இரவுநேரம். குவாலலும்பூர் அடங்கி, ஒடுங்கிக் கொண்டிருந்தது. அந்நகரை இரவில் பார்ப்பதற்கும், பகலில் பார்ப்பதற்குந்தான் எவ்வளவு பெரிய மாற்றம்! பகலில் போர் நடப்பதைப் போன்றிருந்த நகரம் இரவில் போர் ஓய்ந்து விட்டதைப் போன்ற அமைதியில் ஆழ்ந்து விட்டது.
சென்ட்ரல் மார்க்கெட் அருகாமையிலுள்ள கடைகளின் ஐந்தடியில் வாசம் செய்பவர்களுக்கு மட்டும், இன்னும் உலகம் உறங்கவில்லை. பகலில் பெண்களை மட்டும் அந்த ஐந்தடியில் பார்க்கும் நாம், இரவில் முக்கால் மயக்கத்திலிருக்கும் ஆண்களையும் அங்குப் பார்க்கலாம்.
சீனக்கடைகளில் வெங்காயம், உருளைக்கிழங்கு, ஊடான், நெத்திலி ஆகியவற்றை சுத்தம் செய்து கொடுப்பதினால், அப்பெண்களுக்குக் கழிவுபட்ட
வெங்காயம் – ஊடான் – நெத்திலி போன்றவற்றை அள்ளித் தருவார்கள் கடைக்காரர்கள். அவற்றை விற்று, கால் வயிறு சோறும், முக்கால் வயிறு சம்சுவும் குடித்து தங்கள் வயிற்றைக் கழுவிக் கொள்வதுதான், அப்பெண்களின் அன்றாட வேலை.
ராமன் காட்டில் பதினாலு ஆண்டுகள் வாசம் செய்தது போலல்லாமல், ஆயுள் முழுவதும் அந்த மார்க்கெட் அருகிலேயே வாசம் செய்யும் அவர்கள் அங்கு வயிற்றைக் குமட்டிக்கொண்டு வரும் நாற்றத்தைப் பொருட்படுத்தவில்லை.
கயிற்றின் துணைகொண்டு மலையில் ஏறுவது போல இரண்டு ஊன்றுகோலின் துணையுடன் நடந்து வந்த நொண்டிக்கிழவன், ஊன்று கோல்களை ஓரமாகப் போட்டுவிட்டு, ஒரு பெருமூச்சு விட்டவாறு ஐந்தடியில் “அக்கடா” என்று அமர்ந்தான்.
சாக்கடை நாற்றம். அவன் உடலிலும் வீசிக் கொண்டிருந்தது. அவன் மடியிலிருந்த பையை அவிழ்த்து இரண்டொரு பாக்கை எடுத்து வாயில்
போட்டுக் கொண்டே, நசிந்து, பழுத்துப்போன வெற்றிலையில் காய்ந்த சுண்ணாம்பைத் தடவி வாயில் திணித்தான். அப்பொழுது பிஞ்சிலேயே பழுத்து, குஷ்டரோகத்திற்கு ஆட்பட்ட குமரிப் பெண்ணைப்போல் எலும்பும் தோலுமாகக் காட்சியளித்த சொறிபிடித்த நாயொன்று அவன் அவிழ்த்து வைத்த பையில் வாயை வைத்ததுதான் தாமதம், கிழவன் ஊன்றுகோலினால் அதன் மண்டையில் ஓங்கி ஒன்று போட்டான். அது வலியின் வேதனை தாங்க மாட்டாது, மரண ஊளையிட்டுக் கொண்டே ஓட்டம் பிடித்தது.
‘மனுசன் பொழைக்கிற பொழைப்பு இந்த நாயிகளுக்கு எங்க தெரியப் போகுது? சனியன்!’ கிழவன் முணுமுணுத்துக்கொண்டே தன் நொண்டிக்காலை நீவி விட்டுக் கொண்டான். ஐந்தடியில் வாசம் செய்யும் அக்கிழவன் ஒரு காலத்தில் சுகவாழ்க்கை வாழ்ந்தவன்தான். அன்று ரயில் போர்ட்டராக வேலை பார்த்தவன் கண்மண் தெரியாமல் குடித்துவிட்டு ரயில் பெட்டிகளை மாற்றும் வேலையில் ஈடுபட்டிருந்த சமயத்தில் ஒரு காலை இழந்து விட்டான்.
நொண்டியிடம் இன்பமான வாழ்க்கையை எதிர்பார்க்க முடியாது என்னும் முடிவுக்கு வந்த அவன் மனைவி, தன் மாமனைக் கூட்டிக்கொண்டு நெடுங்கம்பி
நீட்டிவிட்டாள். மனைவியின் செயலால், மானம் போய்விட்டதே என்னும் மனக்கவலையினாலேயே பைத்தியமானான் கிழவன் பலவருடங்கள், மனநோய் மருத்துவமனையில் தன் வாழ்வைப் பலியிட்டுக் கொண்டு, வெளி
உலகிற்கு வந்ததும் அவன் மனம் அமைதியடையவில்லை. அவனுக்குக் கிடைத்த பணம் அனைத்தையும் குடியும் கும்மாளமுமாகக் குட்டிச் சுவராக்கி விட்டு இந்த ஐந்தடி வாழ்க்கைக்கு வந்து விட்டான். இந்த உலகில்தான் அவனுக்கு எவ்வளவு நிம்மதி!
“ஏண்டி காமாச்சி, இன்னிக்கு ஒன்னோட வியாபாரம் எப்படி?” ஐந்தடியில் சற்று தொலைவில் உட்கார்ந்திருந்த காமாட்சியைப் பார்த்து கிழவன் கேட்டான்.
“எயவு வியாபாரம். அந்த வயித்தெரிச்சல ஏய்யா கேக்கிறே?”
“ஏன்டி என்னா நடந்துடுச்சி?”
“அதாய்யா, அந்தக் காக்கிச் சட்ட போலிசுங்க காடில வந்து வந்து எல்லாத்தையும் சுருட்டிப் போட்டுக்கிட்டு போய்ட்டாய்ங்க… உருப்புடுவாய்ங்களா… அவுங்க புள்ளகுட்டி நல்லாயிருக்குமா…அவங்க வூட்டுல இடி உயவ… சண்டாளப் பசங்க.” பசித்திருப்பவன் எதையாவது சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக்கொண்டதைப் போல, அவர்களை ஏசித் தீர்த்துத் தனக்குத் தானே திருப்தி அடைந்து கொண்டாள் காமாட்சி.
“ஏன்டி அவனுங்களே திட்டுறே? அவன், அவனோட கடமையதான்டி செய்யுறான். இல்லாட்டினா மேல உள்ளவன் சீட்டே கிழிச்சிப்புடுவான்.” கிழவன்
சொன்னான்.
“கெயவா நீ என்னா அவங்களுக்கு சயிட் பண்ணி பேசுற. இங்க பாருய்யா, அவங்கனால எம்புள்ளைங்க கால்வயிறு கூட நெறையாம பட்டினியா கெடக்குது.” காமாட்சி சொன்னாள்.
“காமாச்சி, ஒன் புள்ளைங்க என்கூடத்தான் மலாக்கா பஸ்டாண்டுல பிச்ச எடுத்துப்புட்டு, நம்ம ஆச்சோங் கடையில் கொய்த்தியோ மீ துன்னுச்சிங்க.”
“அதுங்க சாப்பிட்டா போதுமா? என் கையால் அதுங்க வாயில் கொஞ்சம் கஞ்சிய ஊத்துனாதாய்யா எனக்கு நிம்மதி”
“பெத்த மனம் இல்லையா? சரி, சரி இந்தா முப்பது காசு. நீ போயி சூப்பு மீ சாப்பிட்டுட்டு சீக்கிரம் வா”
கிழவனிடம் முப்பது காசைப் பெற்றுக் கொண்ட காமாட்சி, “எய்யா ஒனக்கு இன்னிக்கு எவ்வளவு வருமானம்?”
“அத என் புள்ளே கேக்குற? பிச்ச எடுக்கிறதுக்குக் கூட பொய் சொல்லி பிச்ச எடுக்குறானுங்க. ஒருத்தன் நாக்குல கம்பிய குத்திக்கிட்ட மாதிரி கம்பிய வளைச்சி வச்சிக்கிட்டு கொஞ்ச நேரத்துல எம்புட்டு காசு சம்பாதிச்சிப் புட்டான் தெரியுமா?”
“அப்படியா!”
“என்னாடி அப்படி வாய பொளக்குற அந்த மாதிரி பொய் சொல்லி பிச்ச எடுக்குறவனுங்கல டானாவுல புடுச்சிப் போடணும்.”
“இந்த காலத்துல பொய் சொல்லாம யாராலும் பொயைக்க முடியாதுய்யா. யாரோ ஒருத்தி, கொயந்த வவுத்துல பேசுதுன்னு சொல்லி நம்ம மந்திரிங்க எல்லாத்தையும் ஏமாத்திப்புட்டாளாம். நம்ம கந்தசாமி பேப்பருல படிச்சி சொன்னாயா!”
“சரி சரி நீ போயி வவுத்துக்கு ரெண்டு போட்டுக்கிட்டு வா. மணியாயிடுச்சு, சீனன் கடைய மூடிடப் போறான்” கிழவன் பட்சாதாபத்தோடு
காமாட்சியைத் துரிதப்படுத்தினான்.
காமாட்சி கிழிந்து தொங்கிக் கொண்டிருந்த தன் தாவணியை இழுத்து சொருகிக் கொண்டு புறப்பட்டாள். அங்கு ஒரு மூலையில் முடங்கிக்கிடந்த இன்னொரு கிழடு நிமிடத்திற்கு ஒரு முறை ‘கொக் கொக்’ கென்று இருமிக்
கொண்டிருந்தது.
அப்போது, அறுபது வயதுத் தோற்றத்துடனிருந்த நாற்பத்தைந்து வயது முனியம்மா தூக்கம் வராமல் பசிக்களைப்பால் வாயில் வெற்றிலையைக்
குதப்பிக்கொண்டே, “எய்யா கெழவா, அவளுக்கு மட்டும் காசு
குடுத்தியே, எனக்கும் காசிருந்தா குடுய்யா, வயித்த பசிக்கிது. நாளைக்கி குடுத்துடுறேன்” என்றாள்.
“முனியம்மா, தவறா நெனச்சிக்காத, முப்பது காசுதான் இருந்துச்சி, அவகிட்ட கொடுத்துட்டேன்” நொண்டிக் கிழவன் சொன்னான்.
“கெழவா, அவ ஒன் வொய்ப்பாட்டி, அதுதான் குடுத்துப்புட்டே. ய்யோவ்
மொப்பது காசு குடுய்யா நானும்..”
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல அல்ல இந்த நொண்டிக் கிழவன் நிலை. தன்னுடைய கறைபடிந்த ஓட்டைப்பல் வெளியே தெரிய, இடுப்பில் சொருகியிருந்த முடிச்சியை அவிழ்த்து முப்பது காசை எண்ணி எடுத்துக் கொடுத்தான். முதல் குழந்தையை ஈன்றெடுத்த மகிழ்ச்சியைப் போல காசைப் பார்த்ததும் முனியம்மாவின் உள்ளம் மகிழ்ச்சியால் குளிர்ந்தது.
காமாட்சி, முனியம்மா இருவரும் விதவைகள். காலப்போக்கில் பல இன்னல்களுக்கு ஆளாகி உதவக் கூடியவர்கள் யாருமில்லாத காரணத்தினால் எஸ்டேட்டிலிருந்து கிளம்பி மூட்டை முடிச்சுகளுடன் குவாலலும்பூர் சென்ட்ரல் மார்க்கெட் அருகாமையிலுள்ள சீனக் கடைகளின் ஐந்தடியில் சரணமானார்கள்.
தலைநகர குடிசை ஒழிப்பினாலும், சிகப்பு பாஸ்போர்ட்டினால். வேலையிழந்து பாதிக்கப்பட்டோரும், அனாதைகளும் அந்த ஐந்தடியில் வாசம் செய்து வருகின்றனர்.
நொண்டிக் கிழவன் தன் ஒரு காலை இழுத்து மடக்கிக் கொண்டு வாயிலிருந்து வெற்றிலைக் குழம்பை எட்டித் துப்பினான்.
“தாத்தா, இன்னம் தூங்கலையா?” அங்கு வந்த பன்னிரெண்டு வயது சிறுவன் கேட்டான்.
“இந்த வயசான காலத்துல எங்கடா தம்பி தூக்கம் வருது? சரி இந்த அகால நேரத்துல நீ எங்கப் போயிட்டு வர?”
“எங்க வாத்தியாரு படம் பாத்துட்டு வரேன், தாத்தா”
“இந்த நேரத்திலா?”
“ஆமா தாத்தா! ராத்திரி பதினோறு மணிக்கு ஆரம்பிச்சி இரண்டு மணிக்கு படம் முடியும்.’
“ஓ. ஓ. அப்படியா?”
“இந்தா, இந்த படத்துல எங்க வாத்தியாரு எம்மா சண்டை போடுறாரு தெரியுமா?” கையை மடக்கிக் காட்டினான் சிறுவன்.
“ஆமா, இன்னிக்குக் கெடைச்ச காசுல படம் பாத்துட்டியே, எப்படி சாப்புட்ட?’
“என்னா தாத்தா பெரிய சாப்பாடு? எனக்கு வாத்தியார பாத்துக்கிட்டே
இருந்தாலே போதும், பசிக்காது. இன்னைக்கு ரெண்டு தடவ அவரு படத்தப் பார்த்துட்டேன்.” பயபக்தியுடன் கூறினான் சிறுவன்.
“வாத்தியாருன்னா உனக்கு அவ்வளவு உசுரா?”
“என்னா தாத்தா அப்படி கேட்டுப்புட்ட என் உசுரையே அவருமேல வச்சிருக்கேன்.”
“தம்பி, நான் வாலிபப் பொடியனா இருக்கிற காலத்துலயிருந்தே வாத்தியாரு நடிச்சிக்கிட்டு வாராரு. இப்ப அவருக்கு ரொம்ப வயிசாயிருக்கும்..” நொண்டிக் கிழவன் அனுதாபப்படுவதைப்போல சொன்னான்.
சிறுவனுக்குக் கோபம் அத்துமீறி வந்தது. “ஏய் நொண்டித் தாத்தா, நீதாய்யா கெழவன். எங்க வாத்தியார கெழவன்னு சொன்ன, ஒன்ன கல்லால
அடிச்சுப் போட்டுப்புடுவேன். என் அக்கா மட்டும் இங்கே இருந்திருச்சுனா, இன்னொரு காலையும் நொண்டியாக்கியிருக்கும்.” வீரனைப்போல பேசிவிட்டு, ஒரு சுவரோரமாகப் போய்ச் சுருண்டு படுத்துக்கொண்டான் சிறுவன். கிழவன் பிரமை பிடித்தவனைப் போல விக்கித்துப் போனான்.
அப்பொழுது வானம் இலேசாக தூற்றல் போட்டுக் கொண்டிருந்தது. அத்தூற்றலில் நனைந்துகொண்டே பிளாஸ்டிக் பையில் சம்சு வாங்கிக் கொண்டு வந்த கொண்டையா, தான் கொஞ்சம் குடித்துவிட்டு, மீதியை அந்த ஐந்தடியில் வாசம் செய்யும் தன் மனைவி காளியிடம் கொடுத்தான். அவள் அதை உறிஞ்சி இழுத்து விட்டு, வெறும் பிளாஸ்டிக் பையைத் தூக்கி எறிந்தாள். அவள் வீசியெறிந்த பை, படுத்தவாறு கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த செல்லப்பன் முகத்தில் விழுந்து ஒட்டிக் கொண்டது. செல்லப்பனுக்கு ஆத்திரம் வானை முட்டியது. விருட்டென எழுந்தவன், காளியின் கன்னத்தில் இரண்டு வைத்தான்.
“டேய் பொம்பள பயல ஏங்கிட்ட வாடா, ஏன்டா, ஒன் கைவரிசைய பொம்பள கிட்டயா காட்டற?” கொண்டையா கத்தினான்.
“டேய் ரொம்ப பேசுன ஒன்னயும் ஒதப்பன்டா!” செல்லப்பன் தாண்டிக் குதித்தான். காளி தன் கிழிந்த சேலையை வாரி முடித்துக் கொண்டு, “டேய், நீ ஒரு ஆம்பளன்னா என் புருசன் மேலே கையை வையுடா பார்ப்பம்.’
“சீ, வாய பொத்துடி ஓடு காலி!” செல்லப்பன் தொண்டை கிழியக் கத்தினான்.
“அடச்சீ வாயப் பொத்துடா அஞ்சடிக்காரப் பயல, ஒன் கையாலாகாத் தனத்த எங்கிட்ட காட்டாதடா!” பத்திர காளியைப் போல ஆங்காரமாகக் கத்தினாள் காளி.
கர்ணனும் – அர்ச்சுனனும் நடத்திய யுத்தத்தைக் கேள்விப்பட்டு பார்க்க ஓடிவந்த தேவர்களைப் போல, இவர்கள் நடத்திய யுத்தத்தின் சத்தத்தைக் கேட்டு அங்கு உறங்கிக் கொண்டிருந்த பலரும் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தார்கள். பேப்பர் அட்டைகளைப் போர்வையாகப் போர்த்திக் கொண்டு நிம்மதியான உறக்கத்தில் இருந்த குழந்தைகள் திடுக்கிட்டு அலறினார்கள்.
“ஓராங் மௌ தீடோர் லா. அரி – அரி லவான், பீகி மத் தீலா!” (Orang mau tidur la, hari-hari lawan, pigi mati la – ஆளுங்க தூங்கறதில்லையா, தினசரி சண்டை, போய் சாவுங்க) வெறுப்புடன் எரிந்து விழுந்த சீனக் கிழவன் ஒருவன் எழுந்து அப்பால் போய் சுருண்டு படுத்துக்கொண்டான்.
“ஓய் சீனா, டியாம்லா” (Oi Cina diamlah – ஓய் சீனனே வாயை மூடு) என்று அதட்டிய
கொண்டையா, தன் சட்டையைக் கழற்றி எறிந்துவிட்டு, “டேய், செல்லப்பா ஒன்னய அடிக்காட்டினா நா ஆம்பள இல்லடா!” மார்பைத் தட்டிப் பேசினான்.
“பொம்பளைய அடக்கத் தெரியாத போக்கத்தப்பயல, என்னையாடா அடிக்கப் போற?” செல்லப்பன் கேட்டான், காரமாக.
“டேய், அவ எம் பொம்பளடா, எங்கேயும் போவா, வருவா! அத கேக்க நீ யாருடா?” கெண்டையா இரைந்தான். அப்பொழுது நான்கைந்து போலீஸ்காரர்கள் அப்பக்கம் வரவே அவர்கள் “கப்சீப்’பென்று அடங்கினர். அவர்கள் அப்பால் நகர்ந்ததும், பழைய குருடி கதவைத் திறடி என்று பழைய பல்லவி தொடர்ந்தது. பெருமுயற்சிக்குப் பிறகு அவர்களை நொண்டிக் கிழவன் சமாதானம் செய்து வைத்தான். போர் ஓய்ந்தது!
அப்போது, கிழவனிடம் முப்பது காசு வாங்கிய முனியம்மா எதிர் ஐந்தடியிலிருந்து காட்டிய சமிக்ஞையைப் பார்த்த கிழவன் உள்ளக் கிளர்ச்சியையும் புதுத் தெம்பையும் பெற்றான். இப்பொழுது சலனமில்லாத நிழலாக அவனுடைய ஆசை, ஆர்வத் துடிப்புடன் எதிர் ஐந்தடியை
நோக்கி அவனுக்கு முன்னே போகிறது. மனம் முன்னே செல்லும் வேகத்திற்கு அவனுடைய ஊனக்காலும் முதுமையும்… ?
மன நடுக்கத்துடனும் ஒரு வித வெறியுணர்வுடனும் நடந்த நொண்டிக் கிழவன் எதிரேயிருந்த ஆழமான சாக்கடையில் கால் வழுக்கி விழுந்த போது.?’
அந்த ஐந்தடி உலகமே அலறியது!
- ப.கு. சண்முகம்
- விமர்சனங்கள்:
- 1. ஐந்தடியில் ஓர் உலகம்: மலாயில் மொழியாக்கம் கண்ட தமிழ்ச் சிறுகதைகள் குறித்த உரையாடல் – சாலினி
- 2. ஐந்தடியில் ஓர் உலகம்! ‘Dunia Di Kaki Lima’
