vanathin kural 1

அங்குப் பயணிப்பது இது நான்காம் முறை.

 

இதற்கு முந்தைய பயணங்களைப் போலவே, இதுவும் மிகுந்த மன இறுக்கமும், அயர்ச்சியும் தந்து துவளவைத்தது.

 

அங்குப் போகும் ஒவ்வொரு பயணமும் இப்படித்தான். 

 

இதற்கு முந்தைய ரயில் பயணம் வித்தியாசமாக இருந்தது.

 

எழுந்து, கை கால்களை நீட்டி மடக்கி, இறுக்கம் தளர்த்தி, படியில் நின்று கொட்டாவி விட்டு, சோம்பல் முறிக்க முடிந்தது. கொஞ்சம் காலாற, கேண்டீன் வரை ரயிலின் தாலாட்டில் தள்ளாடியபடி போய், சூடாக ஒரு கப் காப்பி குடித்தபோது, உடலில் உற்சாகம் பாய்ந்தது. அங்கேயே உட்கார்ந்து கொஞ்சம் பேப்பரும் பார்க்க முடிந்தது. அம்மா மடியில் உட்கார்ந்து, கன்னக் கதுப்பு சிவந்து சிரிக்க, டாடா காட்டிய குழந்தைக்கு, பறக்கும் முத்தம் தர இயன்றது. இருக்கைக்கு வரும் வழியில், படிக்கட்டில் உட்கார்ந்து, கீழே கடகடக்கும் ஓசையின் தாள லயத்தில் மனம் லயிக்க, முகத்தில் வந்து மோதிப்போன ஈர வயலின் புதுமணத்தை வாரி வந்த காற்றுக்கு, சத்தம் போட்டு நன்றி சொல்லவும் முடிந்தது. 

 

பஸ்ஸுக்குள், அத்தகைய சுதந்திரம் ஏதும் இல்லை. எல்லாம் ஆணி அடித்த வாக்கில் அசைவற்றுக் கிடக்கிறது. இருக்கையை முழுக்கவும் இறக்கி, அவரவர் பின்னிய உலகத்துள், குளிருக்கு இதமாய், கழுத்துவரை போர்த்திய சுகத்தில் வந்து விழுகிறது- எப்போதேனும் ஒரு இருமலோ தும்மலோ சிணுங்கும் கைத் தொலைபேசியோ இடைஞ்சலாய். 

 

வடக்கு – தெற்கு நெடுஞ்சாலை, பல சந்தர்ப்பங்களில், ரயில் பாதையை ஒட்டி உறவாடிப் போவதைப் பார்க்க முடிந்தது. இப்போது கூட, மிக நெருக்கத்தில், ஆச்சரியமூட்டும் விதமாய், நீண்ட நேரமாய் வந்துகொண்டிருக்கிறது.

 

வெறிச்சிட்டுக் கிடந்தது தண்டவாளம். 

 

ஒருமுறை, தெற்கு நோக்கிப் போன ஒரு இரவு நேரப் பயணத்தில், ஆற்றைக் கடந்து, மலைக்குகை தாண்டிய ஒரு திருப்பத்தில், இடது பக்கம் கண்ணில் பட்டது. அடர்ந்த அமாவாசை இருளைக் கிழித்துப்போட்ட ஒளி வெள்ளத்தில், பள்ளத்தில் வேகமெடுத்து, கொஞ்ச தூரம் கூடவே ஓடி வந்தது ரயில். வழக்கத்தைவிட நீண்டுகிடந்தன பெட்டிகள். ஒளியில் மிதந்த பெட்டிகளுக்குள் நிழல் உருவங்கள். கையில் புத்தகத்தோடு சாய்ந்த நிலையில் ஒரு உருவம், நடுநிசி தாண்டியும். கூடவே ஓடிவந்து, கண் இமைக்கும் நொடியில், குன்றுக்கு அந்தப் பக்கம் இருளில் கலந்து மறைந்து போனபோது, ஏமாற்றமாய் இருந்தது. இன்னும் கொஞ்ச தூரம் வந்திருக்கலாமே என்று தோன்றியது. 

 

அப்போது, இன்னும்கூடச் சில நிழல் உருவங்கள் கண்ணில் பட்டிருக்கலாம். 


உட்கார்ந்த நிலையில் தலைகவிழ்ந்து அரைத் தூக்கத்தில் கழிப்பறைக்குப் பையனின் கைபிடித்து இழுத்துப்போகும் அவசரத்தில்- நாளைய பிரச்சினையில் தூக்கம் பிடிக்காமல், சிகரெட் புகை மேகத்துள் முகம் நுழைந்து, வாயிற்படியில் காற்றாட இருளைத் துழாவும் வெறித்த பார்வையில். 

 

புகைகக்கிப் போகும் பழைய ரயில் எஞ்சின்களை, இன்றைய தேதியில் எங்குமே பார்க்க முடியாமல் போனது. அம்மாவைப் பார்க்க முடியாமல் போனதுபோல. அம்மாவோடு பினாங்கு போக, ரயில்வே ஸ்டேசனில் காத்திருந்தபோது பார்த்தது. தண்ணீரும் கரியும் நிரப்பிக்கொண்டு, அனல் பெருமூச்சு பொங்கி வழிய, கரிய புகை உமிழ்ந்து நின்றது. 

 

கிட்டத்தில் போய்ப் பார்க்கப் பயந்து, அம்மாவின் விரலைப் பிடித்துக்கொண்டு, எட்டத்தில் நின்று, அதன் சீற்றத்தை ரசித்த அனுபவம் அலாதியானது. சுருதி தவறாத தாள லயத்தில் மூச்சிரைக்க பாரம் இழுத்துப்போன, அதன் குரலில் இருந்த உற்சாகம், இன்னும்கூடக் காதில் ஒலிக்கிறது. 

 

ஒரு மேட்டைக் கடக்க, சிரமத்துடன் முக்கி முனகி நகர்ந்துகொண்டிருந்தது பஸ். அதன் கண்ணாடித் தடுப்புக்கு அப்பால், உலகம் தன் போக்கில் இயக்கம் கொண்டிருந்தது. 

 

தலைக்கு மேலிருந்து குளிர்காற்று, இரைச்சலுடன் முடியைக் கோதிவிட்டு, எலும்புகளை ஊடுருவியது. வழக்கமாய்க் கொண்டுவரும் ஸ்வெட்டர் மறந்துபோனது, பையில் கையை விட்டபோதுதான் தெரிந்தது. இன்னும் கொஞ்சம் போனால் நடுங்கத் தொடங்கிவிடும். கடுமையான நடுக்கம். விசித்திரமான உடல் அமைந்து போயிருந்தது. 

 

எங்கோ, தொலை தூரத்தில் வீசும் ஊதல் காத்துக்கும் மோப்பம் பிடித்து நடுக்கும். டாக்டரிடம் கேட்க, கொழுப்புச் சத்துக் குறைவுதான் காரணமென்று சொன்னபோது, ‘அதெப்படி சார்… வாயில மட்டும் இத்தனை கொழுப்பு’ என்று சிரிக்காமல் சொன்னது – உடம்பில் குளிர் ஊடுருவும் ஒவ்வொரு தடவையும் ஆஜராகி, மனத்தில் சிரிப்பலைகளைத் தவறாமல் எழுப்புகிறது. இப்போதும் எழுப்பியது. 

 

எழுந்து நின்று, மேலிருந்து காற்று வந்த வழியை, சற்றுத் திசை திருப்ப, குளிர் மட்டுப்பட்டது. திரைச் சீலைகள், சாட்டின் துணியில், தொட்டால் ஒட்டிக்கொள்ளும் வழவழப்புடன், குஞ்சங்கள் ஆட அழகு காட்டின. சாய்ந்து கொள்ள வசதியாய், நல்ல அகலமான இருக்கைகள். எதிரே தொலைக்காட்சி. 

 

ஏதோ இந்திப் படம் ஓடிக்கொண்டிருந்தது. சாருக்கான், வழக்கம்போல ஐஸ்வர்யாராய் பின்னால் ஓடிக்கொண்டிருந்தார். சல்மான்கான், செடி மறைவில், முகத்தில் கோபக் கனல் வீச நின்றுகொண்டிருக்க, கையில் ஏ.கே.47. வெளிநாட்டு லொகேஸன். ஸ்விட்சர்லாந்தின் இயற்கை எழில் கொஞ்சியது. மெல்லிசையில், ரொம்பவும் பாப்புலராகிப் போன பாடல். பாடல் முடிய, இடைச் செருகலாய் மிளகாய்த் தூள் விளம்பரம் – ஸ்டைலாய், சல்யூட் அடித்து, சிரமத்துடன் ‘தமிழில்’ விளம்பரம் செய்து கொண்டிருந்தாள் அழகுப் பெண். 

 

பக்கம் இருந்தவர், இருக்கையைக் கீழிறக்கி, தூங்கப் போயிருந்தார். லேசான குறட்டை ஒலி காதைக் குடைந்தது. 

 

முதல்முறை, மிக நெருக்கத்தில், தயக்கமின்றிப் பார்க்க வாய்த்தது. முகத்தில் மூப்பும் களைப்பும் பதிந்திருந்தன. நாலைந்து நாள், சவர பிளேடு காணாத வளர்ச்சி. சரிவர வாரப்படாத தலை, வெள்ளைத் திட்டுகள் சிதறி, வறண்டு கிடந்தது. சட்டைப் பித்தான் விலகிக் கிடக்க, மார்பில் மயிர் அடர்ந்து படர்ந்திருந்தது. 

 

மடியில் காகிதப்பை. அடர்ந்த மஞ்சளில் “காயத்ரி ஜவுளி மாளிகை” என்ற வாசகம் பெரிய எழுத்துக்களில். ஒருக்களித்துக் கிடந்த பை, கவிழ்ந்துகிடந்தது. எல்லாம் சிதறிக்கிடந்தன – ஒரு ஜோடி உடுப்பு. ஒரு பிரஸ். பர்ஸ், நசிந்துகிடந்தது. பாதி காலியான, சின்ன சைஸ் கோல்கேட் மஞ்சள் பிடியோடு, ஒரு சவரப் பிளேடு. ஒரு கசங்கிய கைக்குட்டை, பஸ்ஸின் ஓட்டத்தில் அதிர்ந்து, மூலைக்கொன்று நகரத் தொடங்கிவிட்டிருந்தன.

 

எழுப்பி, சொல்ல வேண்டும். ஆழ்ந்த உறக்கம். கலைக்க மனமில்லை. சரி, உதவியாய்ப்போகட்டும் என்று குனிந்து ஒவ்வொன்றாய் எடுத்துத் திணிக்க, சவர பிளேடு மட்டும், கைக்குள் வராமல் நழுவிப்போனது. 

 

குலுங்கி ஓடும் வாகனத்தில், இப்படி மெய் மறந்து தூங்குவது என்பது ஒரு அலாதி சுகம்தான். ஆசீர்வாதம்தான். சந்தேகமில்லை. இதுவரை, அப்படியொரு பாக்கியம் வாய்க்காமல் போனது குறித்து வருத்தமுண்டு. இருக்கையை முழுமையும் சாய்த்த நிலையில், கண்களை வலிய மூட, சின்ன கோழித் தூக்கத்தில் முடிந்துபோகிறது, ஒவ்வொரு தடவையும். ஏனோ, பக்கத்து மனிதரின்மேல், சின்னதாய்ப் பொறாமை வந்தது.

 

திரைச் சீலையை விலக்கிவிட்டு, பார்வையை வெளியில் ஓடிய காட்சிகளில் பதிக்க, பக்கத்து இருக்கைக்காரர் கொஞ்சம் மறந்துபோனார். 

 

தொலை தூரத்தில் தெரிந்தது – நீலமலைத் தொடர். 

 

இரவெல்லாம் கொட்டிய மழை, அங்கும் கொட்டியிருக்க வேண்டும். வானம் வெளுத்து நீல ஆகாயம்- மலை முகட்டுக்கு அப்பாலும் பரந்து விரிந்து கிடந்தது. தொப்புர நனைந்திருக்க வேண்டும். நீண்டுபடுத்து, குளிர் காய்ந்து, மௌனத்தில் உறைந்து கிடந்தது மலை. முகட்டுக்கு மேல் திட்டுத் திட்டாய் மேகக் குவியல்கள். 

 

காடு விழித்தெழும் நேரம்தான். 

 

வீட்டு ஜன்னலுக்கு மேல், கண்ணாடிச் சட்டகத்துள், பனிப்போர்வைக்குள் முடங்கிக்கிடக்கும் இமயமலைத் தொடர், நினைவுக்கு வந்தது. 

 

வெண்பனி உடுத்தி, அண்ணாந்து பார்க்கும் உயரத்தில், அமானுஷ்ய அழகுடன் எவரெஸ்ட் சிகரம். வானத்தில் தலைவைத்து, அனாயாசமாய்க் கால் நீட்டிப் படுத்திருக்கும் அதன் ஆளுமை, சிலிர்ப்பூட்டும் கவிதை- மனித ஆணவத்தை மௌனக் குரலில் உரத்துக் கிண்டலடிக்கும் அதன் கம்பீரம் ரசனைக்குரியது. ஒவ்வொருமுறை பார்க்கும்போதும், அசாத்திய ஈர்ப்புடன் கண்களை நிலைகொள்ளச் செய்து, தியானத்தின் ஆழ்நிலைப் பரவசத்தை ஏற்படுத்துவதுண்டு. 

 

அப்போதெல்லாம், பனிபடர்ந்த முகடின் வயிற்றுக்குள் மறைந்துகிடக்கும் ஆயிரமாயிரம் ரகசியங்களை, ஒரு கைப்பிடிக்குள் கொண்டுவந்துவிட, ஏதேனும் மந்திர சக்தி சாத்தியமிருந்தால், நன்றாக இருக்குமே என்று யோசனை ஓடும். 

 

மலைப்பிரதேசம் என்பது, இந்தப் பூமியின் ஓர் அங்கம் என்பதை, ஏனோ மனம் எப்போதுமே ஒப்புக்கொண்ட தில்லை. 

 

பஸ் வேகம் குறைந்து, நிதான கதியில் ஓடத்தொடங்கி இருந்தது. நீலமலைத் தொடரிலிருந்து கீழிறங்கி வரும் நீரோடையின் சின்னக்கீறல் – இங்கிருந்து பார்க்க, பென்சில் கிறுக்கலாய் நெளிந்தோட – குதித்து இறங்கும் நீரின் அசைவு, ஆச்சரியப்படும் விதத்தில் தெளிவுடன் இருந்தது.

 

நெடுஞ்சாலையின் இரு பக்கமும், பூமி பச்சை நிறத்தை மானாவாரியாய் அள்ளிப் பூசிக்கொண்டு, அழகு காட்டியது. வயல் வெளிகள், பூப்பெய்திய குதூகலத்தில், திரட்சியுடன் கையசைத்து வெட்கி நின்றன. 

 

குஞ்சுகளுக்கு இரைதேடி, பறவை ஜோடி ஒன்று கிழக்குப் பார்த்து மிதந்துபோனது – சிறகுகளின் படபடப்பில் குஞ்சுகளின் பசி ஒட்டியிருந்தது. 

 

காடு குறித்த பிரக்ஞைபூர்வமான விழிப்பு, எந்தப் புள்ளியில் தொடக்கம் என்பதை, திட்டவட்டமாக நினைவுகூர இயலவில்லை. குத்துமதிப்பாக, ஒரு புள்ளியை வட்டமிட்டு அடையாளப்படுத்த வேண்டுமானால், பத்து வயதில் அம்மாவுக்குப் பால்மங்கு துடைக்க, பாசாபக்கம் போனபோது, தீம்பார் பொரங்கானை ஒட்டி, அடர்ந்து வானளாவ நின்ற பச்சைக்காடு, முதல் காதலை மனசுக்குள் பதியம் போட்டிருக்கலாம். 

 

பார்த்த முதல் பார்வையிலேயே, ஒட்டிக்கொண்டது காடு. 

 

வானளாவ நீண்டு அடர்ந்து, “உள்ளே வந்து பார்” என்று கை உயர்த்தி, சவால்விடுவதுபோல் உயர்ந்து நீண்டு பருத்துக்கிடந்த ராட்சச மரங்கள், பூதகணங்களை நினைவூட்டின –  உள்ளிருக்கும் ஆயிரமாயிரம் ரகசியங் களையும் ஜீவராசிகளையும் பொறுப்புடன் பாதுகாக்கும் காவலர்களின் முரட்டுத்தனம். 

 

மனித வயப்பட்டு, ஊனமுற்ற உலகத்திடமிருந்து, தன்னை முற்றிலும் துண்டித்துக்கொண்டு, ஒரு தீவாகப் பரிமாணம் கொண்டிருந்தது காடு. இயற்கையின் சட்ட திட்டங்கள் முழு வீச்சுடன், பாரபட்சமற்ற இயக்கம் கொண்டிருக்கும் பிரதேசம் அது ஒன்றாகத்தான் இருக்கலாம் என்பதாய், அப்போதே ஓர் அரைகுறைத் தத்துவ விசாரம். 

 

காடு, மனசுக்குள் மெல்ல அடியெடுத்து வைக்கத் தொடங்கிவிட்ட காலம் அது.

 

சுகுணாவைக் காதலிக்கத் தொடங்கிய நாட்களோடு, அதை ஒப்பிட்டுப் பார்ப்பதும் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கிறது. உணர்வு நிலையில், இரண்டும் சம தளத்தில் இயக்கம் கொண்டிருந்ததை இப்போதும் உணர முடிகிறது. காட்டை, முதன்முதலாய்ப் பார்த்தபோதும், சுகுணாவை முதன்முதலாய்ப் பார்த்தபோதும், உடலில் துள்ளியோடிய காந்தத்தின் வால்டேஜ், சம அளவில் இருந்தது என்பதில் மாற்றுக் கருத்து எப்போதும் ஏற்பட்டதில்லை.

 

காலச்சுவட்டில் உறைந்து, நிலைத்து, சாகாவரம் பெற்றுவிட்ட அற்புதக் கணங்கள் அவை. 

 

மனசின் மத்தியப் பிரதேசத்தை ஆக்கிரமித்து புயல் மையத்தை உருவாக்கி, பல நாட்கள் பரவசத்தில் தத்தளிக்க வைத்த, இயற்கை சுழற்றிவிட்ட அலாவுதீன் கைபட்ட அற்புத விளக்கு அது. மனசுள் விடாமல் படபடத்த பட்டாம்பூச்சிகளின் வண்ண ஜாலம். தலைக்குள் ஆர்மோன் சுரப்பிகள் அளவுக்கதிகமாய்ச் சுரந்த ‘செரோடனின்’ கொடுத்த போதையில், கால்கள் மண்ணில் பாவாத மிதப்பு. கண்களுள் சதா நர்த்தனமாடிய மின்னல் தெறிப்பு. 

 

கனவில், விருப்பத்திற்கு வந்துபோனது காடு. 

 

பறவைகள் பாடின. சருகுகள் சடசடத்தன. அருவிகள் சிரித்தன. இலைகள் சலசலத்தன. யானைகள் காம சுகத்தில் பிளிற, சிங்கங்கள் கர்ஜித்தன. காட்டுப் பூனைகள் பெட்டைக்குக் குரல் கொடுத்து, ஏக்கப் பெருமூச்சில் கரைய- கிளை மான்கள், கொம்புகள் மரங்களில் சப்தமிட்டு உராய, குரங்குகள் அடர்ந்த மரக் கிளைகளில் ஊஞ்சலாட்டம் போட்டன. ராஜ நாகங்கள், ஆளுயரப் படமெடுத்துச் சீறிப்பாய, புலியின் வாயில் சிக்கிய ஏதோ ஒரு மிருகம்- கடைசி மூச்சுக்குப் பெரும் குரலில் அழுது தீர்த்து ஓய்ந்தது. 

 

ஒருநாள், கனவில் காடு, வானம் தாவிப் பறக்கத் தொடங்கியது. ராட்சஸ இறக்கைகள், வானத்துக்கும் பூமிக்கும் அசைந்து புயலைக் கிளப்ப, காடு பெரும் சப்தத்தோடு வானம் நோக்கி எம்பித் தாவியது. பூமி அதிர்ந்து குலுங்கி, வாழ்த்தியது. வேரடி மண் பெயர, புழுதிப் புயலில், காற்று மண்டலம் திக்குமுக்காடியது. நிலவும் நட்சத்திரங்களும் வானம் அதிரக் கைதட்டி, வன தேவதையை வரவேற்றன. நிலவு பன்மடங்கு வளர்ந்து, ஒளி வெள்ளத்தில் வானத்தைப் பகலாக்கிக் கிறங்கடிக்க, பறவைகளின் சங்கீத மழையில் நனைந்தாலும், காடு விம்மி அழுதபடி பறந்தது. 

 

வீட்டின் பலகைச் சுவரை, காலண்டர்கள் தேவைக்கு மேல் அலங்கரிக்கத் தொடங்கியதும், அப்போதுதான். 

 

ஒவ்வொரு சுவரிலும் நாலைந்து, ஒரே சைசில், கண்ணைப் பறிக்கும் நிறத்தில். தோட்டத்து வங்சா கடைக்காரர், தன் பங்குக்குக் கொடுப்பது, எம்.ஜி.ஆர். சாட்டையைச் சொடுக்கி, ‘நான் ஆணையிட்டால்’ என்று மாடிப்படிக்குப் பக்கம் நிற்கும், ‘எங்க வீட்டுப்பிள்ளை’. அப்பாவிடம் சொல்லி, டவுனிலிருந்து வாங்கிவந்த காலண்டர்கள்தான் பெரும்பாலும். அவற்றிக்கு இடம் கொடுத்து, எம்.ஜி.ஆரும்- அம்மாவுக்குப் பிடித்த சிவாஜியும் சுவர் மூலையில் பெருந்தன்மையுடன் ஒதுங்கிக்கொண்டனர். 

 

வண்ண வண்ணக் காடுகள், சுவரில் வளரத் தொடங்கியிருந்தன. அறையின் நடு மைய பாயில் மல்லாக்கப்படுத்த வாக்கில், நாலா பக்கமும் கண்களைச் சுழற்ற, எங்கும் பசுமைக் காடுகள். ஒவ்வொன்றும் ஏதோ ஒரு தனித்துவ அழகுடன். 

 

ஜப்பான் நாட்டு மூங்கில் காடுகள், ரொம்பப் பிடித்திருந்தன. கரும் பச்சையில் நீண்டு வளர்ந்த மூங்கில் சுழிகளில் ஓரடி நீள இலைகள். பலத்த காற்று வீச, ஒருசேர வளைந்து நின்ற சுழிகள். சரவாக் மாநிலத்தில், பள்ளத்தாக்கைப் பார்த்து விரையும் காட்டாறு-ஆப்பிரிக்கக் கண்டத்தில், சவானா புல்வெளியில் ஆளுயரம் வளர்ந்து, ஆடும் கோரைப் புற்கள். புற்களின் நடுவில் பிடரி மயிர் புடைத்து நிற்க, நாலைந்து குட்டிகள் முலைக்காம்பை உறிஞ்ச, முறைத்த பார்வையில் பெண் சிங்கம். 

 

மனம் கனத்தது- கூடவே அவள் ஞாபகம் வந்தது. 

 

நேற்று, தபால் பெட்டியில், ஒத்தையில், இளம் பச்சையில் கிடந்ததைப் பார்த்தபோது, மனம் படபடத்தது. இரும்புக்கேட்டில், ஒரு பக்கமாய்க் கீழிறங்கத் தொங்கிய தபால் பெட்டிக்குள், தலையை நீட்டிக் காத்திருந்தது கடிதம். சந்தோஷச் செய்திகளைத் தாங்கிவரும் கடிதங்களைப் பார்த்து நாளாகிறது. அன்றும் துக்கச் செய்திதான். மன்னிப்பு என்பது எந்த ஜென்மத்திலும் இல்லை என்பதான, முகத்தில் அறைந்த ஒத்தை வரிச் செய்தி. 

 

கடைசியாக நல்ல செய்தியோடு வந்ததாக நினைவில் இருப்பது, சுந்தரேசு தன் மகளின் காதணி விழாவுக்கு விடுத்திருந்த அழைப்புக் கார்டு. சின்ன சைஸ் கார்டு. திறந்த மாத்திரத்தில் முகத்தில் படர்ந்தது, மணம். நல்ல தரமான சென்ட். சாலையில், எப்போதோ கடந்துபோன யாரோ ஒரு பெண்ணிடம், அதே சென்ட்டின் மணம் வந்தது, அப்போது யதேச்சையாய் ஞாபகம் வந்தது. 


நீண்ட கால இடைவெளியில், ஒரு தற்செயலான நிகழ்வுதான், சுந்தரேசனைப் பார்த்தது. 

 

அப்பாவின், ஒத்தை விரலைப் பிடித்துக்கொண்டு, நின்றிருந்தாள் மகள். அண்ணாந்து பார்த்து முறுவலித்தாள். ‘டேய் உன்னைப் பாத்து எவ்வளவு நாளாச்சுடா…’ என்று பக்கம் வந்து, கையைப் பிடித்துக் குலுக்கியவனைச் சட்டென அடையாளம் காண முடியாமல் குழம்பியது. 


அப்போது பார்த்த சுந்தரேசு இல்லை. மெலிந்து தளர்ந்து போயிருந்தது உடல். சரிவர வாரப்படாத தலைமுடி, மூலைக்கொன்றாய்ச் சிதறி, ஒழுங்கில்லாமல். சின்னதாய்ப் பொட்டல் விழத் தொடங்கியிருந்தது. முகத்தில், சில நாட்கள் சுத்தம் செய்யப்படாத வளர்ச்சி. ஒளிகுன்றி உள்வாங்கிய கண்கள். 

 

குரல்மட்டும் இருந்தது. 

 

பலரது குரல் மறந்துபோன நிலையில், இவனது குரல் நினைவில் இருக்கக் காரணம், அதன் தனித்துவம். அடித் தொண்டையில் கரகரத்துப் புறப்பட்டு, மேல் நோக்கிய பயணத்தில் கொஞ்சம் பெண்மை பூசி, கிரீச்சிட்ட ஒலியுடன், கீறல் விழுந்த ரெக்கார்டாய் வெளிப்படும் குரலை, நினைவில் வைத்திருப்பது, எவருக்கும் சுலபம்தான். 

 

சாரதாம்பாள் அவனைக் காதலித்தாள் – இந்தக் குரலு எனக்கும் பிடிக்கலதான்… எந்தப் பொண்ணுக்குமே பிடிக்காதுதான்… எனக்கு அவரோட மனசு பிடிக்குது… ஒரு நல்ல மனசு மத்த எதயும்விட முக்கியமில்லையா…’ 

 

அவளும்போய் இரண்டு வருடமாகிறது. 

 

‘என்னடா சுந்தரேசு… பாத்து நாளாச்சு… எப்படி இருக்க?” 

 

குனிந்து, மகளைத் தூக்கி, இடுப்பில் செருகிக்கொண்டு, தோளில் கைபோட்டு- ஏதோ இருக்கேன்டா… இவளுக்காகத்தான் ஏதோ பொழப்பு ஓடுது… அவ போனதோட எல்லாமே சூன்யமாயிடுச்சுடா…” என்று கண் கலங்கினான். மனம் கனத்தது. இடுப்பில் உட்கார்ந்திருந்த குழந்தை, அம்மா சாடையில் இருந்தாள். கைக்கு எட்டிய பொம்மைகளைத் தொட்டுப் பார்த்து, அப்பனைச் சீண்டிக்கொண்டிருந்தாள். ஒன்றை வாங்கிக் கொடுத்தால் என்ன என்று தோன்றியது. 

 

‘என்னம்மா… பொம்ம வேணுமா…’ என்று முன் நகர்ந்து கையை நீட்ட, தயங்காமல் தாவியது. அவன், ‘டேய்… அதெல்லாம் வேணான்டா… வீட்ல நெறையக் கெடக்கு…’ என்று மறுத்தும், ‘இருக்கட்டும்டா… சாரதா மகளுக்கு என்னோட ஒரு சின்னப் பரிசா இருக்கட்டுமே…’ என்று நாலாபுறமும் பார்க்க, அவனும் ஆவலுடன் பார்வையைச் சுழலவிட்டான்.

 

பொம்மைகள் நிறைந்த தளம். ஐந்து மாடிகள் கொண்ட கட்டடத்தில் நான்காம் மாடி. சின்னதும் பெரியதுமாகப் பொம்மைகள். காட்டில் திரியும் சகல ஜீவராசிகளும் பொம்மை வடிவில், மௌனத்தில் உறைந்த நிலையில். இமை மூடாத திறந்த பார்வையில் கரடி பொம்மை ஒன்று, பெரிய சைசில், காலை அகட்டி உட்கார்ந்திருக்க, கால்களுக்கு இடையில் குட்டிகள், முட்டைக் கண்களில் சிரிப்பு மின்னல். கழுகு பொம்மை, பறப்பதற்கான தயார் நிலையில் இறக்கை விரித்திருந்தது. அதற்குப் பலியாகப்போகும் பயம் சலனிக்கும் பார்வையோடு ஒற்றைப் புறா. சற்றுத் தள்ளி, மரக்கிளைகளில், ரகசியம் பேசும் ஆப்பிரிக்க வண்ணக்கிளிகள். சிங்கமும் புலியும் கூண்டுகளில் அடைப்பட்ட சர்க்கஸ் பிராணிகளைப் போல், கண்ணாடிப் பேழைகளுக்குள் சிறைபட்டுக்கிடந்தன. 

 

எல்லாம், எந்த வினாடியிலும் உயிர்பெற்று நடமாடத் தொடங்கிவிடலாம் என்று நினைக்கத் தூண்டும் நிஜத்துடன். அத்தனையும் ஒரு கணம் உயிர்பெற்று எழுந்தால் எப்படி இருக்கும்?” யோசித்துப் பார்க்க விநோதமாய் இருந்தது. 

 

அப்போது, இங்கும் ஒரு காடு முளைத்திருக்கும். 

 

பறவைகளின் சங்கீதமும், சிங்கத்தின் கர்ஜனையும், புலிகளின் உறுமலும், யானைகளின் பிளிறலும், கோட்டான்களின் அலறலும் பல்கிப் பெருகி உச்சம்போக – அந்த அதிர்வலைகளின் மூர்க்கத்தில் – ஒருபக்கச் சுவர் தகர்ந்து வழிவிட – வனத்தின் குரல், இந்த நான்கு சுவர்களுக்கும் அப்பால் வழிந்து, வெளி எங்கும் பூதாகரமாய் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கும். 

 

பேரங்காடிக்கு வெளியே, எல்லாம் பரபரப்பாக இயக்கம் கொண்டிருக்கும் வேளைதான். சராசரி மனிதர்களின் அவசர உலகம்தான். காடு தொலைத்த நினைவுகூட இல்லாத – சாலை நெரிசலில், வாகனங்களின் இரைச்சலுக்குள் அமிழ்ந்து இயந்திர கதியில், திசை தெரியாமல் அரக்கப்பரக்க ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களின், வழக்கமான காட்சிதான். 

 

அவை அனைத்துமே, வான்வெளி நிரம்பித் ததும்பி வழிந்தோடும், வனத்தின் குரல்கேட்டு, வினாடியில் ஸ்தம்பித்து நின்று, காற்றில் மிதந்து, உயிரில் ஊர்ந்துபோகும் வனத்தின் குரல் தரும் முற்றிலும் புத்தம் புது அனுபவச் சிலிர்ப்பில், நரம்பு நாளங்கள் விம்மிப் புடைத்து முறுக்கேற, பெருக்கெடுத்து வரும் புதிய உணர்வு வெள்ளத்தில் மூழ்கித் திக்குமுக்காடிப் போகலாம். 

 

இத்தனைக்கும் மேலாக, தாங்கள் இத்தனை காலமும் நாயாய்ப் பேயாய்த் தேடியலைந்த அந்தச் சூட்சும உலகம் கண்முன் மெல்ல விரிய – தங்களின் மிகப்பெரிய இழப்பை நினைத்து, தலையில் அடித்துக்கொண்டு, அவர்களில் சிலர் மண்டியிட்டு வானம் பார்த்து அழலாம். 

 

நொடிப்பொழுது, கண்முன் ஜாலம் காட்டி, மிரட்டி மறைந்துபோனது வனப்பிரளயம்.

 

சாரதாவின், செல்ல மகளின் கைகளில், இதற்குள் ஒரு மான்பொம்மை – சருகு நிறத்தில் கிளை வெடித்த கொம்புகளோடு. மார்போடு இறுக்கி அணைத்து, மெத்தென்ற உடம்பில் முகம் புதைந்துக் கிடந்தாள். சுந்தரேசு சிரிக்க முயன்றுகொண்டிருந்தான். பார்வை இன்னமும் பொம்மை உலகத்துள் கிடந்து, தத்தித் தாவி ஓடிக்கொண்டிருந்தது. 

 

பிரளயத்தின் சுவடே இல்லாமல், தளம் அமைதியில் ஆழ்ந்திருந்தது. கவுண்டரில் நின்றிருந்த பெண், குனிந்த நிலையில் எதையோ எழுதிக்கொண்டிருந்தாள். வலது மூலையில், ஒரு சின்னப்பெண், அம்மாவின் துணையோடு, கரடி பொம்மையை அணைத்து வந்துகொண்டிருந்தாள். ஒரு ஜாடையில், சாரதாவே தன் மகளோடு வருவதுபோல் இருந்தது. 

 

“சாரதா நிச்சயம் ஆனந்தப்படுவாடா சுந்தரேசா. இது இந்தப் பிஞ்சு மனசுல விழற முதல் பசுமை விதைடா… இலை தழையோட… நாளக்கி விருட்சமாயி, மலைக்காடாப் பெருகி, பூரிச்சு நிக்கும்டா… அந்த அழகுக்கு நிகரா உலகத்துல எதுடா இருக்க முடியும்… சாரதாவுக்கு இதெல்லாம் நிச்சயம் புரியுண்டா… ஏன்னா… அவ மனசுக்குள்ள இருந்ததும் ஒரு பசுமைக் காடுதானடா…” என்று நிறுத்திக்கொண்டபோது- அவன் முகம் இறுகித் துடிப்பதை உணர முடிந்தது. 

 

அழுதுவிடுவான் போல் இருந்தது. 

 

இன்னும் ஒரு மணி நேரத்தில், பஸ், சாலை ஓரத்தில் இறக்கி விட்டுப் போய்விடும்.

 

சுகுணா இருக்கும் இடம்போக, டாக்சி வேண்டும். வாகன நடமாட்டம் குறைந்த பகுதி. போன முறை, அரைமணி காத்திருக்க வைத்தது. போனபோது அவள் வீட்டில் இல்லை. வெளியில், மரத்தடியில் உட்கார்ந்து, வெறுமனே ரோட்டைப் பார்த்துக் கிடக்க வைத்தது. 

ஃ ஃ ஃ

 

 

அம்மாவின் கொடிக்கயிறும் எனது காளிங்க நர்த்தனமும் 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *