walaue
“இந்த முறை கண்டிப்பாக ஜெயிப்பேன். நீ பார்க்கத்தான் போகிறாய்” என்றான் கண்களை உருட்டிக்கொண்டு. லாலான் புல்லைப் போல் முடி வளர்ந்திருக்கும் அவன் தலைமேல் ஓங்கி ஒரு கொட்டுப் போடவேண்டும் போலிருந்தது. இன்று மட்டும் இவன் இப்படிச் சொல்வது ஏழாவது முறையோ எட்டாவது முறையோ தெரியவில்லை. எரிச்சல் மேல் எரிச்சல் வந்தது. இவனிடம் ஏன் சேர்ந்தோம்; எப்படிச் சேர்ந்தோம்? ஏன் கழன்று கொள்ளாமல் இருக்கிறோம்’ என யோசிக்க ஆரம்பித்தது மனது. 
 
நட்சத்திரமல்லாத தங்கும் விடுதியில் பழக்கமானவன். என்னுடைய ஒரே ஒரு தவறு, அவன் படித்து மேசைமேல் வைத்த ஆங்கில நாவல் புத்தகத்தை எடுத்துத் தலைப்பைப் பார்த்தது. திரும்பி வந்தவன் “எடுத்துக்கொள். நான் படித்து முடித்து விட்டேன். இனி யார் வேண்டுமானாலும் படிக்கலாம்” என்றான். அப்படிச் சொன்னதற்காக நன்றி கூறி புத்தகத்தின் பின்னட்டையைப் படிக்கும்போது “நல்ல கதை. விறுவிறுப்பான சலிப்புத் தட்டாத நடை. பாரேன், இன்னும் ஒரு வருடத்திற்குள் இக்கதை சினிமாவாக எடுத்து விடுவார்கள் அதில் நிக்கோலஸ் கேட்ச் நடித்தால் நன்றாக இருக்கும். படித்துவிட்டு நான் சொன்னதை நீயே ஆமோதிப்பாய்” என்றான் புன்முறுவலோடு. இரண்டாவது இரவில் அவனைப் பார்க்கையில் அவன் கருத்தை ஒப்புக்கொண்டேன். அடுத்தடுத்து அவன் தேர்வு செய்து வாங்கும் புத்தக இரசனை பிடித்திருந்தது. விடுதி வாழ்வின் சூன்யத்தை அவன் இருப்பும் நட்பும் சற்றுக் கூடுதலாகவே போக்கியிருந்தன. மேலும் அவனை அண்டிக் கொள்ளச் செய்தது, சதுரங்க விளையாட்டு 
 
“கற்றுக் கொள், உட்கார்ந்து கொண்டே கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம்” என்றான். கற்றுக்கொண்ட பிறகு மதிய உணவு பந்தயம் கட்டினோம். முப்பது நாட்களும் என் கணக்கில் இந்திய உணவை ஒரு பிடி பிடித்தான். விளையாடும்போது ராஜகுரு போல போதிக்கத் தொடங்கினான். “இந்த விளையாட்டு பக்கா அரசியல்தனம் கொண்டது. வியூக அமைப்புத்தான் முக்கியம். எவ்வளவுதான் நஷ்டம் அடைந்தாலும் கவலையே படக்கூடாது. நஷ்டப்படுதலிலும் ஒரு கெட்டிக்காரத்தனம் வேண்டும்” என்று உபதேசிக்கும் போதே மனதின் ஓர் ஓரத்தில் குறுகுறுத்தது. அப்போதே விழித்துக் கொண்டிருக்க வேண்டும். ஏனோ இல்லை. ‘என்னதான் நடந்துவிடும் நம்மை மீறி…’ என்ற தொனி, குறுகுறுப்பை அடக்கி அமிழ்த்திவிட்டது. 
 
நாங்கள் நெருக்கமானவர்களானதும் தங்கும் நோக்கத்தைக் கேட்டான். எதையோ சொல்லி மழுப்பினேன். மழுப்பலைப் புரிந்து கொண்டவனின் பதிலிலும் மழுப்பல் இருந்ததால் விட்டு விட்டேன். தினசரி நாங்கள் பேசும் பேச்சுகள் உண்மை நிறைந்தவை. அரசியலானாலும் சரி, சினாமாவானாலும் சரி, சமயம் மற்றும் தத்துவங்களானாலும் சரி, மணிக்கணக்கில் பேசிக்கொண்டே இருப்பான். நானும் அப்படித்தான். எங்கேயேனும் நாட்டிய நிகழ்ச்சியோ வாத்தியக் கச்சேரியோ நடக்குமானால் அவனை அழைத்துக்கொண்டு போய் விவரித்துக் கொண்டிருப்பேன். ஆனால், குடும்பம்- வீடு எனப் பேச்சு வரும்போது திக்குவாய் வந்துவிடும். மூளை படு சுறுசுறுப்படைந்து பொய்களை உற்பத்திச் செய்து வெளியிடும். கதை வாசிப்பவனுக்குக் கதைவிடவா கஷ்டம். 
 
அவன் பங்குக்கு எதையாகிலும் செய்தாக வேண்டும் என எண்ணியிருப்பான் போல, ஒரு நாள் மாலை கெந்திங் மலைக்கு அழைத்துச் சென்றான். சுற்றிப் பார்க்கக்கூடிய இயற்கை காட்சிகள் ஏராளமாய் இருக்க கெஸினோவிற்குள் என் காலடிகளை வைக்க வைத்து விட்டான். 
 
‘பாத்தேக்’ சட்டையை வாடகைக்கு எடுத்து உடுத்திக் கொண்டு இருநூற்றைம்பது ரிங்கிட்டை வைப்புத் தொகையாகச் செலுத்தி உட்புகுந்தோம். ஒரு திருவிழா கூட்டத்தில் நடப்பது போல் இடித்துக் கொண்டும் ‘எக்ஸ்கியூஸ் மீ என்ற வார்த்தையை அடிக்கடி பிரயோகித்தபடியே அவனைப் பின்தொடர்ந்தேன். விதவிதமான வாசனை திரவியங்களின் மணத்தைக் குளிர் காற்றினால் வெகுவாக நுகர முடிந்தது. சற்றேனும் தடுமாறாத அவன் இருப்பின் இயல்பு ‘இவன் அடிக்கடி இங்கு வருபவன்தான்’ என்றெனக்கு உணர்த்தியது. 
 
சில்லறைகள் கொட்டும் ஜெக்போட் இயந்திரங்களுக்கு முன்பாகச் சீனத்துக் கிழவிகளைக் கண்டேன். அவர்களின் கூந்தல் அலங்காரம், முக அலங்காரம், உடையலங்காரம் யாவும் பணம் படைத்தவர்கள் என்ற அடையாளத்தைக் காட்டின. மகிழ்ச்சியில் சிறுபிள்ளைபோல குதிக்கும் கிழவியின் வெற்றிக் களிப்பு, தன் வாழ்வில் இதுவே மாபெரும் வெற்றியெனச் ‘சொல்லாமல் சொன்னது. 
 
இன்னொரு கிழவி, ஆத்திரத்தில் கைப்பிடி இயந்திரக் கருவியைக் கீழே இழுத்துவிட்டு முனகுவது கேட்டது. மேகி சூப்பை இருகுச்சிகளால் வாயருகே தள்ளி உறிஞ்சிக் கொண்டே இயந்திரத்தை என்ன செய்யலாம் என்பது போல வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த மேலுமொரு கிழவியைப் பார்த்ததும் சிரிப்பு வந்தது.
 
கெஸினோவின் இரண்டாவது பிரிவு ‘ரோலட்’ பந்தய விளையாட்டு. இங்குத்தான் அதிக நெருக்கடி.. “விசேஷ தின விடுமுறை என்பதால்தான் இந்த மாபெரும் கூட்டம். மற்ற நாளில் இம்மாதிரி இருக்காது” என்றான் அவன். 
 
ஒரு காதில் மட்டும் எதனையோ பொருத்திக்கொண்டு கூட்டத்தினரைக் கவனிக்கும் திடகாத்திரமான ஆண்களைக் கவனித்தேன். அவர்களின் கருவிழிகள் இங்குமங்கும் அசைந்தபடி இருந்தன. அவர்களில் அநேகர் இந்தியர்களும் மலாய்க்காரர்களுமாய் இருந்தனர். ‘ரோலட்’ பந்தயத்தை நடத்தும் இளஞ்சிட்டு சீனத்திகள் ஒவ்வொருவரும் ஒரு தேவதையாகவே கண்களுக்குத் தென்பட்டனர். அவர்களின் உடலசைவுகளில் ஓர் இயந்திரத்தன்மை இருந்தது. புன்சிரிப்பை உதிர்க்காதபடிக்கு எச்சரிக்கையாக இருந்தனர், யாருக்கோ பயப்படுவதுபோல அவனின் பணம் நாணய வடிவங்களாகின.
இரண்டு நாணய வடிவங்களை முப்பதாம் எண்ணின் மேல் வைத்து அவன் ஆட்டத்தில் பங்கு கொண்டான். சில வினாடிகளுக்குப் பிறகு என்ன நினைத்தானோ இன்னொரு நாணய வடிவத்தை அந்த எண்ணின் மேலேயே வைத்த மறுகணம் அவள் ‘இனி முடியாது’ என்று அர்த்தம் கொள்ளும் படி இரு கைகளையும் மேசைமேல் சைகை காட்டினாள். சிறு உருண்டை வடிவ கல்லைப் போன்ற ஒன்றைப் பிடித்துச் சுண்டிச் சுற்ற வைத்தாள். அது தனக்குச் செலுத்தப்பட்ட வேகத்தினூடே உருண்டுருண்டு முப்பதாம் எண்ணின் மேல் நின்று அமைதியானது. அவன் சந்தோஷத்துடன் சத்தமாகவே ‘ஓ லாவே!’ என்று சொல்லி என் முதுகில் தட்டினான். அவன் வைத்த நாணயங்களுக்கு ஈடாக அளவெடுத்து வைப்பதுபோல அவள் வேறு சில நாணயங்களைச் சேர்த்து வைத்து அவன் பக்கமாய்த் தள்ளியதும் அவன் எடுத்துக்கொண்டான். 
 
அந்த மேசையை விட விலகி நடக்கும்போது அவன் அசைவுகளில் மிடுக்குத்தனம் வெளிப்பட்டது. மெல்லிய இராகத்தில் ஆங்கிலப் பாடலொன்றைப் பாடிக்கொண்டே அந்த வரிசையின் கடைசி மேசைக்குப் போனான். மீண்டும் அதே முப்பதாம் எண்ணின் மேல் தன்னிடமுள்ள எல்லா நாணயங்களையும் வைத்தான்.
 
திடுக்கிட்டேன். என்னைப் பார்த்தவன் “அப்படிப் பார்க்காதே! இயல்பாக இரு. இதுதான் சூதாட்டமென்பது நமது வாழ்க்கையே ஒரு சூதாட்டம்தானே…” என்று சொன்னதில் முரண் இருப்பதாகப்பட்டது. வாழ்க்கை ஒரு சூதாட்டமா? என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமலிருந்தது. அவன் மீண்டும் ஜெயித்தான். “ஓ லாவே! ஓ லாவே! என்று இரண்டு முறை சொல்லிக்கொண்டான். எனக்கு, என்ன சொல்ல வேண்டும் என்று தெரியாதிருந்தது. பேசாது சிரிப்பை மட்டும் உதிர்த்தேன்.
 
மேலுமவன் நகர்ந்து எதிர்ப்பக்கமாய்ப் போய் என்னிடம் “உனக்கு எந்தப் பெண் அழகாய்த் தெரிகிறாள்” என்று கேட்டான். புரியாதவனாய், என் கண்களுக்கு அழகாய் இருந்தவளைக் காட்டினேன். அம்மேசைக்குச் சென்று அதே முப்பதாம் எண்ணின் மேல் அத்தனை நாணய வடிவங்களையும் அடுக்கினான். ‘இவன் இந்த முப்பதாம் எண்ணை விடுவதாகயில்லை போலிருக்கிறது’ என எண்ணிக்கொண்டேன். இன்றைய நாளில் நீ செய்வதெல்லாம் வாய்க்கும் என்று எந்த லோகத்துத் தேவதை வாக்களித்ததோ, இந்த முறையும் வெற்றிதான் அவனுக்கு. மஞ்சள் கறை படிந்த தன் பெரிய பற்களைக் காட்டிக் கொண்டிருந்தான். “ஓலாவே, ஓ லாவே” என்ற வார்த்தைகளை ஓயாமல் பிணாத்திக் கொண்டிருந்தான். 
 
வாலிப இரவின் கொண்டாட்டங்கள் எங்களுக்குச் சொந்தமானது. தோற்றுப்போன, முற்றிலும் பணத்தை இழந்த, இமைகள் விரித்துத் திருதிருவென முழித்துக் கொண்டிருந்த கிட்டத்தட்ட முப்பது வயதிற்குள்ளிருந்த இரு சீனத் தோழிகள் எங்கள் விஸ்கிகளையும் படுக்கைகளையும் பகிர்ந்து கொண்டனர். வாலிப முறுக்குத் தன் மோகத்தின் பசியினைத் தீரித்துக்கொண்டது. மறுநாள் அவர்கள் விடைபெற்றுக் கொள்ளும்போது நெடுங்காலம் பழகியவர்களைப் போலிருந்தார்கள். விட்டுப்போன நினைத்துக் கொண்டேன். 
 
பணம் தீர்ந்து போன மூன்றாம் இரவில்தான் அவன் தலையில் பலமாய் ஒரு கொட்டுப் போட வேண்டுமென்ற அந்த எரிச்சல் எனக்குள் வந்திருந்தது.
 
வாழ்க்கையில் அதிர்ஷ்டம் என்பது ஒரு முறை மட்டும்தான் போலிருக்கிறது. ஒவ்வொரு முயற்சியிலும் அடி, பலத்த அடி, தன் வங்கிச் சேமிப்பிலிருந்து எடுத்துச் சூதாடினான். தனக்கு நேர்ந்த தோல்வியின் அடையாள அறிகுறிகளை மறுதலித்தான். கடைசிவரை போராட வேண்டும் என்ற கொள்கையை இந்த விஷயத்தில் சற்றும் பிசகாமல் பின்பற்றினான். எனக்குத் தலைசுற்ற ஆரம்பித்தது. பாதிவழியில் விட்டுப்போக மனம் வரவில்லை. கெஸினோவை நடத்துவோர் தங்களுக்குரிய தேவதைகளுக்கு ஒரு கொழுத்த கன்றுக் குட்டியையோ பன்றிக் குட்டியையே பலி கொடுத்திருக்க வேண்டும். அங்கு உலாவித் திரிந்த அநேகரின் முகங்கள் வாடி வதங்கித் தொங்கப் போட்டுக் கொண்டதாகவே எனக்குப் பட்டது. 
 
வங்கிச் சேமிப்புக் காலியானதும் என்னிடம் கையேந்தினான். அவன் பணத்தைத் தொட்ட பாவத்திற்கு “முந்நூறு வெள்ளிதான் தருவேன். அதற்குமேல் முடியாது. என்னை விட்டு விட வேண்டும்” என்றேன். 
 
“ஏன் அப்படிச் சொல்கிறாய்? நீயென் நண்பனல்லவா…” என்றதற்கு “நண்பன்தான். ஆனால், சூதாட்டம் தன் மனைவியையே பணயமாக வைக்க வைத்துவிடும். எங்கள் இதிகாசங்கள் இப்படித்தான் சொல்கின்றன…” என்றேன் கண்டிப்பான குரலில், எங்கேயோ பார்த்தபடி இருந்தவனின் முகம் சற்று இறுக்கமாகிப் போனதைப் பார்த்தேன். இருவருமே. பேசாததொரு இடைவெளி உருவானது. சங்கடமாகவும் அவனைப் பார்ப்பதற்குப் பாவமாகவும் இருந்தது. மெதுவாகப் பேச்செடுத்தபோது அவன் குரல் உடைந்திருந்தது. 
 
“என்னோடு இன்பத்தை அனுபவித்த நீ, இப்போது 
துன்பத்தை அனுபவிக்க மறுக்கிறாயே… இதுதான் நட்பா? இப்படித்தான் உங்கள் இதிகாசங்கள் போதிக்கின்றனவா…’ 
 
“அப்படி அல்ல நண்பா.. நான் சொல்லவந்தது வேறு…” 
“எப்படிச் சுற்றி வந்தாலும் சமாச்சாரம் ஒன்றுதான். நட்பு.” 
“அதுதான். அதுதான்… 
“இல்லை, இல்லை… 
“சரி சரி.. வாவா. படைத்தவன் நம்மைக் காப்பாற்றுவானாக.” 
 
நொந்து கொள்வதில் பிரயோஜனமில்லை எனத் தோன்றியது. அவன் தோற்றால், அந்தச் சாக்கில் விட்டுப் பிரிவோம் என முடிவெடுத்தேன். 
 
“ரோலட் இந்த முறையும் காலை வாரிட்டது” என்றபடியே அடுத்த பிரிவான சீட்டாட்டத்திற்குள் நுழைந்தான். கொஞ்சங் குறைவான ஆண்கள் மட்டுமே அங்கிருந்தனர். பெண்கள் ஒரு சிலரே. பந்தயத்தை ஏற்று நடத்தும் இளம் பெண்களை நோட்டமிட்டேன். ஒட்டுமொத்த சீனத்து அழகிகளை இங்கு ஒரே இடத்தில் பார்த்ததுபோலிருந்தது. ‘எமது நாட்டில் இவ்வளவு அழகிகளா…’ என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். அங்கிருந்த அநேக ஆண்களின் நடை, உடை, பாவனையாவிலும் பணக்காரத்தன்மையும் கல்வி கற்ற புலமைத்தன்மையும் இருந்தது வியப்பளித்தது. 
 
அவன் கண்களில் தீவிரத்தன்மை தெரிந்திருந்தபோதிலும் எனக்கு நம்பிக்கை இல்லாதிருந்தது. நான் நினைத்திருந்தபடியே அவனது ஆட்டம் சீக்கிரமாய் முடிந்து போனது. முகவாயில் கையை வைத்தபடியே “உனது பணத்திற்கு ஏற்பாடு செய்கிறேன், வா” என்றான். 
 
இவ்வளவு பட்டும் அவன் அந்தக் கெஸினோவை வெறுக்கவேயில்லை. “சூதாட்டம், என் இரத்தத்தில் ஊறினது” என்றான். “தவறு உங்கள் வம்சம், சமூகம் வழியாக ஊறிப்போய் உன்னிடம் வந்திருக்கிறது. உனக்குமிது தெரியும்தானே… போதைப்பொருள் அடிமைக்கும் உனக்கும் வித்தியாசம் ஏதுமில்லை. இப்போது தான் ஒன்று புரிகிறது. சீனர்கள் நிர்வாணத்தோடு கட்டட உச்சியில் நிற்பது, அங்கிருந்து விழுவது, மனைவியோடு சண்டை போட்டு அவளைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொள்வது யாவும் இப்போது புரிகிறது, உனக்கு…”
 
“புல்ஷீட் அவர்கள் மடையர்கள். நான் அப்படியல்ல. எனக்குத் தேவையானதை நாளையே சம்பாதித்துக்கொள்ளும் திறமை என்னிடம் உண்டு. அறிவுரை வேண்டாம். தயவு செய்து மீண்டும் இப்படி முயற்சிக்காதே. வா போவோம்” என்றான் சீற்றமாக.
 
அறிவுரை எனக்கும்கூட பிடிக்காதுதான். அறிவுரையா சொல்லிவிட்டேன். 
நடந்து முடிந்ததை சொல்லும்போது அறிவுரைகளாகப் பிரதிபலிக்கின்றனவோ. 
 
சிறு விமான நிலைய வளாகத்தில் அவனின் தாய் தோற் பைகளை விற்கும் கடையை நடத்துகிறாராம். அவரைப் பார்ப்பதற்காகப் பேருந்தில் பயணித்தோம். அவனின் அம்மா அவனுக்கு அக்காள் போல அவ்வளவு இளமையாக இருந்தார். கடையில் விதவிதமான தோல் பைகள். முதலைத் தோல் காலணி, இடைவார்களோடு பாம்பின் தோலால் செய்யப்பட்டவை யாவும் விலையுயர்ந்ததாகப் பட்டியலிடப்பட்டிருந்தன. என்னைக் காட்டிக் காட்டி எதனையோ சொல்லிக் கொண்டிருந்தான். அவரின் உச்சரிப்புத் தொனியானது நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறான் என்றே உணர்த்தியது. ஆத்திரத்துடன் என்னைக்கூட பார்க்காமல் அவன் வெளியேறினான். 
அடப்பாவி மனுஷா… என்ன இப்படி நடந்து கொள்கிறான்’ என்று மனம் வியாகுலப்பட்டது. கடையிலிருந்து வெளியேறி மின்படிக்கட்டுகளின் பக்கமாக நின்று கொண்டிருந்தேன். இருபது நிமிடங்கள் கழித்துத் தூரமாய் அவன் உருவம் தெரிந்தது. கையசைத்து என்னை அழைப்பது தெரிந்தது. அருகில் சென்றதும் கண்ணாடிச் சுவர் பக்கமாய்ப் போனான். அதன் முக்கோணக் கூர் மூலையில் என் இடுப்பளவு ஒரு துணிப்பையும் கருப்புப் பெட்டி ஒன்றும் இருந்தன. துணிப்பை புடைத்துக் கொண்டிருப்பது போலிருந்தது. ஒரு குடும்பத்தின் அத்தனை துணிமணிகளையும் அதற்குள் திணித்து விட்டார்களோ என்றெண்ணம் வந்தது. இரண்டின் முகப்பிலும் பயண அத்தாட்சி ஒட்டப்பட்டிருந்தது. துணிப்பையைத் தூக்கச் சொன்னான். தூக்க முயன்றும் முடியவில்லை. பெரும்பாரமாக இருந்தது. பெட்டியை அவன் கைப்பற்றியிருக்க அந்தப் பெரிய பையை இருவருமாய்ச் சேர்ந்து தூக்கினோம். உள்ளிருப்பது நிச்சயமாகத் துணிமணிகளல்ல என யூகித்தேன். 
 
மின் படிக்கட்டில் வைத்து இறங்கியதும் வாடகைக் கார் ஓட்டுனர், நின்ற வண்ணம் பயணிகளுக்கான தேடலில் காணப்பட்டடார். ஓட்டுனர் எங்களைக் கேட்காமலேயே காரின் பின் பக்க மூடியைத் திறந்தார். பாரமான அந்தப் பையை வைத்ததும் கணிசமான அளவில் கார் கீழிறங்கியது. போகுமிடம் சொன்னதும் நாற்பது வெள்ளி கட்டணம் விதிக்கப்பட்டிருந்தும். “சரி” என்றான் அவன் ஆங்கிலப் பாடல் மெட்டின் நகலோடு சீனப்பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. அமைதிக்குலைவு ஏற்பட்டது என்னில்.
 
இடம் நெருங்கும்போது என்னைப் பார்த்தான். அவனின் விழிகள் பணத்தைக் கேட்டது. இறங்கும்போது கட்டணத்தைச் செலுத்தி, தூக்கிக்கொண்டு விடுதியின் படிகளில் ஏறினோம். அவனறைக்குள் நுழைந்து கதவைப் பூட்டிவிட்டுக் கட்டிலில் அமர்ந்தேன். 
 
‘நீ அந்தத் துணிப்பையைத் திறந்து பார். நான் இந்தப் பெட்டியைப் பார்க்கிறேன்…” என்றவனின் கவனம் முழுவதும் பெட்டியின் எண்களை நகர்த்துவதில் இருந்தது. அவன் மேலிருக்கும் ஆத்திரம் ஒரு பக்கம், அந்தப் பையில் என்னதானிருக்குமென்ற எதிர்ப்பார்ப்பு ஒரு பக்கம். அவனை மானாவாரியாக ஏசிவிட்டு வெளியேறிவிடுவோமா என்ற யோசனைகூட வந்தது. பையைத் திறக்காமலிருந்தேன். ஐந்து நிமிடங்களுக்குள் அவன் கைப்பெட்டியைத் திறந்து விட்டிருந்தான். உள்ளே தடிமமான, மெலிந்த, புதிய கைக்கடிகாரங்கள், விலைப்பட்டியல் தங்க நிறத்தில் ஜொலித்தன. அவன் கடிகாரங்களை எண்ணியபோது மொத்தம் ஐம்பது என்றிருக்க அதன் விலைகளை வாயசைப்பிலேயே கணக்குப் பார்த்தான். இருபதாயிரம் வந்தது. “ஓ லாவே!” என்று சொல்லி ஆனந்தித்தான். சிரித்தபடியே “ஆளுக்குப் பாதிப் பாதி” என்றான். சம்மதம் சொல்லாதிருந்தேன். 
 
அவனாகவே துணிப்பையின் பூட்டினை உடைத்துத் திறந்தான். பையின் முகப்பை விரித்துப் பார்த்ததில் கறுப்பாய் ஏதோ தென்பட்டது. கையை விட்டுத் தொட்டுப் பார்த்துப் பின்பு பையினைக் கீழிழுத்தான். இழுக்க இழுக்க சிலை வெளிப் பட்டது. முற்றிலுமாகப் பையை வெளியே எடுக்க உதவினேன். விநாயகர் கருங்கல் சிலையாய் எங்கள் முன்பாக வீற்றிருந்தார். ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டோம். எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. “ஓ லாவே! யானை முகக் கடவுளே எங்கள் அறைக்குள் வந்ததற்காக வந்தனம் செலுத்துகிறோம்” என்றபடி இரு கைகூப்பி அவர்களுக்கே உரிய பாணியில் கரங்களை ஆட்டிக்கொண்டான். என்னிடம் திரும்பி தோளில் கைபோட்டு “இதனையும் விற்று ஆளுக்குப் பாதிப் பாதி எடுத்துக் கொள்வோம்; எவ்வளவு கிடைக்கும்?” என்றான்.
 
உதட்டைப் பிதுக்கி “எனக்குத் தெரியாது. பழக்கமில்லை. என்னுடன் வா, விற்போம்” என்றேன். 
 
“சரி. முதலில் ஒரு பத்துக் கடிகாரங்களை விற்று வருகிறேன். இங்கேயே இரு” என்றபின் கடிகாரங்களை அள்ளி சரியாய் எண்ணிக்கைப் பார்த்து தன் முதலைத் தோல் பையில் போட்டு கழுத்தில் மாட்டிக்கொண்டு புறப்பட்டான். கதவைச் சாத்திக் கொண்டேன். கட்டிலில் மல்லாந்து படுத்தவாறே விநாயகரை நோக்கினேன். எனக்குப் பெங்களூர் ரமணியம்மாளின் ‘பொம்ம பொம்மதான்’ என்ற பாடல் நினைவிற்கு வந்தது. கூடவே, விநாயகரின் பக்தையான காதலியின் ஞாபகம் வந்தது. கண்கள் கசிந்தன. 
 
புதிய ஆடைகளை நேர்த்தியாய் உடுத்திக்கொண்டு ஒரு காலை வேளையில் சிலையைத் தூக்கிக்கொண்டு புறப்பட்டோம். எங்கள் இருவர் முகத்திலும் புதிதான கறுப்புக் கண்ணாடி. இடது கர மணிக்கட்டில் புதிய கடிகாரங்கள். முதலைத் தோல் காலணிகள்; இடைவாரும்கூட. எங்கள் தோற்றம் உயர் அதிகாரிகளைப் போன்றிருந்தது. எனக்குத் தெரிந்த தமிழரின் சிலை விற்கும் கடைகளுக்குள் நுழைந்தோம். பார்த்ததும் வேண்டாமென்றார்கள். 
 
நான்காவது கடையில் நான் மட்டும் நுழைந்து கேட்டேன். பார்க்காமலேயே வேண்டாமென்றார்கள் என் கறுப்புக் கண்ணாடியைக் கழற்றி வைத்து முழுக்கைச் சட்டையை இரு மடிப்பு மடித்து வேறொரு கடைக்குள் விசாரித்தேன். பேச்சுக் கொடுக்காமலேயே ஒரே வார்த்தையாக வேண்டாமென்றார்கள். மறுநாள், கோயிலுக்குக் கொண்டு போனோம். அதே பதில். சலித்துக் கொண்டோம். அன்றிரவு விநாயகர்மேல் வெறுப்பு உண்டானது. முயற்சியைக் கைவிடாமல் அடுத்த நாளிலும் ஒரு கோயில் பிரவேசம். அதே பதில். நாங்கள் வியப்படைந்து “ஏன்? ஏன் அங்கிருந்த குருக்கள் ஒருவரிடம் வாங்கமாட்டீர்கள்? என்ன காரணம்? வாங்க வேண்டாம். காரணத்தை மட்டும் சொல்லுங்கள்…” என்றேன். என்னை மேலும் கீழுமாகப் பார்த்தவர் வாசலைக் காட்டி “அதான் வழி…” என்று கூறி முறைத்தார். இருவரும் குழம்பிப் போனோம். 
 
உறங்குவதற்கு முன்பு “சரி போகட்டும். நமக்குக் கடிகாரப் பணமே போதும்” என்றான். என் மனம் காரணத்தைத் தேடிக் கொண்டிருந்தது. 
 
தூங்கும்போது திடீரென விழிப்பு வந்து சிலையைத் தொட்டு கும்பிட்டு ஏதாவது துவாரங்கள் வசப்படுகிறதா என ஆராய்ந்தேன். சிலையை படுக்க வைத்து, புரட்டி, தலைகீழாக அலசிப் பார்த்தேன். ஒன்றும் தட்டுப்படவில்லை. 
விடிந்ததும் ஒரு முடிவுக்கு வந்தவனாய் அவன் உதவியுடன் வாடகைக் காரில் கொண்டு போய் எனக்குத் தெரிந்த சிறு காடொன்றிற்குள் நுழைந்து ஆற்றோரமாய் நிற்க வைத்துத் துணிப்பையை மட்டும் எடுத்துக்கொண்டோம். காரை ஓட்டியபடியே “இந்நிகழ்வு என்னால் மறக்கவே இயலாது” என்றான். “எனக்கும்தான்” என்றேன். 
 
அவனை விட்டுப் பிரிந்தேன். 
 
ஆறாண்டுகள் கழித்துச் சனீஸ்வர பரத நாட்டிய நிகழ்ச்சியைக் காணச் சென்றேன். என் பக்கத்து இருக்கையில் அவன் உட்கார்ந்திருந்தான்.
 
“இங்கு இப்படி உன்னைக் காண்பதில் ஆச்சரியம்” என்றேன். 
 
“எல்லாம் உன்னால் வந்த பழக்கம்தான்” என்றபடி குசலம் விசாரித்துவிட்டு “அந்தச் சிலையை வைத்த இடத்திற்கு போவோமா?” என்றான்.
 
“ஏன்” என்றதற்குக் ‘குற்றவுணர்வுதான் என்றபடி தலைகவிழ்ந்தான். 
 
அவனது ஹோண்டா காரில் பயணித்தோம். அவ்விடத்தை அடைந்தோம். காடு வெட்டப்பட்டிருந்தது. சிலை வைத்த இடத்தில் பெரியதொரு கோவில் எழும்பியிருந்தது. அருகில் செல்லச் செல்ல மக்கள் திரளைக் கண்டோம். கோவிலினுள்ளே ஒரே சிலை ஜெகஜோதியாய்ச் சந்நிதானத்தில் வீற்றிருக்கக் கண்டோம். பூசை நடந்து கொண்டிருந்தது.
 
அவன் முன் நகர்ந்து சந்நிதான படிகளுக்கருகே சென்று உற்றுக் கவனித்தான். தன்னையும் மீறி “ஓ லாவே!” என்று கத்தினான். 
 
எல்லோரும் அவனை ஒரு மாதிரியாய்ப் பார்த்தார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *