அந்த வயதில் அவளுக்கிருந்தவை அந்தக் கனவுகளும் கற்பனைகளும் மட்டுமே.
அவை ரொம்பவும் சுகமானவை.
ரோஜா இதழ்கள் மெத்தன மனசுக்குள் விழுந்து புரண்டு, கிச்சுக் கிச்சு மூட்டுவதுபோல்,
எப்போதாவது என்று இல்லாமல், எப்போதுமே அவளுக்கு வருவது கனவுகள்தாம்.
அவை எல்லாமே யதார்த்தத்தின் மேல் கால்கள் பாவாத, ஒரு சுகப் பிரயாணத்தின், சக பிரயாணிகள்.
அவள் காணும் கனவுகளில் இதுவரை ஏதும் பயமுறுத்தும்படியாக வந்ததே இல்லை.
அவள் அம்மாவுக்கு மட்டும், அடிக்கடி பயங்கரக் கனவுகள் வருவதுண்டு. அப்போ தெல்லாம் அவள் அப்பனோ அவளோ எழுப்பி ஆசுவாசப்படுத்த வேண்டும். யாரும் எழுப்பாமல் போகும்பட்சத்தில், அம்மாவின் அலறல் நீண்டு போகும்.
சில சமயங்களில், அப்பனும் மகளும் எழாமல் இருந்ததுண்டு. அப்போதெல்லாம், பக்கத்து வீட்டுக்காரர்கள், தடுப்புச் சுவரைத்தட்டித் தட்டி எழுப்பியும், எழும்பாமல் இருந்ததுண்டு. அதென்னவோ அப்பனும், மகளும் நல்ல தூக்காளிகள்.
அலறி விழித்த பின், அம்மா நீண்ட நேரம் தூங்க மாட்டாள். விடிய விடியக்கூட, அந்தக் கனவின் தொடர்ச்சிக்குப் பயந்தவளாக, விழித்திருப்பாள்.
அம்மாவால் தன் கனவுகளைப் படம் பிடித்ததுபோல இதுவரை கோவையாக ஒருமுறைகூடச் சொல்ல முடிந்ததில்லை. எல்லாமே துண்டுத் துண்டு காட்சிகள்தாம்.
அம்மாவுக்கு வரும் கனவுகளை நினைக்க, இவளுக்கு வியப்பாகவும் குழப்பமாகவும் இருக்கும.
ஏதோ காத்துச் சேட்டை என்று சொன்னார்கள். காளி கோயிலுக்குப் போய் சாமி பார்க்கும்படி, காத்தாயி பாட்டி சொன்னாள். அம்மாவுக்கு, காத்தாயி பாட்டி ரொம்பவும் நம்பிக்கையான ஆலோசகர்.
காளி கோயிலுக்குப்போய் வரும்போது, அம்மா கையில் தாயத்து கட்டியிருந்தாள். வெள்ளைத் துணியில் சுற்றிய எலுமிச்சைப் பழத்தை, வாசல் கதவுக்குமேலே வைத்து, பாட்டிலில் கொண்டுவந்த மந்திரித்த நீரை வீடெல்லாம் தெளித்துவிட்டாள். காத்தாயிப் பாட்டியைக் கூட்டி வரச்சொல்லி, எல்லா விவரங்களையும் கூறினாள்.
மறுநாளே, அம்மாவின் அலறல் கேட்டு, இவள்தான் எழுப்பிவிட்டாள்.
அவளைப் பொறுத்தவரை, இந்த வாழ்க்கை ரொம்பவும் சுகமானதாக, யுகம் யுகமாக வாழ்ந்து கழித்தாலும் மாளாததாக எப்போதுமே ஓர் எண்ணம்.
அவள் காணும் கனவுகளில் எல்லாம், அவள் கந்தர்வலோக தேவதைதான்.
கனவில் காணும் தேவலோகம்- சினிமாவில் பார்த்த தேவலோகம் போலவே- புகை மண்டலமும் அலங்கார ஜோடனைகளுமாக இருந்தது என்பதில் அவளுக்கு சந்தோஷம்.
அன்றைக்கு, தோட்டத்தில் ஒரு நிகழ்ச்சி.
கல்யாண வீட்டுப் பந்தல் காலோடு இணைத்துக் கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கியிலிருந்து, வந்த சினிமாப் பாட்டு தோட்டத்தைக் கலகலக்க வைத்துக்கொண்டிருந்தது.
அன்றைக்கு எந்த ஒரு வீட்டிலும் ரேடியோ திறக்க வேண்டிய அவசியமில்லாமல், எல்லா வீடுகளுக்கும் தேவையான பாட்டை ஒரு வீடே போட்டுக்கொண்டிருந்தது. இடையிடையே நேயர் விருப்பமும் ஒலிபரப்பாகியது. தோட்டத்திலுள்ள, தங்களுக்குத் தெரிந்த பெயர்களை எல்லாம் சொல்லிப் பாட்டுப் போட்டனர் வாண்டுகள்.
“கல்யாண ஊர்வலம் வரும், உல்லாசமே தரும். மகிழ்ந்து நான் ஆடிடுவேன்”. ரொம்பவும் அதிகமாகப் போடப்பட்ட பாடலாக இருந்தது.
இடையே பேட்டரி ‘வீக்’காகி, ஜிக்கியின் குரல் கிழவி குரலாக மாற, மனத்துள் சிரிக்கவைத்தது. அதன்பிறகு கொஞ்ச நேரம் பாட்டைக் காணோம். பாட்டுப் போட்ட தம்பிகள், கொஞ்சநேரத்தில் தாங்களே பாடத் தொடங்கியிருந்தனர்.
ஆனால், இவளுக்கு மட்டும் அந்தப் பாடல் விடாமல் கேட்டது. மனசுக்குள் ஜிக்கியோடு சேர்ந்து பாடினாள்.
கல்யாணக் கோலத்தில், ஆஜானுபாகுவான கணவன் விரல் கோத்து, நாணிக் குனிந்து ஊர்வலம் போனாள்.
அவளுக்கு எப்போதுமே கணவனாகக் கம்பீரத்தை மட்டுமே கற்பனை செய்ய முடிந்தது. அந்தக் கம்பீரம், ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு முகமாகத் தெரியும். சில சமயங்களில் அப்பா ஊரிலிருந்து வாங்கி வந்து, சாமி மேடையில் வைத்திருக்கும், குழல் ஊதும் கண்ணன் முகத்துச் சாயலாக இருக்கும். வேறு சில சமயங்களில், அவள் பார்த்த படத்தில் நடிக்கும் ஒரு நடிகரின் முகத்தை ஒத்தும் இருந்தது. எங்குமே பார்த்திராத முகங்களும் உண்டு. எல்லாமே அவளுக்குப் பிடித்த முகங்களே.
தோட்டமெல்லாம் பாட்டுப் போட்ட வீட்டுக்கு அவளும் அம்மாவோடு போயிருந்தாள்.
ஊரில் கல்யாணம் என்பது அவளுக்குக் கல்யாணம் போல.
மஞ்சள் கம்பில் சிவப்புத் துணி கட்டிய முகூர்த்தக் காலைப் பார்க்க, அவளுக்கு எப்பவுமே பரவசம்- மஞ்சள் குளித்த பச்சைக் கம்பு, தலையில் சிவப்பு ரிப்பன் கட்டிக்கொண்டு நிற்பதாக, அவளுக்கு எண்ணம்.
மஞ்சள் நிறம் அவளுக்கு ரொம்பவும் பிடித்த நிறம்.
தலையில் சூட அதிகமாய் மஞ்சள் பூக்கள் இல்லாமல் போனதற்காக, அவள் எப்போதுமே வருந்துவாள். சூரியகாந்தி மட்டுமே நல்ல மஞ்சளாய், எங்கேனும் ஒரு வீட்டில் ஆள் உயரத்தில் நின்று, வருவோர் போவோரை வேடிக்கை பார்ப்பதைப் பார்த்திருக்கிறாள்.
இன்னொரு மரம்கூட அவளுக்குச் சின்னதிலிருந்தே நல்ல பரிச்சயம். ஆயக் கொட்டாய்க்கு எதிரில், ஒத்தையாய், சரஞ்சரமாய் தலை எல்லாம் பூவாய், இளம் பச்சை இலைகளின் ஊடாய் அது நிற்கும் காட்சி, அவளுக்குத் திகட்டாதது.
இப்போது ஆயக்கொட்டாய் இருந்த இடத்தில், அதன் அடையாளமாய் சிமெண்டு தரை மட்டுமே உண்டு. அதுவும் காடு மண்டி கண்ணுக்குத் தெரியாமல் இருந்தது.
அதன் எதிரே இருந்த அந்த மஞ்சள் மரம் இல்லை. வயதாகிச் செத்துப் போனது.
வாரிசு இல்லாத மரமாக அது செத்துப்போனதில் இவளுக்கு வருத்தம்.
சில சமயங்களில் அவள் இப்படியும் நினைத்துப் பார்ப்பதுண்டு. இந்த உலகத்து மரங்களெல்லாம் அந்த மரங்களாகி எல்லாமே ஒரே மஞ்சள் சரங்களாய்த் தரையில் சிதறி, இவள் மட்டும் ஒத்தையாய் அந்த மலர்க் காட்டில் நடந்து, நடந்து, இவள் பாதங்களே மஞ்சள் மலர்களாகி…
கல்யாண வீடுகளில் கிடைக்கும் மஞ்சள் கிழங்குப் பூ இவளுக்கு நாலைந்து வேண்டும். கிழங்குப் பூ மட்டும் மஞ்சளாய், சூடுவதற்கு ஏற்றதாய் இருந்தது. வீட்டிலேயே வளர்க்கலாம் என்றுதான் அப்பாவிடம், பாசார் மாலாமில் வாங்கி வரச் சொன்னாள்.
அம்மாவுக்கு நல்ல கை ராசி. எதைக் கிள்ளி மண்ணில் வைத்தாலும் பசுமையாய், துளிர்த்துவிடும். அம்மாவே அந்தக் கிழங்குகளையும் நட்டுவைத்தாள். துளிர்த்த கொஞ்ச நாளிலேயே, ஆடு வாய் வைக்க மொட்டையாய் நின்றது.
அம்மாவோடு கல்யாண வீட்டுக்குப் போனவளுக்குக் கொஞ்ச தூரத்திலிருந்து பார்க்கும்போதே, பந்தலில் இன்னும் வேலை பாக்கி இருப்பது தெரிந்தது. பச்சை மட்டைகள் அங்கொன்றும் இங்கொன்றும் சிதறிக் கிடந்தன. பந்தலுக்கு மேலே, கம்புகள் எல்லாம் இன்னும் கட்டி முடித்திருக்கவில்லை.
கிட்டத்தில் வர, பந்தலுக்கு மேலே அண்ணாந்து பார்க்க, மேலே இருப்பது தன் தம்பி என்பது தெரிந்தது.
சின்ன வயதிலேயே, ஒரு நாள் பள்ளிக்கூடத்தில் உட்கார்ந்து பாடம் கேட்டபோது, பொத்தென விழுந்தவன் உடலெல்லாம் வெட்டி வெட்டி இழுக்க, வாயெல்லாம் நுரை தள்ளி, முகம் கோணலாகி…
படிப்பு அத்தோடு முடிந்தது. அடிக்கடி வரத் தொடங்கியதால், ஒரு ஆள் பக்கத்திலேயே இருந்து பார்க்க வேண்டியதாகிறது. வலிப்பு, மூளையையும் பாதித்திருந்தது. சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஏதாவது பேசிக் கொண்டிருப்பான்.
‘அம்மா தம்பியப் பாருங்க… பந்தலுக்கு மேலே இருக்கான்..””
“டேய் கீழே எறங்குடா…. அவன யாரு மேல ஏற விட்டது…?”
அம்மா பதறிப்போனாள். ஒரே பையன். இவள் பிறந்து ரொம்ப நாளாகிப் பிறந்தவன். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ரொம்பவும் செல்லம்.
பந்தல் பெரிதாக இருந்தது. வீட்டிலேயே நடக்கும் கல்யாணம். மணவறை எல்லாம் அமைக்க வசதியாகப் பெரிதாக இருந்தது. மழை என்று வந்துவிட்டால் ஒதுங்க இடம் வேண்டும். பச்சை மட்டைகளுக்கு மேலே படுதா, மழைக்குப் பாதுகாப்பு. மஞ்சள் தோரணங்கள், ஒருபக்கம் பாதி கட்டிய நிலையில், நின்று போயிருந்தது. தென்னங் குருத்து, போதவில்லை என்று, வெட்டிவரப் போனவர்கள், இன்னும் வராமல், பின்னுபவர்கள் கலைய ஆரம்பித்தனர்.
நாளைக் காலையில்தான் மணவறை வரும். கல்யாண ஐயரே, எல்லாம் கொண்டுவருவார். குருத்து வெட்டப் போனவர். நாலைந்து மஞ்சள் குருத்துகளைத் தோளில் போட்டு வந்தார். பின்னாலேயே ஒரு பையன், சைக்கிளில் குரங்குக் காய் மரம் ஏற்றி வந்து, வாசலில் நிறுத்தினான்.
அதற்குள் தோரணம் பின்னியவர்கள் கலைந்து போயிருந்தனர். கல்யாணத்துக்கென்று சேவா எடுத்திருந்த ஒன்டா மெசின், ஓட ஆரம்பித்து, விளக்கு எரியத் தொடங்கி விட்டது. கல்யாண வீடு பளிச்சென்று தெரிந்தது. கேஸ் லைட் விளக்கு சீறி உமிழும் மங்கல் வெளிச்சமாய் இல்லாமல், பலகையில் நடமாடும் பல்லிகள் தெரியும், வெள்ளை வெளிச்சமாய் இருந்தது. பந்தலுக்கு இன்னும் ஒயர் இழுத்து விளக்குப் போடாமல், அரை இருட்டாய்த் தெரிந்தது.
தனியாக உட்கார்ந்து கூந்தல் பின்னியவருக்கு உதவியாக, இவளும் போய் உட்கார்ந்து கொண்டாள். நாலைந்து பையன்கள் பக்கம் வந்து – “அக்கா, எப்படிக்கா பின்றது. சொல்லிக் கொடுங்கக்கா.”
இவளுக்கும், தன் கல்யாணம் இப்படித்தான் ஆக வேண்டுமென்று ஆசை.
“பந்தல் இன்னும் பெருசா இருக்கணும்… இன்னும் ஒயரமா… கிளிஞ்ச மட்டை எல்லாம் வச்சு இப்படிப் பின்னக் கூடாது… வளஞ்ச கம்பு எல்லாம் நடக் கூடாது… காட்டுக்குப் போகும்போதே சொல்லச் சொல்லிடணும்… நல்ல கம்பா, நேரா உள்ளதாப் பாத்து வெட்டச் சொல்லி… கூந்தல்கூட இப்படி ஒன்னு நீட்டா ஒன்று கட்டையா கட்டக் கூடாது… எல்லாமே ஒரே அளவா இருக்கணும்… மாப்பிள்ளை வீட்டுல இத எல்லாம் சொல்லச் சொல்லிடணும்…”
இவளையும் பெண் பார்த்துவிட்டுப் போய், ஒரு மாதம் ஆகிறது. பிடித்திருக்கிறது என்று பதிலும் வந்துவிட்டது. மாப்பிள்ளை வீட்டார், அடுத்த மாதம் நிச்சயம் வைக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
அன்று இரவெல்லாம் கல்யாண வீட்டில் பாட்டு தொடர்ந்தது.
“கல்யாண ஊர்வலம் வரும். உல்லாசமே தரும். மகிழ்ந்து நான் ஆடிடுவேன்.”
விடியற் காலையில்தான் அவள் கொஞ்சம் கண் அயர்ந்தாள்.
“தேவலோகத்தில், சுயம்வர மணடபத்தில், ஆயிரமாயிரம் தேவகுமாரர்கள் ஆவலோடு காத்திருக்க, கையில் மாலை ஏந்திய தேவதையாக…
வீட்டுக்கு வரும் கல்யாணப் பத்திரிகைகளில், புதிய டிசைனில் வருவதெல்லாம் அவளிடம் பத்திரமாக இருந்தன.
அப்பாவின் தங்கச்சி, தன் பையனுக்குக் கல்யாணம் என்று அனுப்பிவைத்த பத்திரிகையும் அதில் உண்டு. பத்திரிகையைப் பிரித்த மாத்திரத்தில் இரண்டு கிளிகள், மரக்கிளையில் உட்கார்ந்திருக்கும் காட்சி அவளுக்கு
அவளுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.
பந்தல் இவள் விருப்பப்படி இருந்தது.
“இதென்ன பொன்னுவூட்டுல இத்தன பெரிய பந்தலு! சாங்கியத்துக்கு ஒண்ணு சின்னதாப் போட்டா பத்தாதா…” என்றெல்லாம் வீட்டுக்கு வந்த பெண்கள் கேட்டபோது, அவள் ஒன்றுமே சொல்லாமல், பந்தலைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அப்பா எவ்வளவோ கேட்டுக்கிட்டும் அவங்க கல்யாணத்த வீட்டில வக்க முடியாதுன்னுட்டாங்க… கோயில்லதான் கல்யாணமாம்... பத்திரிக்கையும் விருப்பத்துக்கு..”
அம்மாதான் சொல்லிக்கொண்டிருந்தாள்.
இரவில், எல்லாரும் தூங்கிய பின்னரும், இவள் பந்தலுக்குக் கீழே உட்கார்ந்திருந்தாள்.
அவள் முகத்தில் ஏதோ கலக்கம் – எதையோ கண்டு, முதல்முறையாகப் பயப்படுவதுபோல.
“மூணாம் நாலு இங்க இந்தப் பந்தலு இருக்காது… பிரிச்சுப் போட்டிருப்பாங்க… கம்பு ஒரு பக்கம்… மட்ட ஒருபக்கம்… தோரணம் ஒரு பக்கம்… வாழ மரம் ஒருபக்கம்… வெறும் மண்ணு மட்டும் வெயில்ல காஞ்சு மானம் பாத்து… வெறிச்சுனு…”
[அம்மாவின் கொடிக்கயிறும் எனது காளிங்க நர்த்தனமும்]
