையில் மனதில் சற்று தெளிவு இருக்கும் என்று எதிர்பார்த்துத்தான் கமலத்தைக் கேட்க வந்தாள்.

கமலம், “எங்கிட்ட ஏது ஆயா காசு?” என்று சொன்ன போது, சமயங்களில் தனது ஆயாக் கொட்டகைக்குப் பாலுக்காகக் குவளைகளைத் தூக்கிவரும் சிறுவர்களுக்கு, வாளியில் பாலை வைத்துக்கொண்டே “பால் இல்லை போ” என்று அவர்களை விரட்டியடிக்கும் தனது சொந்தச் செயல் நினைவுக்கு வந்தது. ஏமாந்து அங்கிருந்து நகர்ந்து போகும் அந்தச் சிறுவர்களின் மனம் படும் பாட்டைக் கல்யாணி அப்போது கமலத்தின் வாசலில் அனுபவித்துக்கொண்டிருந்தாள்.

கமலம் தொடர்ந்தாள்: “ஏன் ஆயா ஒனக்கு இந்தக் கஷடம்? ஒனக்குக் கெடைக்கிற ஐம்பது அறுபது வெள்ளியை, உம் புள்ளைய கோலாலம்பூருக்கு அனுப்பி எத்தனக் காலத்துக்குத்தான் படிக்கவைக்கப் போற? அப்படித்தான் இந்தத் தோட்டத்துல எதுதான் ஒழுங்காப் படிச்சி வாத்தியாரா, கெராணியா வந்து வேலை பாக்குதுங்க? உன் புள்ள மட்டும் என்னா பி.ஏ. படிச்சி உத்தியோகம் பார்க்கப் போறான்? பேசாமப் போயி நம்ம ஐயாக்கிட்டச் சொல்லி தோட்டத்துல ஏதாவது பையனுக்கு ஒரு வேலை வாங்கிக் கொடு. ஒனக்கும் ஒத்தாசையா இருக்கும். இத்தனை கஷ்டம் இருக்காது. அப்புறம் நாலு பேத்துக்கு நீ நாலு கொடுத்து உதவலாம்.” 

கல்யாணிக்கு என்ன மறுமொழி கூறுவதென்று தெரியவில்லை. தனது ஆயாக் கொட்டகையில் தலைக்கு மேல் அடிக்கப்பட்டிருக்கும் தொட்டிற் சட்டங்களில் ஒன்று முறிந்து தனது தலையில் தாக்கியது போன்ற உணர்வில் உள்ளத்தில் பொருமிக் கொண்டிருந்தாள் கல்யாணி. கமலத்தின் பொறாமை உள்ளத்தைத் தெரிந்துகொண்ட கல்யாணி, அன்று மாலை எப்படியாவது கமலத்தின் காலடி மண்ணை எடுத்துத் தன் பிள்ளையின் தலையைச் சுற்றி, திருஷ்டி சுற்றிப்போட உறுதி எடுத்துக்கொண்டு, “இல்லாட்டிப் பரவாயில்ல கமலம், நான் வர்றேன்” என்று கூறிவிட்டு நடக்க ஆரம்பித்துவிட்டாள்.

தனது கையில் அவள் ஏந்திச் சென்ற சிமினி விளக்கில் எண்ணை இல்லை. ஒளி குறைந்து வந்தது எந்த வினாடியும் அணைந்துவிடலாம். அவளது உள்ளத்தில் எழுந்த நம்பிக்கை ஒளியின் நிலையும் அப்படியாகத்தான் இருந்தது. தன் பிள்ளையை அன்று அவளது எண்ணம் ஈடேறாமல் போய்விடுமோ என்று பயந்தாள் கல்யாணி. ஏதாவது வேறு இடத்தில் முயற்சி செய்து பார்க்க விரும்பினாள். 

ஆமாம்! இபுறாகிம் சற்று வசதியானவர். தோட்டத்தில் மாடு கன்று வைத்திருப்பவர்களில் அவரும் ஒருவர் அவரது பிள்ளைகளும் பட்டணத்தில் படிக்கின்றனர். கையில் எதாவது பணம் வைத்திருக்கலாம். 

பசியால் வாடிய குழந்தை தனது பசி தீர்க்க, ஆயா பால் கலக்கிக்கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டு ஒருவித ஆறுதலில் கிள்ளும் பசியையும் ஏற்றுக்கொண்டு, நம்பிக்கையில் காத்துக்கொண்டிருக்குமே அதுபோன்ற ஒரு நம்பிக்கையில் இபுறாகிம் வீட்டை அடைந்தாள் கல்யாணி. 

அப்போதுதான் இபுறாகிம் மாட்டுக் கொட்டகையில் இருந்து பால் வாளியுடன் திரும்பி வந்துசேர்ந்தார். 

கல்யாணியைக் கண்ட அவருக்கும் ஆச்சரியம்தான். “என்ன ஆயா இந்த நேரத்தில் இப்படி முக்காடோடே வெளியே கிளம்பி வந்திட்டீங்க?” அவர் கையில் தாங்கி வந்த பால் போன்ற மனம் அவருக்கு உண்டு என்பது ஆயாவுக்குத் தெரியும். இருந்தால் இல்லை எனாமல் கொடுத்துவிடுவார். எந்தவொரு தயக்கமுமின்றி ஆயா காரணத்தைக் கூறிவிட்டாள். இதில் வெட்கத்திற்கோ தயக்கத்திற்கோ பொருள் இல்லை. இம்மாதிரி சிரமம் ஏற்படும் நேரங்களில் பல முறைகளில் கல்யாணிக்கு இபுறாகிம் உதவி புரிந்திருக்கிறார். ஒரு தோட்டப்புறத் தாய் தனது மகனின் கல்வியின் முன்னேற்றத்திற்குக் உணர்வோடு கடன் பட்டும் பாடுபட்டு வருவதை அறிந்தவர் இபுறாகிம். ஆனால் கல்யாணியை அந்தக் காலைக் குளிரில் இப்படி வெளியே ஆச்சர்யப்பட்டுத்தான் போனார்.

காரணம் கேட்ட இபுறாகிம் மேலும் அதிர்ந்துபோனார். திரும்ப வந்து, “ஐயோ ஆயா நேத்தே வந்திருக்கக்கூடாதா? நேத்துதான் போய் நாம் நம்பப் பையனுக்குப் பஸ் பாஸ் எடுத்துக்கிட்டு மிச்சமிருந்த காசுக்கு வீட்டுக்குக் கொஞ்சம் சாமான் வாங்கி வந்திட்டன்” என்றார். ஆயாவுக்கு தெரியும், உண்மையில் அவரிடம் பணம் இல்லை என்று. 

ஆயா கலக்கிய பால் சூடு தணியாமல் போத்தலில் ஊற்றப்பட்டு, போத்தல் பட்டென்று வெடித்துவிடும்போது பாலுக்காகக் காத்திருக்கும் குழந்தை படும் துயரம் கல்யாணியை ஆட்கொண்டுவிட்டது. 

“இப்ப என்ன செய்யுறது ஆயா?” இன்னைக்குச் சாயங்காலமா பாத்து வாங்கித் தர்றேன் பையன் நாளைக்குப் பள்ளிக் கூடத்துக்கு அனுப்பலாம் ஒரு நாள்தானே! வீட்டுல இருந்துட்டுப் போகட்டும்” என்று ஆறுதல் கூறினார் இபுறாகிம். 

ஆனால் கல்யாணியின் மனம், ஒரு நாளைக்குப் பள்ளிக் கூடம் போகாட்டி புள்ளைக்கு எவ்வளவு படிப்புக் கெட்டுப் போகும்’ என்று மீண்டும் இடித்துரைத்தது. பணம் கிடைக்கவில்லையே! வேறு என்னதான் செய்ய முடியும்? இப்படிப்பட்ட இல்லாத நிலையில் பலமுறை துன்பப்ட்டுக் கடைசியில் எப்படியும் தன் பிள்ளையைப் பள்ளிக்கூடம் அனுப்பி வைத்து வந்த கல்யாணியால் அன்று தன் மகனைப் பள்ளிக்கு அனுப்ப முடியாது போய்விட்ட நிலையில் சோர்ந்துபோனாள். வீட்டை விட்டுக் கிளம்பியபோது இருந்த வேகமும், நம்பிக்கையும் எல்லாமும் தளர்ந்துவிட்டது. கையில் தாங்கி வந்த சிமின் விளக்கும் அணைந்துவிட்டது. இருந்தாலும் காலையிருளில் அவளது கால்கள் தன்னிச்சையாகப் பாதை தேடி நடந்தன. தத்தித் தத்தி நடந்த கால்கள் இன்று தள்ளாடித் தள்ளாடி நடக்கின்ற வரையில் அந்தத் தோட்டத்துப் பாதைகளில் நடந்து அனுபவப் பட்டவை அல்லவா! கல்யாணி வீடு நோக்கி நடக்கின்றாள்.
 
“அந்த மனுசன் மகராசனாப் போய்ட்டாரு. இப்ப நாங்க படறபாட்ட பாக்குறதுக்கு அவரு இல்ல, அவரு இருந்தா இந்த நெலம வருமா? வீடு வீடாப் போயி வாசக் கதவையும், குசினிக் கதவையும் தட்டி பிச்சை கேக்குற மாதிரி கடன் கேட்டுப் புள்ளய படிக்க வைக்கிற இந்தச் சங்கடம் நாலு காசு வாங்கிக் கஞ்சி வச்சிக் குடிச்சதுங்கெல்லாம் இன்னைக்குத் தோட்டத்துல எப்படி எப்படியோ இருக்கு நாமதான் கெட்டுப்போயிட்டோம். இருந்த நகைபகை எல்லாத்தியுங்கூட காசாக்கிக் கடைசிப் புள்ளய படிக்க வெச்சாச்சி. இப்பக் கழுத்தில மூக்கில கூட ஒண்ணுமில்ல. கடசி வருசம்னு புள்ள சொன்னான். இந்த ஒரு வருசம் மட்டும் எப்படியாவது சமாளிச்சிட்டா, பிறகு அவனுக்கு ஒரு வழியக் காட்டிவிட்டாகிவிடும். அவன் சம்பாதிச்சி எனக்குப் போடவேணாம். அவன் பிற்காலத்திலே அவன் பெண்ஜாதி புள்ளைங்களோட நல்லா இருந்தா போதும். 

இன்னைக்குப் புள்ளைய பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப முடியலியே; இந்த முனியாண்டி சாமிக்குக்கூட கொஞ்சங் கருண இல்ல. என்னா பண்ணுறது?” என்று எதை எதையோ மனத்தில் புலம்பிக்கொண்டு, மனத்தில் ஏற்பட்டுவிட்ட தோல்வியின் மயக்கத்தில் பிதற்றிக்கொண்டு வீட்டை நோக்கி நடக்கின்றாள் கல்யாணி. 

முன்பு, “மேக்கடை” வீடாக இருந்த பழைய வீட்டை உடைத்துவிட்டு டிரைவர்களுக்கும், கப்பலாவுக்கும் கல் வீடு கட்டியிருந்தார்கள். அந்த வரிசையில் தொங்கலில் இருந்த வந்த சீன மொழி கல்யாணியைத் தடுத்து நிறுத்தியது அவளது பிதற்றலும் அத்தோடு நின்றது. ஏதோ ஒருவித புத்துணர்வு. உடைந்துவிட்ட போத்தலுக்கு மாற்றுப் போத்தல் கிடைத்தபின் மீண்டும் தனக்குப் பால் கலக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தையின் தெம்பில் அந்தச் சீனர் வீட்டு வாசலில் வந்து நின்றாள் கல்யாணி. 

கதவைத் தட்டியவாறு, “கப்பலா… கப்பலா” என்று குரல் கொடுத்தாள். 

ஆ செங் கப்பலா தோட்டத்தில் மிகவும் முக்கியமானவர். தன் இனக்காரர் வாங்கிவிட்ட தோட்டத்தில் அவருக்கு நல்ல செல்வாக்கு. ஆயாக் கொட்டகையில் கல்யாணியின் ஆட்சியைப் போன்றது அத்தோட்டத்தில் அவரது ஆட்சி. கப்பலா கதவைத் திறந்து அங்கே ஆயாவைப் பார்த்து, “ஓ.. ஆயா… அப்பா மவ்!” (Oh Aya Apa Mau – ஓ ஆயா உனக்கு என்ன வேண்டும்) என்று வினவினார். 

கல்யாணிக்குச் சரியான சோதனை. தேசியமொழிச் சோதனையில் இன்று குடியுரிமை பெறுவதற்கு நம்மவர் படும் பாட்டை அங்கு அனுபவித்தாள் கல்யாணி. என்ன சொல்வது, எப்படிக் கேட்பது என்று எதையுமே எண்ணிப் பார்க்காமல் தனக்கு வேண்டிய ஒரு வெள்ளியை மட்டும் குறியாகக் கொண்டு வாசலில் வந்து நின்றுவிட்டாள். ஆனால் அதைக் கேட்டுப் பெறத் தவிக்கின்றாள். 

“ஒரு வெள்ளி வேணும் கப்பலா. புள்ளைய பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைக்கணும்; காசு இல்லை” என்றாள். 

ஆ செங் கப்பலா அப்போது, தான் தமிழ் படித்துக் கொள்ளத் தவறிவிட்டதற்கு வருந்தினாரோ இல்லையோ! மீண்டும், “ஆயா… அப்பா மாவ்? அப்பா அவா சக்காப்? சயா தடா அர்த்திலா?” என்றார். (ஆயா.. என்ன வேண்டும், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? எனக்குப் புரியவில்லை)

கல்யாணி தனது ஆள்காட்டி விரலைத் திருப்பிக் காட்டி, “கப்பலா.. அண்ணா.. ஸ்கோலா… பீக்கி… சத்து ரிங்கி… மவ்” என்று சமாளித்து விட்டாள். 

கப்பலாவுக்குப் புரிந்துவிட்டது. அந்த உதவியைக் கூட அவர் செய்ய முடியாவிட்டால் பின் எப்படிக் கப்பலாவாக ஆவது? ஓடிச்சென்று கல்யாணி கேட்ட அந்த “சத்து ரிங்கி” யோடு திரும்பி வந்தார். கல்யாணியின் உள்ளத்தில் தேங்கியிருந்த கனம் குறைந்தது ஏக்கம் தீர்ந்தது. “ஆயா, சோச்சி” என்றால் சோற்றையும், “ஆயா, பாச்சி” என்றால் பாலையும் குழந்தைகளுக்கு ஊட்டிப் பசி தீர்க்கும் கல்யாணியின் அந்த மலேசிய மொழி மழலையைக் கேட்டு ஆ செங் கப்பலா ஒரு வெள்ளியைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டார். 

வேலைக்குச் சென்று திரும்பித் தங்களை ஆயாக் கொட்டகையிலிருந்து வீட்டிற்குத் தூக்கிச் செல்ல வரும் பெற்றோரைக் கண்டதும் பூரித்துப்போகும் குழந்தையின் அகத்தைப் போன்றும், முகத்தைப் போன்றும் ஆயாவின் அகமும் முகமும் மலர்ந்தன. மனமார்ந்த தனது நன்றியை வெளிப்படுத்த மேலும் அவளுக்குப் பகாசா மலேசியா தெரியவில்லை. ஆயாவின் நன்றி உணர்வு ஆ செங் கப்பலாவுக்குத் தெரியும். அந்த “தெரிமா காசே” என்ற வார்த்தைகளைச் சொல்லத் தெரியாத நிலையில் அவளது நன்றியுணர்வை அவர் சந்தேகப்படவே இல்லை; அதனால் வருத்தப்படவும் இல்லை. அந்தப் புரிந்துணர்வு ஆ செங் கப்பலாவிடம் இருந்தது.

காசைப் பெற்றுக்கொண்ட கல்யாணியின் நடையிலும் மாற்றம். மாலையில் “பிள்ளையார் பந்து” விளையாடிய சிறுவர்கள் நடைபாதையிலேயே பிள்ளையாரைப் போட்டுச் சென்றுவிட்டனர்.

கல்யாணியின் கால் பெருவிரல், அவள் விரைந்த வேகத்திற்கு ஈடாக செங்கற் கல்லைத் தாக்குகின்றது. என்ன நடந்தது என்பதை வீட்டிற்கு வந்துதான் பார்க்கவேண்டும். வேதனையைத் தாங்கிக்கொண்டு காலை இழுத்து நடக்கின்றாள். 

“இந்தாப்பா ஒரு வெள்ளி, எடுத்துக்கிட்டுப் போய்ட்டுவா. பஸ்சு வந்திடும்” என்று தயாராக இருந்த தன் மகனைப் பள்ளிக்கு அனுப்பி வைத்தால் கல்யாணி. 

பெருவிரல் நகம் பிய்ந்துவிட்டது. இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. தன் பிள்ளையிடம் இதனைக் காட்டிக்கொள்ளவில்லை. முக்காடிட்டுப் போர்த்தியிருந்த அதே சேலையை முந்தானையில் கிழித்துக் கட்டுப்போட்டுக்கொண்டாள். 

எழுத்தறிவே அற்ற அந்த அன்னைக்கு கமலமும், முனியம்மாளும் போன்றவர்கள் வாழும் சூழலில் எப்படித்தான் எழுத்தின் உயர்வு புரிந்ததோ தெரியவில்லை. கமலம் சொன்னபடி அவள் இருந்திருக்கலாம்; ஆனால் கமலத்தின் மகன் காண்டா வாளியை அல்லவா தினம் சுமக்கின்றான். அது தெரிந்துதான் அவள் வார்த்தைகளை உதாசீனப்படுத்திவிட்டாள் கல்யாணி. சேற்றில் எறியப்பட்ட ஆரஞ்சுப்பழத் தோலைப் போன்று தன் மகனின் நிலை என்ற ஏற்பட்டுவிடக் கூடாது என்ற எண்ணமும் உறுதியும் அவளுக்கு எப்படித்தான் ஏற்பட்டதோ தெரியவில்லை. “தந்தையுடன் கல்விபோம்” என்ற வாசகத்தையும் பொய்யாக்கிக் காண்பித்துவிட்டாள் கல்யாணி. மாதம் முடிவதுகூடத் தெரியாத நிலையிலுள்ள தாய் தன் மகனை கல்வியில் உயர்த்திக் காண என்ன பாடுபடுகின்றாள்! 

மகன் கலக்கி வைத்திருந்த காப்பியைக் குடித்துவிட்டு தன் பிள்ளையின் தோளில் புத்தகப் பையை மாட்டிவிட்டுப் பள்ளிக்கு அனுப்பிவைத்துவிட்ட ஆறுதலில் தனது கையில் குழந்தைகளுக்குப் பால் கலக்கும் வாளியை மாட்டிக்கொண்டு ஆயாக்கொட்டகையை நோக்கி தள்ளாடித் தள்ளாடி நடக்கின்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *