அந்தக் காட்சி அவனுக்குத் தெய்வதரிசனம்போல.
வயல் வெளியில், கீழ்க்காற்றில் அல்லாடுகின்ற நெற்கதிர்களில், மேலோட்டமாகப் பார்வையை ஓட்டிக் கொண்டு போனால் கீழ்வானின் சூரிய ஒளியில், அதன் கண்ணாடி மூடிகள் தகதகக்கத் தன் வீட்டின் வாசற்கதவண்டை உட்கார்ந்து கொண்டு பார்க்கிற இவனுக்கு அது தெய்வதரிசனம்போல.
பனி சொட்டுகிற காலை மலர்களைப் பக்தியோடு பறித்து இஷ்ட தெய்வத்திற்கு ஆராதித்தபிறகு எட்ட நின்று பவ்வியத்தோடு பார்க்கிற ஓர் அடியார்போல் இவன் அதைப் பார்த்துத் தனக்குள்ளே மென்னகை கொண்டான். அடுத்த கணம் வாய்விட்டுச் சிரித்து விட்டான்.
“அட, என்ன சிரிப்புப் பொத்துக்கினு வருது ஐயாவுக்குக் காலையிலே.” எட்டு மாதச் சிசுவை வயிற்றில் சுமந்தபடி காலைச் சூரியனை விடவும் பிரகாசம் கொண்ட முகத்தவளாக அவன் மனைவி மசக்கைக்காரி உள்ளிருந்து குரல் கொடுக்கிறாள்.
இவன் லட்சியம் பண்ணவில்லை. உள்ளுக்குள் பண்ணிக் கொண்ட கனவுகளை நினைத்துப் பார்த்துச் சிரித்தது போக மீண்டும் கனவு நினைவுகளை ஆரம்பத்திலிருந்து நினைத்துப் பார்க்க வேண்டும். வாசற்படியின் புறத்தே சாய்ந்தபடி கால்களை இடுக்கிக் கைகளை அதில் இட்டுச்சுகமாய் உட்கார்ந்து கொண்டான். ஆற்றில் குளிர்மொண்டு நாற்றங்காலில் சலித்துக்கொண்டு அருமையான மென்காற்று வாகாக வீசியது.
பெங்குளுவின் நீலநிற மோரிஸ்மைனர் அங்கு வந்து நின்றதுமே இவனுக்குள் ஓர் பரபரப்பு ஏற்பட்டது. எப்படியும் அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது என்ற முடிவோடு அந்தத் தொலைபேசிக் கூண்டை நோக்கி ஓடினான். அதற்குள் பெங்குளு கூண்டுக்குள் புகுந்து கண்ணாடிக் கதவைச் சாத்திக்கொண்டார்.
இவன் வெளியிலே நின்று அவரை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவர் எண்களைச் சுழற்றுவதையும் இருபதும் பத்துமாகக் காசுகளைப் போடுவதும் அதற்குப் பிறகு கொஞ்ச நேரம் மௌனமாக நின்று கொண்டிருந்துவிட்டு வெள்ளைப் பட்டன் ஒன்றை அழுத்தி ரிசீவரைக்காதோடு வைத்து ஊமையாய்ப் பேசுவதையும் இவன் வெளியில் நின்றபடி உற்றுக் கவனித்தான். அவருடைய தாடை அசைவுகளையும் கை அசைவுகளையும் கண் இமைக்காமல் பார்த்தான்.
இந்த அற்புதக் கூண்டுக்குள் ஓர் அதிசயம் நிகழ்ந்து கொண்டிருப்பது போலவும் அதற்கு வெகு அண்மையில் தான் இருந்தும் அந்த அதிசயத்தில் அண்டாமல் எங்கோ ரொம்பவும் பின் தள்ளப்பட்டது போலவும் இவனுக்குள்ளே ஒரு விந்தையான உணர்வு இவனை ஆட்கொண்டு, அந்த அதிசயத்தில் அமிழ்ந்து அற்புதங்கள் நிகழ்த்திக்கொண்டிருக்கும் அந்த மனிதரை – கட்டிய கைகளோடு. கடைவாயில் ஒழுகுகிற சொள்ளையும் உற்று உணராமல் பார்த்துக்கொண்டு நின்றான்.
ஒரு ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு அவர் வியர்வையைத் துடைத்துக்கொண்டு வெளியில் வந்தபோதும் இவன் திக்பிரமை நீங்காமல் கூண்டுக்குள்ளேயே ஆழ்ந்திருந்தான். மானசீகமாகத் தானே அந்த அற்புதத்திற்குள் அதிசயம் நிகழ்த்திக் கொண்டிருப்பதாக இவனுக்குப் பிரமை.
“என்ன துலுக்காணம்” பெங்குளுவின் அந்தக் குரல் இவன் நினைவுகளைச் சொடுக்கி மீளவைத்தது. “ஏம்பா இங்க நின்னுக்கிட்டு இருக்க. வேலைக்குப் போகல…”
தாடையில் ஒழுகிய சொள்ளைத் துடைத்துக் கொண்டே ரொம்பவும் அசட்டுத்தனமாக இவன் சிரித்தான். “ஏம்பா… என்ன வேணும்”
இவன் மிகவும் கூச்ச முற்று நின்றான்.
“சொல்லேம்பா”
“இதுல நானும் பேசனும். கொஞ்சம் சொல்லித் தாங்க…”
இதனைக் கேட்டுப் பெங்குளு வாய்விட்டுச் சிரித்துவிட்டார். “எங்கேப்பா பேசப்போறே?”
“சும்மா பேசனும்..
“சும்மா எங்கேப்பா பேசறது…? எப்படிப் பேசறதுன்னு ஒனக்குச் சொல்லிக் கொடுக்க எனக்கு அவகாசம் இல்ல. நான் டவுனுக்குப் போய்க்கிட்டு இருக்கேன். இன்னொரு நாளைக்குப் பார்ப்போம்” என்றபடி காரை நோக்கிப் போய்க் கொண்டிருந்தவர் கொஞ்சம் பொறுத்து இவனைத்திரும்பிப் பார்த்து, “ஏதாவது அவசரம் அவசியம்னா என்ன வந்து கூப்பிடு;நான் வந்து பேசறேன்.”
கார் போய்விட்டது. துலுக்காணம் ரொம்பவும் ஏமாற்ற மடைந்தான். பெங்குளுவின் கார் போய் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தவன் வீடு திரும்ப எத்தனித்தான். திடீரென்று தொலைபேசிக் கூண்டை நோக்கி ஓடினான். அவன் அதன் கண்ணாடிக் கதவுகளில் முகம் புதைத்துக்கொண்டு உள்ளே பார்த்தான். அந்தப் புதையலில் அவனுடைய மூக்கும் வாய் உதடுகளும் மோவாயும் கண்ணாடியோடு பதிந்து ஒட்டிக்கொள்ள, மண்ணால் செய்த பொம்மை முகம் நசுங்கியது போல இவன் உள்ளே பார்த்தான். கறுப்பாய் இருக்கும் ரிசீவர்; அதோடு சுருண்டு சுருண்டு போய் எங்கோ மறைந்து போகிற ஒயர்; சின்னச் சின்ன வட்டத்துக்குள் எழுதிய சக்கர உண்டி போலப் பக்கத்தில் ஒரு பெட்டி; வெண்மையாய்ப் பளபளக்கிற ஏ பட்டன்; அடுத்த பக்கத்தில் இருக்கும் பி பட்டன், மேலே வரி வரியாய் எழுதி ஒட்டிய பெரிய பலகை. இவற்றையெல்லாம் மீண்டும் மீண்டும், மீண்டும் மீண்டும் துலுக்காணம் பார்த்தான்; பார்த்துக்கொண்டே இருந்தான். மறுபடியும் தன்னை மறந்தான். மானசீகமாய் ரிசீவரைப் பற்றிக்கொண்டு வெகு சாவதானமாக யாரோடோ இவன் தொலைபேசியில் வார்த்தை ஆடினான். எங்கிருந்தோ வந்த ‘குபோட்டோ’ ஒலி இவனைத் தன்னிலைக்கு மீட்டது. இவன் அந்த மானசீக நினைவைத் தனக்குள்ளே எண்ணிச் சிரித்துக்கொண்டான் சொள் ஒழுகுவதும் தெரியாமல்.
“என்னங்க இன்னைக்கு அறுவடைக்குப் போகலையா. இப்படியே ஒக்காந்திருந்தா விடிஞ்சாப்பலதான். ”
துலுக்காணத்தின் மனைவி ரொம்பவும் சலித்துக்கொண்டு நடக்க முடியாமல் நடந்து வந்து இவன் பக்கத்தில் கொஞ்ச நேரம் நின்று இவன் முகத்தையும் அவன் பார்வையோட நிலைத்திருக்கிற தொலைபேசிக் கூண்டையும் ஒருமுறை மாறி மாறிப் பார்த்து விட்டு உள்ளே போனாள்.
.
அவளைக் கொஞ்சமும் சட்டை பண்ணாமல் இவன் வாயிலிருந்து ஒழுகுகின்ற சொள்ளைத் துடைத்துக் கொண்டு மறுபடியும் சிரித்துக்கொண்டான். மேல் வானத்தில் கருமேகங்கள் திரளத்தொடங்கின. மென்காற்றின் தண்மை கொஞ்சம் அதிகமாகிப் பனியைத் தூவினாற்போல் தூவிச் சென்றது.
“டே… டே… டே டேய் துலுக்காணம்” என்று அவனுடைய சகாக்களில் ஒருவன் வரப்புமேல் நின்றுகொண்டு இவனைக் கூப்பிட்டதும் குனிந்து நாற்று நட்டுக் கொண்டிருந்தவன் அந்த வாக்கிலேயே வரப்புப் பக்கம் ஏறெடுத்துப் பார்த்தான். சகா ஒருவன் கை அசைத்துக் கூப்பிட்டதும் நாற்றைக் கையில் பிடித்துக் கொண்டே தண்ணீரும் சேறும் சிதற நாற்றங்காலில் ஓடி வரப்புமேல் ஏறி, இவர்களை நோக்கி ஓடி வந்தான். இவர்களை அவன் நெருங்கிய போது அவன் பெருமூச்சு வாயில் வெளிப்பட்டு அதன் உந்துதலால் உமிழ்நீர் கடைவாயில் வழிந்து அவனுடைய ஐந்தாறு நாள் முகவாய்த் தாடி மேல் ஓடியது… அதைத் துடைக்கிறேன் என்று இவன் சேற்றுக்கையோடு இடது கையின் புறத்தால் ஒரு இழு இழுக்க அவன் புறங்கையில் இருந்த சேறெல்லாம் கீழ் உதட்டிலும் முகவாய்க் கட்டையிலுமாக ஈஷித்துக் கொண்டான்.
“அடே துலுக்காணம், இன்னிக்கு நம்ம டிஸ்ரிக் ஆபீஷர் வரார். ஐந்து மணிக்கு மேல் வர்றார்னு நம்ப ‘சிடாங்’ சொல்லச் சொன்னார். வழக்கம்போல் பாலாய் ராயா மண்டபத்தைக் கூட்டிப் பெருக்கி நாற்காலியெல்லாம் எடுத்துப் போட்டுடு… பெங்குளு ஊட்டுல மேசைத் துணி வாங்கிவந்து ஒரு பூச் செடியும் வச்சிடு. மத்த ஆளுங்கெளுக்கும் சேதியைச் சொல்லிப்புடு. எல்லாம் மனசுல ஆவுதா?” என்று அவர்களில் ஒருவன் சொல்லிச் சென்றான்.
இதெல்லாம் ஒன்றும் புதிய விவகாரம் இல்லை என்பது போல தலையைச் சொல்லுக்குச் சொல் ஆட்டிக்கொண்டு வந்த துலுக்காணம் வாயைத் திறந்து ஏதோ கேட்க முயன்று ‘வேணாம் அது என்னத்துக்கு நமக்கு’ என்று நினைத்துச் சுருண்டு கொள்வதுபோல முடங்கிப் போனான்.
ஆனால் இவனுடைய முகபாவங்களையும் எத்தனிப்பையும் கண்டு புரிந்துணர்வோட அவர்களில் ஒருவன் சொன்னான், “நம்ம ‘பாரிட்டிக்கு’ டெலிபோன் போடறத்துக்கா நம்மாளுங்க கேக்கப்போறாங்களாம். டி. ஓ. வேணுமானு கேட்டா நீயும் ஆமான்னு சொல்லு… என்னா?” என்றபடியே முன்னே போய்க்கொண்டிருந்த சகாக்களோடு இவனும் காலை இழுத்துப்
போட்டுக் கொண்டு போய்ச்சேர முயன்றான்.
துலுக்காணம் அவன் பேசியதையே என்னவென்று புரிந்து கொள்ளாமல் போகிற அவனையே பார்த்துக்கொண்டு நின்றான். அவன் கையில் பிடித்திருந்த நாற்றில் நீர் சொட்டிக் கொண்டிருந்தது.
அன்று மாலையில் நடைபெற்ற கூட்டத்தில் பல விஷயங்களுக்கு மத்தியில் டெலிபோன் விவகாரம் அடிபட்டபோது துலுக்காணம் உஷாரானான். அப்போது தனக்கு யாராவது விளக்கிச் சொல்லக்கூடுமென்று அவன் எதிர்பார்த்தான். அப்படியொரு தேவையை அங்குக் கூடியிருந்தவர்களில் பலரும் ஒரு ஒரு காரணம் சொல்லி வற்புறுத்தியதையும் . இவன் கேட்டான். நெருப்புக்கும் வெள்ளத்திற்கும் இன்னும் பிற அவசரத்திற்கும் தேவைப்படுகிற அந்தப் பொருள் குறித்து இவன் யாரையாவது கேட்க வேண்டுமென்று நினைத்தான். பக்கத்தில் இருந்தவரை “அது என்ன” என்று கேட்டான்.
“சும்மா இரப்பா. உனக்கு அதெல்லாம் தெரியாது” என்று அவனை அடக்கிவிட்டு, வாயைத் திறந்துகொண்டு டி. ஓ. பேச்சில் ஆழ்ந்து போனான்.
“அது ஒன்றும் பெரிய காரியமில்லை. கையெழுத்துப் போட்டு ஒரு மனுவைத்தாக்கல் செய்தால் மற்றதை நான் கவனித்துக் கொள்வேன். நம்முடைய பெங்குளுவிடம் நீங்கள் மனுவைத் தயாரித்துக் கையெழுத்திட்டுக் கொடுத்து அனுப்புங்கள்” என்று கூறி முடித்துக்கொண்டு டி. ஓ. புறப்பட்டார்.
எல்லாரும் போன பிறகு நாற்காலிகளை மடக்கி அடுக்கிக்கொண்டே துலுக்காணம் மிகுந்த யோசனையில் ஆழ்ந்தான். ‘அது என்ன டெலிபோன் அது எப்படி இருக்கும்’ இவனுக்கு ஒன்றும் மனத்தில் புரியமாட்டேன் என்கிறது. திரிதிரியாய் ஏறிக் கவிழ்ந்துகொள்கிற புகையைப் போல் மனத்தில் கேள்விக் குறிகளாய் நிறைந்து கொண்டே போகிறதேயொழிய, நுனியோ அடியோ புலப்படாமல் எல்லாமும் கலங்கிப் போகிறது.
மேசை விரிப்பைச் சுருட்டிக்கொண்டு துலுக்காணம் பெங்குளுவின் வீட்டை நோக்கி நடந்தான்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு பெங்குளு கூப்பிட்டார் என்று யாரோ ஒரு பொடியன் மத்தியான வேளையில் வந்து சொல்ல இவன் பாதிச்சாப்பாட்டில் எழுந்து கையை அலம்பினான்.
“என்ன அவசரம் சாப்பிட்டுப் போகிறது. தலையா முழுகிடும்” என்று எரிச்சல் கொள்கிற மனைவியின் வார்த்தைகளைக் காதில் வாங்காமல் பெங்குளுவைப் பார்க்கப் புறப்பட்டான்.
“என்ன துலுக்காணம் எப்படி இருக்கே, உனக்கு ஒரு நல்ல செய்தி. வா, உட்காரு” என்றபடி இவனைக் கூப்பிட்டு உட்காரச் சொன்னார். இவன் பவ்வியமாகக் கைகளைக் கட்டிக்கொண்டு ஒரு ஓரமாய் ஒதுங்கி நின்றான். இவனை என்ன சொல்லியும் உட்கார வைக்க முடியாது என்று தெளிந்த பெங்குளு ஒரு கடிதத்தைக் காட்டியபடியே “இங்க பார்த்தியா, பாரிட்ல டெலிபோன் போடுறதுக்கு உத்தரவு வந்திருக்கு. டெலிபோன் கூண்டை உன்னுடைய நெலத்தில்தான் போடப்போறாங்களாம். அதுதான் மையமாய் இருக்காம். ரோட்டு ஓரத்தில போடப் போறாங்களாம், உன்னுடைய வீடு கூப்பிடு தூரத்திலதானே இருக்கு. நீயும் அங்கிருந்தபடியே அதை ஒரு பார்வையும் பார்த்துக்கலாம். நெலத்த பயன் படுத்திக்க அனுமதி கேட்டுக் கடிதம் வந்திருக்கு. நஷ்ட ஈடு குடுப்பாங்க. நீ என்ன சொல்ற.” என்று நிறுத்தினார் பெங்குளு.
ஒரு புளகாங்கிதம், மயக்கத்தில் கேட்டுக்கொண்டு வந்த துலுக்காணம், நஷ்ட ஈடு என்றவுடன் முகம் சுண்டினான். ‘நாலுபேருக்கு பயன்படற ஒரு காரியத்துக்கு நாம் துணை இருப்போமே. அத உட்டுப்புட்டு நஷ்ட ஈடா?…’
“அதெல்லாம் வேணாங்க…” என்ற எண்ணங்களை மட்டும் வெளியிட்டான்.
“என்ன வேண்டாம்” பெங்குளு திடுக்கிட்டுக் கேட்டார்.
“இல்லைங்க… இல்லை நஷ்ட ஈடு வேண்டாங்க.“
“இல்லப்பா, நீ வேணும்னாலும் வேண்டாம்னாலும் அரசாங்காத்திட்டப்படிதான். நடப்பாங்க, நீ சம்மதிக்கிறியா” என்று முடிவுக்கு வந்து கேட்டார் பெங்குளு.
“இதுல என்னங்க என்னைக் கேட்டுக்கிட்டு. நாயமா சம்மதிக்கிறேனுங்க.”
“சரி போ.”
துலுக்காணம் நெஞ்சுகொள்ளாத மகிழ்ச்சியோடு வீடு திரும்பினான். அந்தச் சேதியை மனைவியிடம் சொல்ல வேண்டும் என்று அவன் பரபரத்துக் கொண்டே நடந்தான்.
இவன் சொல்லி முடித்ததும் அவள் கேட்டாள்,. “அது என்ன டெலிபோன்?”
இவன் மௌனமாக அவளைப் பார்த்தான். “அதுதான் எனக்குத் தெரியல”
வீட்டிற்கு முன்னால் தூண்கள் வந்து இறங்கிய போதும் சிமிண்டைக் குழைத்து, சுவர் எழுப்பிக் கண்ணாடி வைத்து, கூலிகள் கூண்டு கட்டிய போதும் இவன் கூடமாட இருந்து உதவினான். கடைசியாகத் தொழில் நுணுக்கர்கள் தொலை பேசியைக் கொண்டு வந்து பொருத்தியபோது இவன் ஒரு சாத்வீகம் பொருந்திய தேரைக் கண்டு திக்பிரமை கொள்கிற பக்திமான் போல மிக மருட்சியோடும் பய பக்தியோடும் பார்த்தான். இவனுக்குள் டெலிபோன் என்கிற திரி திரியான புகை மண்டலம் ஒரு முடிவுக்கு வருவது போலவும் இருந்தது. வராமல் போவது போலவும் இருந்தது. அதன் பிறகு ஓய்வு கிடைக்கிற போதெல்லாம் தன் வீட்டு வாசற்கதவண்டை உட்கார்ந்து கொண்டு அதை வேடிக்கை பார்த்தபடி ஏதாவது கற்பனையில் மிதப்பது இவனுக்கு வழக்கமாய்ப் போயிற்று.
“அட என்னாச்சி உங்களுக்கு. சாரல் அடிக்கும்போல இருக்கு. அப்படியே உட்கார்ந்திட்டு இருந்தா? இன்னைக்கு அறுவைக்குப் போகலைன்னா வர்ற மழையில எல்லா மணியும் கொட்டிப்போகும். தோ, மழை எறங்கிடுது. இன்னைக்கு நீங்க போய் விடிஞ்சாப்லதான்.”
துலுக்காணம் கதவண்டை உட்கார்ந்தபடியே கண்ணுக் கெட்டுகிற வரை சுற்றிவர ஒரு பார்வையை ஓட்டினான் . கருமேகங்கள் திரண்டு தூரத்தில் மை இழுத்தாற் போல மழைபொழிவதையும் அதன் குளிர்காற்று இங்கு அடிப்பதையும் அதனோடு இரண்டொரு மழைத்துளிகள் சடசடப்பதையும் உணர்ந்து பார்த்தான். மேற்குப் பக்கம் சூரியக் கதிர்கள் ஒளிப்பட்டைகளை விஸ்தரித்து வீசிக்கொண்டிருந்தன. இந்த விஷயம் ஒன்றும் வித்தை அல்ல என்பது போல அவன் மறுபடியும் உடலைக் குறுக்கி இறுக்கிக்கொண்டான்.
அன்றைக்கு ஒருநாள் காலையில் இப்படித்தான் படிக்கட்டில் உட்கார்ந்தபடியே அவனுடைய தெய்வத்தைத் தரிசனம் கண்டு கொண்டிருந்தான் கோப்பி குடித்தபடியே. யாரோ சைக்கிளில் வந்து டெலிபோன் கூண்டண்டை நிறுத்திவிட்டு உள்ளே நுழைவதைப் பார்த்தான். குடிக்கிற கோப்பிக் குவளையை அப்படியே போட்டுவிட்டு ஒரே ஓட்டமாய் மனம்துள்ள அதன் அருகே போய் நின்றுகொண்டு உள்ளே பார்த்தான். பள்ளி மாணவன் போல் தோன்றிய பையன் ஒருவன் மிகலாவகமாக எண்களைச் சுழற்றிவிட்டுப் பேசத் தொடங்கினான். துலுக்காணம் வெளியில் நின்றான். பையன் மேலும் காசு போட்டுவிட்டுக் கால் மாற்றி நின்றுகொண்டு தொடர்ந்தான். துலுக்காணம் மண் தரையில் குத்துக்கால் இட்டுக்கொண்டு உட்கார்ந்தான் . இவனை ஒருமுறை எரிச்சலோடு பார்த்துவிட்டுப் பையன் தொடர்ந்தான்.
ஒரு வகையாய் முடித்துவிட்டு அவன் வெளியில் வந்தபோது துலுக்காணம் அவனை நெருங்கி, “இவ்வளவு நேரம் யாருக்கிட்ட உள்ள பேசின” என்றான்.
இவனுடைய அநாகரிகக் கேள்வியில் ரொம்பவும் கோபமுற்று “உனக்கென்ன அதைப்பற்றி” என்று சொற்களை நரநரத்தான் பையன்.
துலுக்காணம் ஒரு கணம் ஆடித்தான் போனான். “இல்ல தம்பி இதில் எப்படி பேசறதுனு எனக்கு தெரியல. யாருக்கிட்ட என்ன பேசறதுனு தெரியல. நான் ஒரு பாவி. எனக்குக் கொஞ்சம் சொல்லித் தரியா” என்று பையன் முன்பு இவன் யாசிப்பதைப் பார்த்துப் பையனின் நரநரப்பு அடங்கி இவனை இரக்கத்தோடு பார்த்தான்.
“சரி வா சொல்லித்தறேன். தோ இதுதான் ரிசீவர். இத கையில எடுத்துக் காது பக்கமா வைச்சுக்கணும்… குர்… குர் குர்ன்னு சத்தம் வர்தானு கேக்கணும் …” என்றபடி பையன் விஸ்தாரமாகப் பாடம் போதிப்பது போலச் சொல்லிக் கொடுத்தான். உபதேசம் பெற்றுக் கொள்கிற ஒரு பாவியைப் போலத் துலுக்காணம் மிகுந்த ஆழ்ந்த அக்கறையோடும் கவனத்தோடும் அவற்றை மனத்தில் வாங்கிக் கொண்டான். ஒரு கணம் எல்லாம் புரிந்து அது ஓர் அற்ப விஷயம்போல ‘இவ்வளவுதானா’ என்றும் தோன்றியது. மறுகணம் அவற்றைத் தெரிந்துகொள்கிற முயற்சியில் ஏற்பட்ட பிரமிப்பில் ‘அவ்வளவா’ என்றும் தோன்றியது.
“எதுக்கும் ஏதாச்சும் ஒண்ணுன்னா என்னகூப்பிடுங்க நான் வந்து உதவி செய்யறேன்” உரைத்துப் போனான் பையன். அவன் போன திசையை அவன் பார்த்துக் கொண்டிருந்தாலும், அவனுள் அவன் சொல்லிக் கொடுத்த பாடம் திரைப்படம்போல் ஓடியது. அது சில இடங்களில் வெட்டுப்பட்டது போலவும் தோன்றியது.
“பாப்பம்” என்றபடி துலுக்காணம் வீடு திரும்பினான். அவனது வயல் வெளியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவன் மனத்தில் அப்பொழுதுதான் பளிச்சென்று அந்த யோசனை தோன்றியது. பிடித்த மீன்களைப் பையில் சுருட்டிக்கொண்டு தன்னுடைய யோசனையைத் தன் மனைவியிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று துலுக்காணம் ஓட்டமாய் ஓடி வந்தான்.
அதைக்கேட்டு அவள் நகைப்பாய் நகைத்தாள், “அதெல்லாம் ஒண்ணுமில்ல. பார்வதி அக்காவ வைச்சி வீட்டுலேயே முடிச்சிக்கலாம்” என்றாள். இவன் சுருங்கிப் போனான்.
“என்னங்க, இன்னிக்கு முச்சுடும் இப்படியே ஒக்காந்துகின்னு கொறவன் மாறி வாய்க்குள்ளே சிரிச்சிகின்னு இருக்கிங்க. இங்கே ஒருத்தி வாயும் வயிறுமா நவுந்துகினு கிடக்கிறது தெரியல. ரெண்டு விறகு கட்டைகள் கொண்டுவந்து போட்டிருந்தா இப்படிக் கிடந்து நான் சாவேனா. இங்க வந்து ஒண்டியா அழணும்னு என் தலை எழுத்து” என்று முணுமுணுத்தபடி துலுக்காணத்தின் மனைவி மனம் வெதும்பினாள். குளிர்காற்று அடங்கி மழை கொட்டத் தொடங்கியது. வெறுமனே கிடந்த முன் வயல்வெளியில் தேங்கி நின்ற தண்ணீரில் ஆயிரக்கணக்கான வட்டங்களும் குமிழிகளும் தோன்றி மறைந்தன.
பின்னிரவு வேளையில் துலுக்காணத்தை அவன் மனைவி தொட்டு எழுப்பினாள். “என்னங்க. என்னங்க. வயித்த என்னமோ பண்ணுது. பார்வதி அக்காவ கூட்டிக்கிட்டு வாங்களேன்.”
துலுக்காணம் சொள் ஒழுகும் வாயைத் துடைத்துக் கொண்டு அரிக்கேன் விளக்கின் திரியை ஏற்றிவிட்டு, “பயப்படாம இரு. தோ கூட்டிக்கிட்டு வந்தர்றேன் புள்ள” என்று வரப்புமேல் ஓடினான்.
பார்வதியைக் கூட்டிக்கொண்டு இவன் திரும்பிய போது அவள் வலியினால் துடித்துக் கொண்டு இருந்தாள். பார்வதியை உள்ளே அனுப்பிவிட்டு இவன் வெளியே நின்றான். தூரத்தில் தொலைபேசிக் கூண்டு ஆறாம் பிறையில் மங்கலாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. இவன் அடிமனத்தில் யோசனை புரண்டது. ‘பாப்பம்’ என்று அமைதியானான்.
பார்வதி கதவைத் திறந்து எட்டிப்பார்த்தபடியே “டேய் துலுக்காணம் உதிரம் அதிகமாப் போவுது. வலியால பிள்ளை துடிச்சிப் போறா… எதுக்கும் பெங்குளு வண்டியைக் கூட்டிக்கிண்ணு!
ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போவோம்..” என்றார்.
“ஆங். . . “துலுக்காணம் சைக்கிளை எடுத்துக் கொண்டு பெங்குளுவின் வீட்டை நோக்கிப் போனான். போகிற வழியில் தொலை பேசிக்கூண்டை அவன் கடந்த போது அவனுக்குள் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் இந்த அவசரத்தில் அவரே வந்தால் நல்லது என்று யோசித்து அவர் வீட்டுக்குப் போனான். “இல்லையப்பா. அவர் நேத்து டவுனுக்கு மீட்டிங் போனாரு. இன்னும் திரும்பலேயே. . . ”
விஷயத்தைச் சொல்லிவிட்டுப் பதற்றத்தோடு திரும்பினான். பையனின் நினைவு வரவும் அப்படியே சைக்கிளைத் திருப்பினான். அந்தக் கொட்டும் பனியிலும் குளிர் வேளையிலும் கூட துலுக்காணம் வியர்த்துப் போனான்.
செய்தி கேட்ட அந்த வீட்டில் “அவன் நேத்தே காலேஜுக்கு டவுனுக்குப் போயிட்டானேயப்பா . … நீயே போன் பண்ணி ஆஸ்பத்திரி வண்டியை வரச்சொல்லேன்” என்றார் ஒரு முதியவர் அந்த வீட்டில் இருந்தபடியே…
இவனுக்குள் அந்த எண்ணம் உறுதிப்படச் சைக்கிளை மிதியாய் மிதித்துக்கொண்டு வீட்டிற்குத் திரும்பினான். வந்த வேகத்தில் சைக்கிளை வைத்துவிட்டுப் பார்வதியிடம், “இதோ நானே போன் பண்ணிட்டுவர்றேன்… ” என்று கையில் தட்டுப்பட்ட சில்லறைகளோடு தொலைபேசிக் கூண்டை நோக்கி ஓடினான். மனமும் கைகளும் ரொம்பவும் பரபரத்தன. தொலைபேசியை அவன் எடுத்தபோது அது ஒயர் அறுந்து கையோடு வந்தது. அதன் காசுப்பெட்டி உடைந்து சில்லறைகள் கீழே சிதறிக்கிடப்பதை அந்த இருளிலும் அவன் கண் சிமிட்டிப் பார்த்தான்.
அவனுடைய அந்த தெய்வ சந்நிதானத்தின் மூல விக்கிரகம் நிர்மூலமாகி நிலத்தில் தூள் தூளாய்க் கிடப்பதைக் காண இவனால் ஆகாமல் போனது. வயிற்றில் சுருண்டு பெருகுகிற காற்று பெருமூச்சாய் வெளிப்பட அவன் தொண்டைக்குள் ஏதோ ஒன்று அடைத்துக் கொள்ள அவன் மூக்கின் இதழும் உதடுகளும் துடிதுடிக்கப் பெருங்குரலில் அழுகை வெடித்தது. அறுந்து கிடந்த தொலைபேசியைக் காதில் வைத்துக்கொண்டு கைபோன போக்கில் எண்களைச் சுழற்றிய அந்தப் பதற்றமிக்க சூழ்நிலையிலும் “டேஏஏஏய்ய்ய் துலுக்காகாகா காணம்ம்ம்..” என்கிற நீண்ட குரலோசை காதில் அறைய இவன் ஒரு கணம் ஸ்தம்பித்து வேட்டை நாய் காதுகளை விறைத்துக் கொள்வதைப்போல முகம் உயர்த்தி நின்றான். “இங்க வா ஆஆடாஆ” என்கிற ஒலியில் தெளிவுபெற்றான். அந்த அழைப்பு ஓசையின் அடக்கத்தில் மிக மெல்லியதாய்க் கேட்கிற அழுகை ஒலி இவனை மீண்டும் திக்குத்திசை தெரியாமல் ஆக்கியது.
கையிலிருந்த தொலைப்பேசியைக் கீழே அடித்துவிட்டுத் திறந்து கிடந்த கதவை எட்டி உதைத்துவிட்டு இவன் வீட்டை நோக்கி அங்கு உண்மையில் என்ன நடந்தது என்பதை அறியாமல் ஓடினான். வயல் வெளியில் அவனுடைய ஓட்ட அடிகள் ‘தப் தப்’ என்று பதிந்து நீரையும் சேற்றையும் எங்கோ வாரி இறைத்தன.
