அவள் கோபமாக இருந்தாள் . ”இதுவரைக்கும் மனுஷர்கள உங்களால அனுமானிக்க முடிஞ்சிருக்கா? இப்படி ஐயாயிரம் வெள்ளியை தூக்கி முன்பின் தெரியாத ஒரு மனுஷர்கிட்ட யாரும் கொடுப்பாங்களா? ஆறு மாசம் ஆச்சி. அந்த ஆளு எங்கே… ஏதுன்னு கூட தெரியல்ல. இது என்ன ஒரு தடவையா ரெண்டு தடவயா… எத்தனை தடவ இப்படி தூக்கிக் கொடுத்துட்டு அசடு வழிய முழிக்கிறது. யார்க்கிட்ட சொன்னாலும் நம்பக்கூட மாட்டாராங்க.” பையனுக்கு தலை சீவி விட்டுக்கொண்டே பேசினாள்.
என்ன செய்வது ?
அவளுடைய ஆதங்கம் அவளுக்கு.
என்னால்தான் என்ன செய்ய முடியும் இப்பொழுது
இந்த முத்துசாமி தம்பிரான் இப்படிச் செய்வார் என்று கண்டேனா என்ன. பார்க்க பழக எவ்வளவு உயர்ந்த மனிதராக காட்சித் தந்தார் அவர். இன்னமும் நம்ம முடியவில்லைதான். நாணயம் இல்லாத மனிதராக அவரைக் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லைதான்.
நித்தமும் தினமும் எத்தனை எத்தனையோ விதமான மனிதர்களைத்தான் சந்திக்கின்றோம். எல்லோருமா நம்மை கவர்ந்து விடுகிறார்கள். ஆனால், இந்த கிழவர் நான் பார்த்த மாத்திரத்திலேயே என் மனசினுள் சென்று அமர்ந்தவிதம், என்னை அந்தச் சில நாட்களில் பிரமிப்புக் கலந்த மயக்கத்தில் ஆழ்த்திய விதம், இவற்றை எல்லாம் மீண்டும் மீண்டும் எண்ணிப்பார்க்கிறேன்.
ஜோசியர் மயில்வாகனம்தான் அவரை ஏனக்கு அறிமுகப்படுத்தினார். நல்ல சிவப்பு. அறுபது எழுபது என்று வயதை மதிக்க இயலாத உடல்வாகு. அடர்த்தியான பொன்னிற நரைமுடி சுருளாக தோளில் புரள, படர்ந்த நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு வட்டமாக.வெற்றிலைக் காவி ஏறிய சிவந்த உதடு. மிடுக்காக முறுக்கிவிடப்பட்ட மீசை. யாரையும் மரியாதை கொள்ள வைக்கும் ஆறடி ஆஜானுபாகுவான ஆகிருதி. வெள்ளை கதர் ஜிப்பா, முழங்கால் வரையில் நீள அகலமான சிவப்புக் கரை வேஷ்டி தலையில் புரள, அந்த காலத்து ராஜபாட்டுக்கு ஏற்ற தேகம். வர்ணனைக்கு ஏற்ற தோற்றம்.
கணீரென்ற குரலில் பேசினார்.
”தம்பி… எனக்கு இருபது வருசமா நீரிழிவு நோய். டாக்டர் சேஷாத்ரி ஐயங்காருனு ஊர்ல ரொம்ப பேமஸ். கேள்விபட்டிருக்கிங்களா? அவருகிட்ட வைத்தியம். எனது வலதுகால் பெருவிரல் செத்துப் போச்சு. எடுத்தரணும்னு கண்டிப்பா சொல்லிட்டாரு. அப்பறம் எப்படி நடந்து ஒடந்து திரியறது. கொஞ்சம் பொறுங்க சாமினு சொல்லிட்டு வந்திருக்கேன். வந்த சோலிய முடிச்சிகிட்டுப் போற வரைக்குமாவது வேதனை இல்லாம ஏதாவது பண்ணுங்க தம்பி.” என்றவாறு வலது காலின் பெருவிரலைச் சுற்றியிருந்த கட்டை அவிழ்த்தார்.
பழுத்துச் சிவந்த பழம் ஒன்றின் ஒரு பகுதி அடிபட்டு கறுத்து சிறுத்திருப்பதுபோல் இருந்தது அந்த விரல்.
”இந்த விரலை எவ்வளவு சீக்கிரம் வெட்டி எடுக்கறோமோ அவ்வளவுக்கு நல்லது பெரியவரே” என்றேன்.
”அட அட நல்லா தமிழ் பேசறிங்களே.” என்றார்.
”தமிழ் இன்னமும் இங்கே சாகல”என்றேன்.
”தமிழ் எங்குமே என்றுமே சாகாது” என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு என்னை ஆழமாகப் பார்த்தார். நானும் அவரை நிமிர்ந்து பார்த்தேன். அந்த கணமே எங்களுள் ஒரு நட்பு பற்றிக் கொண்டது. அடுத்த சில நாட்களில் மயில்வாகனத்தின் வீட்டில் வைத்து அந்த நட்பு ஜெகஜோதியாக எரிந்தது. ஒரு முழுமையான நட்புக்கு எங்களின் முப்பது வருட வயதில் இடைவெளி ஒரு தடையாக இல்லை.
அடுத்த நாள் மாலை மயில்வாகத்தின் வீட்டில் அவரை நான் சந்திக்கச் சென்றபோது அவர்கள் இருவரும் சற்று உரத்த குரலில் ஏதோ சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் முன்பாக கொஞ்சம் வறுத்த கடலை. பாதி காலி செய்யப்பட்ட பாட்டிலின் பக்கத்தில் இரண்டு கிளாசில் கருநிற பானம் நுரைத்துக் கொண்டிருந்தது.
கடலையை எடுத்துக் கொரித்தவாறு ”என்ன ரொம்ப சீரியசா பேசிகிட்டு இருக்கிங்களே” என்று மயில்வாகனத்தைப் பார்த்து கேட்டேன்.
”ஒன்னுமில்ல… ஒலகமே வீடியோ சினிமானு முங்கி முக்குளிச்சிக்கிட்டு இருக்கறப்ப நம்ம முத்துசாமி தம்பிரான் என்னமோ ஏதோ தெருக்கூத்து, தமிழர் கலைனு சொல்றாரு… ஒன்னுமே புரியல…” என்றார்.
குற்றவாளிகளை மன்னித்து விடுதலை செய்யும் நீதிபதிபோன்று ஒரு இரக்கம் தோன்றும் பார்வையை எங்களை நோக்கி வீசிவிட்டு, தொண்டையைக் கனைத்தவாறு தன் வெண்கலக் குரலில் பேசினார் தம்பிரான்.
”சுத்தமான தமிழ்க் கலை வடிவம் எதுன்னு கேட்டா… நம் கிராமங்கள்ல இன்னமும் ஆடுர இந்த தெருகூத்துதான். கேரளத்தில் ‘கதகளி’, கர்நாடகத்தில் ‘யாஷகானம்’ மாதிரி நம்ம தமிழில் இது தெருக்கூத்து.”
இப்படிச் சொல்லி நிறுத்திவிட்டு கொஞ்சம் தண்ணீர் குடித்தவாறு எங்களை நிதானமாகப் பார்த்தார்.
”எங்களுக்கு தமிழ்க் கலைன்னா எதுனே தெரியாதுங்க.., நெத்தியச் சுத்தி துண்டு கட்டிகிட்டு எங்க பொண்ணுங்களும் பையன்களும் சினிமா பாட்டுக்கு கைய கால தூக்கிகிட்டு குரங்குமாதிரி குதிப்பாங்க… வலுப்பு வந்தமாதிரி வெட்டி வெட்டி இழுப்பாங்க..”என்று சொல்லிவிட்டு கெக்கபிக்கேவென சத்தமாகச் சிரித்தார் ஜோசியர் மயில்வாகனம்.
நான் மயின்வாகனத்தை ஒரு மாதிரியாகப் பார்த்தேன். அந்த ஒரு மாதிரியான பார்வையின் பொருள், ‘கொஞ்சம் சும்மா இருக்கறீங்களா’ என்பது. மயில்வாகனம் அதைப் புரிந்துக்கொண்டார் என்று தெரிந்த பின் முத்துசாமி தம்பிரான் தொடர்ந்தார்.
”புரிசை வீராசாமி தம்பிரான் முதல் இப்ப இருக்கிற நடேசன் தம்பிரான், கண்ணப்ப தம்பிரான் வரை சுமார் நூத்தியம்பது வருஷமா பொம்மலாட்டம், தெருக்கூத்து நடத்திக்கிட்டு வர்ர கலை பாரம்பரியம்ங்க எங்க பரம்பரை” இதை இவர் பெருமிதத்தோடு நெஞ்சுயர்த்தி நாடகபாணியில் இயல்பாகச் சொன்ன கம்பீரம் என்னைக் கவர்ந்தது.
”கோயில் திருவிழாக்கள்ள எங்க தெருக்கூத்து நடக்கும். வில்லி பாரதத்தில்ல வர்ர அர்ச்சுனன் தபசு ரொம்ப பிரசித்தம். திரௌபதி அம்மன் கோயில் விழாக்கள்ள இந்தக் கூத்து நாள் கணக்கா நடக்கும். இங்க மலேசியாவில் திரௌபதி அம்மன் கோயில் இருக்கா…” என்று கேட்டுவிட்டு எங்களைப் பார்த்தார்.
”ஆமா… இருக்கு. மலாக்கா செட்டிகள் கட்டின கோவில். பாவம் அவுங்கள ஓச்சி ஒக்கார வச்சிட்டு நாங்கதான்… ஆனா அங்க கூத்து கீத்துனு எதுவும் நடக்கிறதில்லங்க. கூத்துன்னு பார்த்தா எங்க எல்லா ஊர்லையும் கோவில் நிர்வாகம் ஒன்று தர்பார் நடத்தும்ங்க. அதுதான் பெரிய கூத்துங்க. கோவிலையும் கடவுளையும் வளைச்சிப்போட்டு நாங்க அடிக்கிற கூத்து இருக்கே…ரொம்ப வேடிக்கையா இருக்குங்க.” மீண்டும் ஜோசியரின் அதே கெக்கபிக்கே சிரிப்பு. சுதி கொஞ்சம் ஏறியிருப்பது போல் தெரிந்தது.
முத்துசாமி தம்பிரான் தொடர்ந்தார்;
”கூத்து நீங்க பார்த்ததில்லையே. ஆஹா. என்ன மாதிரி இருக்கும். ‘வந்தானே’ என்று அறிமுகத்துடன் தலைக் கிரீடங்கள், புஜகீர்த்திகள், மார்பு கவசங்கள், வாகுவளையங்கள், முக வண்ணப் பூச்சுகள், இடுப்பில் ஒன்றின்மேல் ஒன்றாய் அநேக சுருக்க லாவண்யத்தோடு கூடிய பாவாடை அணிந்தவாறு நடன நடையில் கம்பீரத்துடன், விழித்து புருவம் தூக்கி, கன்னச் சதை குழைய , பக்க வாத்தியங்கள் முழங்க.. அடடா அந்தக் காட்சிய பார்த்துதான் அனுபவிக்க வேணும்” தெருக்கூத்தில் நடிக்கும் அந்த கூத்தனின் வருகையை மெய்மறந்து கண்களில் ஒருவித விசீகரமான ஒளியுடன் கைகளை நீட்டி பரவசம் பொங்க பேசினார்.
‘முக வண்ணப் பூச்சுகள், சப்தத்தை வச்சிக்கிட்டு என்ன செய்யுறதுன்னு யோசிச்சவங்க சங்கீகத்த கண்டுபிடிச்சதா சொல்வாங்க. இந்த தேகத்தால என்ன செய்யுறதுன்னு யோசிச்சவங்க கூத்த கண்டுபிடிச்சது போல அந்தக் கூத்தன், இந்த கூத்துக்காகவே ஜென்மம் எடுத்தவன் போல வருவான். கணீரென பொறப்பட்டு வரும் அவன் குரலோட சங்கீதம் அவன் வாயிலேருந்து வருகுதா… ஊந்திச் சுழியிலிருந்து புறப்பட்டு வருகுதா… அவன் மனசிலிருந்து தேகத்துல பாய்ஞ்சி படைப்பாற்றலோட வேகத்தில மோதி அந்த வெளியை நிரப்பப் புறப்பட்டதா…”
அவர் ஒரு கூத்தனின் முழு மனநிலைக்கு வந்து விட்டிருந்தார். சொற்கள் உணர்வை புணர்ந்த களிப்பில் பொங்கி வந்தன. இந்த ஒவ்வொரு வார்த்தைக்கும் அவரது அபிநயம் மிகுந்த உடல் அசைவு. உணர்ச்சிவயப்பட்ட உக்கிரமான தோற்றம். எச்சிலைக் கூட்டி அருகிலிருந்த எச்சில் பணிக்கத்தில் ஒரு அழுத்தமான சப்தத்தோடு துப்பிவிட்டு ஒரு மடக்கு கருப்பை பருகிவிட்டுத் தொடர்ந்தார்.
”அந்த பக்கம் மேளக்காரன்… அவன் நின்னு மடியில மேளத்தைத் தாங்கி குனிஞ்சி தலை ஒருபுறம் சாய, தோள் தசைகள் இறுக, மூச்சை இறுக்கி, முக்கி, துரித கதியில இருகலான இனிமையான சத்தங்கள் கொத்தா கிளப்ப, முடிஞ்சி வச்சிருக்கிற அவனோட நீண்ட முடியும் அவிழ்ந்து ஆடி இந்த ஆவேசத்துல கலந்து கொள்ள, சப்தம் மேளத்திலிருந்தும் அவனோட கற்பனையிலேருந்தும் கிளர்ந்து வர, உடம்பு வியர்த்துக் கொட்ட, மேவும் விரல்கள் படபடக்க, மனித சக்திக்கு அப்பால்போய் சங்கீதத்தைப் பிடித்து வருகின்றவனைப் போல… அவனது ஒவ்வொரு மயிர்க்கால்களிலிருந்தும் கிழித்துக்கொண்டு புறப்படும் அதீத சங்கீதமாக, மார்பில் விரைப்பை ஏற்றும் ஒரு பிரம்மாண்டமான உணர்வில், அந்தத் தீவட்டி வெளிச்சத்தில், எல்லா வரம்புகளும் அழிந்து மொத்த வெளியில் இணக்கமாகி, மனிதனுள் இருக்கும் ஆவேசத்தைக் கிளர்ந்து எழச் செய்து அவன சக்தி மிக்கவனாய்க் காட்டும்.”
அவர் பேசிக்கொண்டே சென்றார். நான் அங்கு இல்லை.
கடல் கடந்து ஏதோ ஒரு சிற்றூரில் அறையப்பட்ட பறையின் அதிர்வுற்ற தோலாய், வெளிகள் சந்திக்க விரையும் சப்த நாதமாய், கால்கள் அகட்டி தலையை மிதித்தாடக் கிளம்பிய புழுதியாய், குலுங்கி ஆடும் கொங்கைகளின் அசைவாய், அந்தக் கூத்தாடிகளுடன் நானும் ஒரு கூத்தாடியாய் கரைகிறேன். அந்த உன்னத கலைஞர்களின் கலை ஆக்கத்தின் உக்கிர வெளிப்பாடாய், அவர்களின் எல்லாவற்றொடும் நானாய்… நானே எல்லாமுமாய்… காணாமல் போய்க்கொண்டிருந்தேன்.
ஜென்மாந்தர ஜென்மமாய் தொடர்ந்து வந்த உணர்விழையில் நழுவிவிட்ட மறுநுனியை எடுத்து என் கையில் கொடுக்கப்பட்டாவனாய், அதைப் பற்றிக் கொண்டு மூலத்தின் இருப்பை நோக்கிய என் பயணத்தின் நீட்சியில் நான் மறைந்துவிட்டேனோ?
மீண்டும் நான் சுய உணர்வு பெற்றபோது, இந்த மனிதர் என் மனதின் ஏதோ ஒரு ஆழத்தில் என்னைத் தொட்டுவிட்டிருந்ததை உணர்ந்தேன்.
கூத்துப் பற்றிய அவரது விவரிப்பும், ரசனைமிக்க அவரது ஆளுமையும் தந்த அந்த சுகானுபவம் பெற மீண்டும் மீண்டும் அவரைச் சந்தித்தேன். அவரைப் பற்றிய மதிப்பு மென்மேலும் கூடியது.
பணம், பொருள் பற்றிய அவரது மதிப்பீடு என்னை ரொம்பவும் பிரமிக்கச் செய்திருந்தது.
ஒருமுறை தெருக்கூத்தை பற்றிச் சொல்லும்போது சொன்னார்,
”மனுஷ இருப்புக்கான அர்த்தமும் மேன்மையையும் இந்தக் கூத்து சாதாரண ஜனங்களுக்கு அவர்களோட வாழ்கைய ஒட்டிய இயல்பான வழியில் உணர்த்துதுங்க தம்பி. கதிர், காவடி, கரகம், தெருக்கூத்து இப்படிப்பட்ட நமது கிராமியக்கலைதான் தமிழர்களோட உண்மையான வாழ்க்கையப் பிரதிபலிச்சிகிட்டிருந்திச்சு. சினிமாக்காரங்களால கலாச்சார சீரழிவு வர்ர வரைக்கும்.”
அவர் சொல்லி முடிக்கும் முன் வழக்கம்போல் தனக்கும் சொல்ல ஏதோ இருக்கின்றது என்பதுபோல் மயில்வாகனம் குறிக்கிட்டார்.
”என்னங்க தம்பிரான். இந்த தெருக்கூத்து ஆடுரவுங்களும் வயித்துப்பாட்டுக்குத்தானே ஆடுராங்க. அந்தச் சினிமாக்கார கூத்தாடிப் பசங்களும் வயித்துக்குத்தானே ஆடுரானுங்க. இதுல என்ன பெரிய கலைஞன் கிலைஞனு பம்மாத்து பண்றிங்க…” என்று வெற்றிலைச்சாறு சட்டையில் வடியச் சொல்லி முடித்தார்.
”என்னய்யா சொன்னிங்க!” என்று கணீரென்று உச்சஸ்தாயில் கேட்டவாறு வேகமாக கழுத்தைத் திருப்பி ஜோசியரைச் சுட்டெரிப்பது போன்ற ஒரு பார்வை பார்த்தாரே பார்க்கனும்.
அந்தத் திரும்பலில் அவரது பிடரி தவழ்ந்து தோள்களைத் தொட்டுக்கொண்டிருந்த சுருண்ட பொன்னிற முடிகள் காற்றில் அலையாக எழுந்து அசைந்து அமர்ந்தது. கழுத்தைச் சுற்றி கர்ஜிக்கும் ஒரு சிம்மத்தின் சாயல் தெரிந்தது.
”போயும் போயும் அந்த சினிமாக்காரங்களோடபோய் எங்க கூத்தாடிகளை ஒப்பிட்டு பேசிட்டிங்களேயா. கூத்தாடிக வாழ்க்கையையே கூத்துக்கு அர்ப்பணிச்சவுங்க. காசுக்கு இல்ல. காசு இல்லாட்டியும்கூட கோவிலுக்காக… அந்த சனங்களுக்காக… கிராமத்துக்காக… கலைக்காக நாங்க வேசம் கட்டுவோம். ராத்திரி பூரா பட்டினி கிடந்தும் சோடாவை குடிச்சிக்கிட்டு கூத்து நடத்துவோம். காசு சம்பாதிக்க வேற எத்தனையோ வழி இருக்குய்யா. கூத்துல எவனும் காசு சம்பாதிக்க முடியாது. இந்த சினிமாக்காரனுங்கள காசு வாங்காம நடிக்கச் சொல்லுங்க பார்ப்போம். கலைஞன்னா யாருய்யா? ஆருய்யா கலைஞன்? இந்த கிராமிய கலைகள் அழிஞ்சிட்டுப் போனாலும் எங்க உயிரை கொடுத்து காப்பாத்திக்கிட்டு இருக்கோமே நாங்க… இந்த கூத்தாடி கலைஞன்களா? இல்ல கோடிகோடியா சம்பாதிச்சுட்டு அரசாங்கத்துக்கு வரி கட்டாம, கருப்பு பணத்தை பதுக்கிகிட்டு, வாழ்க்கையிலும் நடிக்கரானுங்களே அந்த சினிமாக்காரங்க கலைஞன்களா? கலைஞன்னா கலையை வளர்க்கிறவன்ய்யா. விக்கறவன் இல்ல. இந்த கூத்தாடிங்க கால் தூசு பெறுவானுங்களாயா இந்த சினிமாக்காரனுங்க. நாங்கதாய்யா நிஜம். அவனுங்க நிழல். நாங்க மக்கள்கிட்ட எங்க கலையை அர்ப்பணிக்கின்றோம். அவனுங்க நடிப்ப விக்கறானுங்க. அவனுங்களுக்கு எல்லாமே காசுதான். எங்களுக்கு காசு எங்க கால் தூசு.”
வெகுண்டு எழுந்து பேசும் அவரது ஒவ்வொரு சொல்லும், அதற்கு அவர் முகம் காட்டும் பாவங்களும், அவரது முறுக்கி நின்ற மீசையின் கம்பீரமும் … அவர் நிஜமாகவே மேலும் சினம் அடையவேண்டும் போல் இருந்தது. எனக்கு அது அறச்சீற்றம். அந்தக் கலைஞனை அணு அணுவாக ரசித்தேன். இப்படியாக அவரது உன்னதமான ஆளுமையின் ஈர்ப்பில் லயித்திருந்த ஒரு தருணத்தில்தான் அவர் என்னிடம் கேட்டார், ”தம்பி… ஒரு முக்கியமான விஷயமாகத்தான் மலேயா வந்தேன். அதைப்பத்தி உங்ககிட்ட சொல்லனும்தான். அது ஒரு அறுவது எழுபது வருஷக்கதை. பின்னாடி சொல்றேன். இப்போதைக்கு அவசரமா ஒரு ஐயாயிரம் வெள்ளி தேவைப்படுது. தர்ரீங்களா? திரும்பிப் போறதுக்குள்ள தந்துடுவேன்.” என்றார்.
அவரின், அவரது தீட்சண்யம் உமிழும் கண்கள் தேஜஸில் கட்டுண்டுக் கிடந்த எனக்கு, அந்த நேரத்து மனநிலையில் அவருக்கு எவ்வளவு வேண்டுமானாலும் தர சம்மதம்தான். அந்த உன்னதமான மனிதரின், கலைஞனின் காலடியில் என்னையே மானசீகமாகச் சமர்ப்பித்துவிட்ட பின் காசு என்ன பெரிய காசு என்றுதான் எண்ணினேன்.ஆனால் அடுத்த சில நாட்களில் அவர் என்னிடம் சொல்லாமல் திடீரென்று மயில்வாகனத்திடம் மட்டுமே சொல்லிவிட்டு தமிழகம் புறப்பட்டு போய்விட்ட செய்தி எனக்கு பெருத்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் தந்தது.
அந்த மயில்வாகனம், “எனக்கு அந்த தம்பிரான தெரியாதுங்க. இங்க என வீட்ல ஒரு வாரத்துக்கு இருக்கட்டும்னு நம் இபுராஹிம் ராவுத்தர் சொன்னதுனால் சரினுட்டேன். எனக்கு அப்ப இருந்தே ஒரு சந்தேகம். ஒரு மாதிரியான பேர்வழியா தெரிஞ்சது. பணம் வேற கொடுத்துட்டீங்களா. உங்களுக்கு அட்டமத்து சனில நடக்குது. காசு பணம் அப்படித்தான் விரயமாகும். சனி பகவானுக்கு ஒரு சின்ன சாங்கியம் பண்ணி கழிச்சிடுவோம். ஐநூறு அறுநூறு செலவானாலும் பரவாயில்லை. என்ன சொல்றிங்க. செஞ்சுருவோமா…” என்றார்.
‘நான் அந்த முத்துசாமி தம்பிரானுக்கு இன்னுமொரு ஐயாயிரம் தருவேனேயொழிய, அந்த சனி பகவானுக்கோ அவனச் சொல்லி என்னை
பயமுறுத்தர உமக்கோ அஞ்சு காசு தரமாட்டேன்.’ என்று சொல்லத் தோன்றியது. பேசாமல் வந்து விட்டேன்.
நாளாக நாளாக எனக்கு முத்துசாமி தம்பிரான் மேலிருந்த நல்லபிப்பராயம் குறைந்துகொண்டே வந்தது. மனைவியின் துத்தலான பேச்சு எரிச்சல் தந்தாலும், அவ்வப்போது அவள் சொல்வதிலும் நியாயம் இருப்பதாகவே தோன்றியது.
‘சரி…மனுஷன் ஏதோ ஒரு பணக்கஷ்டத்தில் இப்படி நம்மகிட்ட நடந்துகிட்டாரு.” என சமாதானம் சொல்லிக்கொண்டாலும், ‘என்ன இருந்தாலும் அவர் கடன் என்றும் திருப்பித் தர்ரேன் என்றும் சொல்லியிருக்க வேண்டாமே’ என்றே எண்ணங்கள் தோன்றியது.
அவர் எனது பலஹீனத்தை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ளுமாறு நான் நடந்துக்கொண்டது எனக்கு கஷ்டமாகவும் இருந்தது. பணம் என்பதைக் காட்டிலும் அந்த நட்பு என்பது கசந்துப்போனதுதான் எனக்கு வேதனை.
‘என்னால் மனிதர்களை அனுமானிக்க முடியவில்லையே’ என்ற கசப்பான எண்ணம் என்னை நெருடிக்கொண்டிருந்த வேளையில்தான் அதை நிரூபிக்கும் வண்ணம் அவரிடம் இருந்து ஒரு கனத்த கடித உறையுடன் கூடிய சில தாஸ்தாவேஜ்களுடன் ஒரு கடிதமும் வந்தது.
அன்புள்ள தம்பிக்கு,
வணக்கம். முத்துசாமி தம்பிரான் எழுதிக்கொண்டது. உங்ககிட்ட முதல்ல மன்னிப்புக் கேட்கணும். அப்புறம் நன்றி சொல்லணும். அதுக்கு அப்பறம் ஒரு உதவி கேட்கனும். என்னை மலேயாவுக்கு கூட்டி வந்த இபுராஹிம் ராவுத்தர் திடீரென்னு ‘புறப்படுய்யா’ என்று வந்து நின்று விட்டார். அவரை விட்டால் எனக்கு வழித்துணை வேறு ஆள் இல்லை. சரிதான் என்று துண்டை உதறி தோளில் போட்டுக்கிட்டு உங்ககிட்டகூட சொல்லாம கொள்ளாமல் புறப்பட்டு வந்துவிட்டேன். அதுக்கு மன்னிக்கவும்.
அடுத்து எனக்கு வைத்தியம் செஞ்சதுக்கு, கேட்டவுடனேயே பணத்தை தூக்கி கொடுத்ததுக்கும் நன்றி சொல்லணும், நன்றிங்க தம்பி. கடைசியா ஒரு உதவி செய்ய வேணுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
இது ஒரு எழுபது வருஷக் கதை. என்னுடைய தகப்பனாரு அந்த காலத்திலே கோலாலும்பூர்ல அம்பது அறுபது கறவை மாடுகளை வச்சி வாழ்ந்துகிட்டு இருந்தவரு. ஊர்ல வந்து சீக்கா கிடந்து போறதுக்கு முன்னால் இந்த சொத்து சம்பந்தமான பத்திரத்தை என்கிட்ட கொடுத்து. முடிஞ்சா ஒரு நடை மலாயா போய் இந்த சொத்தை வித்துட்டு வந்துடுப்பா என்று சொன்னாரு.
சொல்லிவிட்டு அவரும் போய் எத்தனையோ மாமாங்கமாச்சு. டாக்டர் கால் புண்ணுக்கு ஆபரேசன்தான் வழினு சொன்னதுனால ”கொஞ்சம் பொறுங்கைய்யா…மலாயா போய் சொத்தை வித்துட்டு வந்திடரேன்னு” வந்தேன். அங்க வந்ததும் போய் பார்த்தேன். கோலாலும்பூர் டவுன்ல நட்டநடு சென்டர்ல பிளாட்டா இருக்குது. சுத்தி வானளாவிய கட்டிடங்களுக்கு மத்தியில் இது. அதுல நாலஞ்சு தமிழங்க குடும்பமா இருந்துகிட்டு வராங்க. ரொம்ப வருசமா வரியும் கட்டிகிட்டு வர்ராங்கங்களாம். ஏதோ கொஞ்சம் கொடுத்தா போய்டுவாங்களாம். இந்த இடம் பல லட்சத்துக்கு விலை போகும்னு சொன்னாங்க.
அதனாக ஒரு வக்கீல பார்த்தேன். முன்பணமா ஐயாயிரம் வெள்ளி கேட்டாரு. அதத்தான் உங்ககிட்ட வாங்கினேன். அப்புறம் வக்கீல் சார் மாறி மாறி பேசினாரு. அவர் பேருக்கு பவர் எழுதிக் கேட்டாரு. உங்களுக்குத்தான் தெரியுமே வக்கீல்களை பத்தி. எனக்கு மனசு ஒப்பல்ல. பேசாம வந்துட்டேன்.
உங்கள நம்பலாம்ன்னு உள் மனசு சொல்லிச்சு. இத்துடன் அந்த நில பத்திரமும், உங்கப் பெயருக்கு பவர் ஆப் அட்டர்னியும் எடுத்து அனுப்பி இருக்கேன். அந்த இடத்தை ஒங்களால விக்க முடியும்னு நம்பறேன். வித்து அங்க இருக்கற நம்ம சனங்களுக்கு ஏதாவது நியாயமா கொடுத்திடுங்க. அந்தப் பாவப்பட்ட மலாக்கா செட்டி சனங்களுக்கு, அந்த திரௌபதி அம்மன் கோவிலுக்கு எதனாச்சும் கொடுங்க.
மயில்வாகனத்துக்கு கொஞ்சம் கொடுங்க. எனக்கு பத்து பதினைஞ்சி நாள் சோறு போட்டு துணியும் வாங்கி கொடுத்தவரு. மீதிய அங்க இருக்கிற நம்ம ஏழப்பட்ட சனங்களுக்கு தர்ம காரியங்களுக்கு பயன்படுத்துங்க.
எனக்கு ஏன் அந்த பணத்தை அனுப்ப சொல்லவில்லைனு நினைக்கறீங்களா? எனக்கு பிள்ளை, குட்டி,பொண்டாட்டினு எதுவும் இல்லை. போன மாசம்தான் ஆபரேஷன் பண்ணி காலை எடுத்தாச்சி. இன்னும் எத்தனை நாட்களோன்னு எண்ணிகிட்டு இருக்கேன். எனக்கு எதுக்கு அவ்வளவு பணம். பணம் காசு என் கால் தூசுன்னு சொன்னேனே. இப்ப காலே இல்ல ஆனால் காசு நிறையவே இருக்கு. வேண்டாம்னாதான் அது வரும். வேணும்னு லோலோனு அலைஞ்சா அது வராது. கவனிச்சிங்களா!
சொல்ல மறந்துட்டேன் பார்த்தீங்களா… அதுல உங்க ஐயாயிரத்தையும் எடுத்துக்குங்க. நீங்க எப்ப இங்க வர்ரீங்க? நீங்க வர்றவரைக்கும் நான் இருப்பேனான்னு தெரியல. என்னை நீங்க ரொம்ப ரசிச்சதா சொன்னீங்க. என்னை எழுபது வருசமா ரசிச்சாவுங்கள்ள என் கடைசி ரசிகன் நீங்கள்தான்.
நன்றிங்க தம்பி
வணக்கம்
இப்படிக்கு
‘கூத்தாடி’
முத்துசாமி தம்பிரான்.
