“தெருவிளக்கு பழுதாகி நான்கைந்து நாட்களாக இருள் மூண்டிருந்த பெங்கூலு வீட்டு வளைவைக் கடக்கும்போதுதான் கருப்பு நிற மேகம் போன்ற உருவமொன்று கடப்பதைப் போல தெரிந்ததும் உடம்பெல்லாம் சிலிர்த்துக் கொண்டது. அப்பொழுதும் ‘எனது தலையணை தங்கத்தாலானது, ரத்தின உறை கொண்டது, கைமுட்டியைத் தலையணைத்து உறங்குகிறேன்’ என்ற வரிகள் ரீங்காரம் போல காதில் ஒலித்துக் கொண்டிருந்தது… ” எனத் தான் விபத்துக்குள்ளான அனுபவத்தை வலி முனகலுடனே அவாங் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
“சிண்டாய் என்றால் ‘மலாய்ப் பட்டு’. அந்தப் பட்டுத்துணியில் இரண்டு வகைகள் இருக்கிறது. சிறிய தலைப்புடன் இருப்பது பெண்பட்டு. பெரிய தலைப்புடன் இருப்பது ஆண்பட்டு. அரிய வகையான அந்தப் பட்டு கண்ணுக்குப் புலப்படாத பூனியான் உலகத்தில்தான் கிடைக்கும். பாட்டின் நடுவில் சித்தி கிறக்கத்துடன் பாடும் குரல் ஜின்னுடையது!” என்று சொல்லிவிட்டுக் காலில் போடப்பட்டிருக்கும் கட்டை ஒருமுறை பார்த்துக் கொண்டான்.
எனக்கும் அந்தக் கதையெல்லாம் தெரியும். ஆனால், அது தெரியுமெனக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை.
“மினாங் மக்களின் மொழியில் சிண்டாய் என்றால் பூனியான் உலகத்து இளவரசி .” எனச் சொல்லும் போது என் கண்களைச் சந்திக்காமல் தலையைத் தாழ்த்திக் கொண்டான்.
“இந்தப் பாடலை இரவில் பாடக்கூடாது என்ற கதை உனக்கும் தெரிந்திருக்கும்தானே!” எனக் கேட்டான் அவாங். மருத்துவமனையின் வெளிவராந்தாவைப் பார்த்தவாறே தலையை ஆட்டிக்கொண்டேன்.
மினாங் மக்கள் நிறைந்திருந்த என்னுடைய கம்பத்தில் நீண்ட நாட்களாகவே சிண்டாய் பாடலையொட்டிப் பிரபலமான கதை ஒன்று உலாவி வந்தது. மேடை நிகழ்ச்சி ஒன்றில் ஒருவன் அந்தப் பாடலின் முதல் வரியான ‘சிண்டாய் எங்கே’ என்று பாடியபோது மேடையின் பின்னாலிருந்து யாரோ ‘சிண்டாய் இங்கேதான்’ என்று பெண்குரலில் பாடியதாகப் பல காலமாகச் சொல்லி வந்தனர். அதனாலே கம்பத்து நிகழ்ச்சிகளில் சிண்டாய்லா பாடல் பாடுவது தவிர்க்கப்பட்டது.
அந்தப் பாடலை சித்தி நேரில் பாடுவதைக் கேட்க ‘சித்தியும் பிரதமரும்’ என்ற நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தான். பிள்ளைகளைப் பக்கத்து வீட்டில் விட்டுச் செல்ல விருப்பமில்லாததால், உடன் வரவில்லை என்று சொல்லிவிட்டேன்.
கால்பக்கக் கட்டிலைக் கொஞ்சமாய் மேலேற்றச் சொன்னான். கால்களை மேலே வைத்து சாய்த்துக் கொண்டே நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும் போது ஏற்பட்டிருந்த விபத்தை இன்னும் விளக்கிக் கொண்டிருந்தான். தொலைக்காட்சியில் பார்த்ததைப்போல் இல்லாமல் கொஞ்சம் உடல் பெருத்துப் போயிருந்தாளாம் சித்தி. நிகழ்ச்சி ஆரம்பத்தில் பிரதமருடன் ஒரு டூயட்கூட பாடினாளாம். நிகழ்ச்சியின் இறுதியில்தான் சிண்டாய் பாடலைப் பாடினாள் . ஒவ்வொரு பத்தி பாடி முடித்தப் பிறகும் மக்கள் முன்னால் மைக்கை நீட்டினாள். ஒட்டுமொத்தக் கூட்டமே சித்தியுடன் சேர்ந்து சிண்டாய் லா எனச் சிணுங்கியவாறே பாடியதைக் கேட்க புறாக்கள் கூட்டமாகப் பறக்கும் போது எழும் சிறகசைப்பின் ஒலியைப் போன்றிருந்ததாகச் சொன்னான்.
பெங்கூலு வீட்டைத் தாண்டிய இருட்டு வளைவில் எதன் மீதோ மோதி கான்கீரிட் கால்வாய் இடுக்கில் அவனுடைய கால் மாட்டிக் கொண்டிருக்கிறது. உயிரை அழுத்தும் வலியிலும் சிண்டாய்லா பாடலின் சிணுங்கல் ஒலி யாரோ அருகில் பாடுவதைப் போல கேட்டுக் கொண்டிருந்ததாகச் சொன்னான். அந்தச் சூழலே திகிலூட்டும்படி இருந்ததால் தன்னினைவு இழந்துவிட்டதாகச் சொன்னான்.
“உன்னிடம் நான் சொன்னதில்லை. நினைவு மறந்து நான் உறங்கும் இரவுகளில் அந்தக் குரலை பலமுறை கேட்டிருப்பதாகவே ஆழ்மனம் சொன்னது. அது என் கற்பனையா என்று கூட தெரியவில்லை.” எனச் சொல்லிவிட்டு வலி முனகலுடன் கண்களை மூடிக் கொண்டான். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று நாட்கள் ஆனப்பின் இன்றுத்தான் விபத்துக்கான கதையைச் சொல்லத் தொடங்கியிருந்தான்.
“மயக்க மருந்து கொடுத்துள்ளதால் அப்படியெல்லாம் கற்பனைகள் தோன்றும். எல்லாமே எப்போதோ நடந்ததுபோல எண்ணங்கள் வரும். நான் முதல் பிரசவத்தின்போது அதையெல்லாம் அனுபவித்திருக்கிறேன்,” என்றேன். எனக்குக் குப்பென வியர்த்தது. மெல்லிய மூச்சுச் சீறலுடன் தூங்கி போயிருந்தான்.
முதல் இரு நாட்களாய் மருத்துவமனையில் வலிக்கிறது என்பதை முகக்குறிப்புகளால் காட்டவோ வலி மேலிட்டால் கத்தவோ செய்தான். எல்லாவற்றுக்கும் எரிந்து விழுந்தான். மற்ற நேரங்களில் எதையாவது வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான், சிறுநீர் கழிக்கும் போதெல்லாம் மருத்துவமனையில் தரப்பட்டிருந்த பச்சைக் கைலியில் படரும் ஈரத்தைப் பார்த்துத் தண்ணீர் பாட்டில்களைக் கூட இரண்டு மூன்று முறை எடுத்து வீசியெறிந்தான். இரண்டாவது நாள்தான் இரும்புக் கம்பிகளை அண்டையில் செருகி மெதுவாக நடந்து வெளிவராந்தாவில் நின்று சாலைகளைப் பார்ப்பான். திருமணம் ஆகி ஏழாண்டுகளில் மூன்று நாட்களுக்கும் மேலாக அசைவற்று ஒரே இடத்தில் அவாங் இருப்பதை இப்பொழுதுதான் பார்க்கிறேன். திரும்பிப் படுக்க முயன்று கால்களை அசைத்தவன் வலியால் வாயைக் கோணியவாறே கண்களை மூடிக் கொண்டான்.
முதல் கணவன் அலியாஸ் இறந்தபிறகு, பிறந்து நான்கு மாதங்களே ஆன அடாமுடன் வீட்டுக்குத் திரும்பி வந்தேன். சிறுநீரகம் கெட்டுப்போன தம்பிக்கும் அப்பாவுக்கும் சேர்த்து உணவு, பணிவிடைகள் என எல்லாவற்றையும் நானே பார்த்துக் கொண்டேன். அது இறந்துபோன அம்மாவை நினைவுறுத்துவதாக தம்பி சொல்வான்.
அரசாங்க நிலத்திட்டமான பெல்டா கம்பத்தில் இருந்த அப்பாவுக்குச் சொந்தமான நிலத்தில் செம்பனைக் குலைகளைக் குத்தகைக்கு வெட்ட வந்தான் அவாங். ஒரு மதிய நேரத்து வெயிலில் வெற்றுடம்பின் மேல் நைந்து போயிருந்த சட்டையை இடுப்பில் கட்டிக்கொண்டு செம்பனைக் குலைகளை அறுக்கும் அலக்கையை ஸ்டோர் அறையில் வைக்கச் சென்றவனை முதன் முதலாகப் பார்த்தேன். பரட்டை முடியுடன் கட்டான உடலில் திட்டுத் திட்டான வெண்புள்ளிகள் பரவி இருந்தன.
மதிய நேரத்து வெயிலின் வெளிச்சத்தில் அவனுடலில் இருந்த வியர்வை மினுமினுத்தது. வேலை ஓய்ந்த நேரங்களில் கடைக்கு முன்னால் இருக்கும் நாற்காலியில் அமர்ந்து அப்பாவுடன் பேசிக் கொண்டிருப்பான். அப்பாவுடன் சேர்ந்து மீன் பிடிக்க, குருவி பிடிக்க சென்றுவிடுவான். வீட்டுக்குப் பின்னால் தகரத்தால் ஆன தடுப்புகளுக்குள்தான் மணிலா வாத்துகளையும், ஆங்சாக்களையும் அப்பா வளர்த்து வந்தார். அப்பாவும் அவாங்கும் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் மரங்களில் குறிபார்த்துக் குருவிகளை உண்டி வில்லால் அடித்து வீழ்த்தும் போது வாத்துகள் சேற்றைக் காலால் விசிறியடித்தும் ஆங்சாக்கள் கழுத்துகளைச் சிலுப்பிக் கொண்டும் அலறும். அவனுடன் பெரியதாக எதுவும் பேசிக்கொண்டதில்லை என்றாலும் வீட்டுக்கு வரும்போதெல்லாம் என்னைத் தவறாமல் பார்த்துவிட்டுச் செல்வதை அறிந்தே வைத்திருந்தேன்.
அவனாகத்தான் திருமணம் செய்து கொள்வதற்கு அப்பாவிடம் சம்மதம் கேட்டான். எங்கள் தெருவிலே மகனுடன் வாசிக்கச் சென்ற அரிப்பினின் காலியான வீட்டில் ஒருவருடம் தங்கியிருந்தோம். ஹாரிஸ் பிறந்தவுடன்தான் அப்பா, அவாங்கின் கம்பத்துக்குச் செல்ல அனுமதித்தார்.
அவனுடைய கம்பத்திலும் செம்பனைத் தோட்டத்தில்தான் வேலை செய்தான். காலையிலே செம்பனைத் தோட்டத்தில் வெட்டிப் போடப்பட்டிருக்கும் செம்பனைக் குலைகளை லாரியில் ஏற்றுவதற்குச் சென்றுவிடுவான். ஒரு நாளைக்கு இரண்டு டன் செம்பனைக்குலைகளை நீள்முள்ளால் குத்தித் தூக்கி லாரியில் வீசி அடுக்க வேண்டும். மழை நாட்களில் வேலை பெரும்பாலும் இருப்பதில்லை. பழங்களை ஏற்றிய பின் மதியம்தான் வீட்டுக்கு வருவான்.
வீட்டுக்கு முன்னால் இருந்த செர்ரி பழ மரத்தின் கீழ் மெல்லிய இழைகளிலான நரம்புகளைச் சிறு சிறு வட்டங்களாகப் பின்னி வைப்பான். நரம்பு முனையை இரும்புக் கம்பியால் பிணைத்து நிலத்தில் ஊன்றி விடுவான். நரம்பு வலையில் பெட்டை மணிப்புறாவைப் பிணைத்து வைத்துவிடுவான். பெட்டை மணிப்புறாவின் குனுகல் ஒலியைக் கேட்டு இன்னொரு புறா வந்து கீழே சிவந்த தோல் நீங்கிச் சிதறியிருக்கும் செர்ரி பழங்களைத் தின்னும். அந்தப் பழங்களைத் தின்னும் போது கீழேயிருக்கும் வலையில் அதன் கால்கள் சிக்கிக் கொள்ளும். புறாக்களைக் கவர்தல் என்றுதான் இதைச் சொல்வான். அப்படிச் சிக்கிய புறாக்கள் மாலை வரை தலையைத் தாழ்த்தி வட்டத்துக்குள்ளே நடக்க முயலும். அந்த வட்டத்தை மீறி அவை பறக்க முயல்வதில்லை.
சிறிய இலைகள் நிறைந்த செர்ரி மரத்தில் அந்தியிலே வெளிச்சம் ஊடுருவ முடியாமல் இருண்டு போய் புறாக்களின் குனுகல் ஒலி மட்டுமே ஒலித்துக் கொண்டிருக்கும். அந்தச் சூழலுக்கு முற்றிலும் அந்நியமாகக் கைப்பேசியில் பாடல்களை ஒலிக்கவிட்டுக் கேட்பேன். பெரும்பாலும் சித்தியின் குரலில் ஒலிக்கும் பாடல்கள் எனக்குள் எதோ சிறு ஒளியைப் பாய்ச்சிச் செல்வதாகவே இருக்கும். நெற்றியைச் சுருக்கிக் கொண்டு அசையாமல் புறாக்களின் அசைவை மட்டுமே பார்த்துக் கொண்டு சிகரெட் புகைத்துக் கொண்டிருப்பான். புறாக்களைப் பிரம்பால் பின்னப்பட்ட கூண்டில் அடைத்து வைப்பான். இரண்டொரு நாளில் அட்டைப்பெட்டியொன்றின் மீது சிறு துவாரம் விட்டு அவற்றை அதில் அடைத்து விற்றுவிடுவான். பின்னர் எப்போது படுக்க வருவான் எனத் தெரியாது. படுத்தவுடன் அவனுடலில் எழுகின்ற குறட்டையொலி கூட புறாக்களின் குனுகல் ஒலியைப் போலவே இருக்கும்.
கண்களைச் சுருக்கியவாறே படுக்கையிலிருந்து எழுந்து என் கைகளைப் பற்றிக் கொண்டான். “ஹாரிஸ் வரவில்லையா?” எனக் கேட்டான். இல்லை என வலப்பக்கமாய்த் தலையை ஆட்டிச் சொன்னேன். என்னுடைய மகன் அடாமுடன் அவாங் எப்பொழுதுமே எரிச்சலாகவே பேசுவதைக் கவனித்திருக்கிறேன். ஒரு நாள் நாற்காலிக்கடியில் இருந்த பந்தை எடுக்கச் சென்ற அடாமின் தொடையில் அணைக்கப்படாத சிகரெட் கங்கு பட்டு வலியில் அலறித் துடித்தான். அப்பொழுது ‘ஹராமுக்குப் பொறந்தவன்’ என்ற வார்த்தையைச் சொல்லி என்னைக் கவனிக்கச் சொன்னான்.
மூன்று மாதம் காலைத் தரையில் அழுத்திப் பதித்து நடக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி வீட்டுக்குச் செல்லலாம் என்றாள். பக்கத்து வீட்டிலிருந்த எண்டோன் தான் மருத்துவமனையிலிருந்து வரும்வரை பிள்ளைகளைக் கவனித்துக் கொண்டாள். அவாங் வீட்டுக்குள் நுழைந்தவுடன் மூத்தவன் அடாம் மூக்கைச் சுழித்து ஏதோ வாடை வீசுவதாகச் சொன்னான். அவாங்குக்கு முன்னரே நீரிழிவு இருந்ததால் அவன் காயத்திலிருந்து எழுந்த இறைச்சியின் கவிச்சி மணம் வீடு முழுவதும் வீசியது.
“ஆமா. அடேக்குக்கும் அப்படித்தான் இருக்கு” என்று மூக்கைப் பிடித்தவாறு சின்னவன் ஹாரிஸும் சொன்னான். இருவரும் ஒவ்வோர் அறையாகச் சென்று நுகர்ந்து கொண்டிருந்தார்கள். அவாங்தான் அது பின்னால் இருக்கும் முயல்களின் கழிவு வாடை என்று முயல் கூண்டைக் காண்பித்துச் சொன்னான். முயல் கழிவின் மணம் பச்சை மணமாக இருக்கும். சிறிது நேரத்தில் இருவரும் அதனை நம்பி அமைதியாகினர். வீட்டுக்கு வந்தவுடனே கைப்பேசியைக் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வெளியே இருந்த பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான். நாற்காலிக்குக் கீழ் பால் டீன்னை வைத்துச் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு அதன் துகளை டின்னில் தட்டி விட்டுக் கொண்டிருந்தான்.
சமையலறைக்குள் நுழைந்து கொண்ட போது, எனக்குள் சித்தியின் குரலில் ஏதோ ஒரு பாடல் கேட்டுக் கொண்டிருந்தது. நானும் பள்ளி நாட்களில் சித்தியின் பாடல் ஆல்பங்களை வெறிபிடித்தவள் போல சேகரித்து வைத்திருந்தேன். அப்பொழுதெல்லாம் வானொலியில் பெண்கள் காதல் துயருடன் அழுவது போன்ற பாடல்களையோ அல்லது பாப் இசையில் துள்ளலாகப் பாடும் பாடல்களையோதான் கேட்க முடியும். முதன் முறையாக சித்தியின் குரலை வானொலியில் கேட்டபோது தேவதைக் கதைகளில் இருக்கும் பெண்ணின் குரலைப் போன்றிருந்தது. அந்தப் பாடல்களைக் கேட்கையில், மனத்துக்குள் அரூபமாய் ஒலித்துக் கொண்டிருந்த இசையை வெளியே கேட்பதைப் போன்றிருந்தது.
சோகத்தை விரும்பி ஏற்ற அழகான பெண்ணின் குரலாக சித்தியின் குரல் சிண்டாய் பாடலில் ஒலித்தது நன்றாக நினைவில் இருக்கிறது. அந்த மெல்லிய சோகமே திரும்பத் திரும்ப சிண்டாய் பாடலைக் கேட்கச் செய்தது.
அந்தப் பாடலின் நடுவில் வரும் ‘என்னால் வெல்லமுடியாத உயரமே’ என்ற வரிக்குப் பின்னான சிணுங்கல் ஒலித்தபோது அவாங் தடுமாறி உள்ளே வந்து எட்டிப்பார்த்தான். எனக்கு அருவருப்பாகவே இருந்தது. சமையலறை அலமாரியின் கீழிருந்த எலிப்பொறியை வெளியே எடுத்துச் சென்றான். சிறிய எலியொன்று அதில் மாட்டியிருந்தது. சிறிய கருமணி கண்கள் பரபரக்கப் பொறியில் சுற்றிக் கொண்டிருந்தது.
புண் ஆறுவதற்கு விரால் மீன் நல்லது எனப் பக்கத்து வீட்டு எண்டோன் கொடுத்தாள். அந்த மீன்களின் மீது கல் உப்பைத் தூவி எலுமிச்சைச் சாற்றையும் பிழிந்து ஊற வைத்து எடுத்த போதும் ரத்த வாடை வீசியது. தேங்காய்ப் பாலும், ஊசி மிளகாய்களும் கொஞ்சமாக மஞ்சளும் சேர்த்து விரால் மீன் சொதியை வைத்தேன். எவ்வளவு பிரக்ஞையுடன் இருந்தும் சித்தியின் பாடல் அப்பாடல் காதில் கேட்டுக் கொண்டேயிருந்தது.
சமையல் வேலையைச் முடித்து துடோங்கைக் கழற்றிய போது முடியிலிருந்த வியர்வை மணத்தை நுகர்ந்து பார்த்தேன். அவாங்கின் மீது வீசிய கவிச்சி வாடையே அதில் இருந்தது. நன்றாக ஆராய்ந்தபோது நான் அணிந்திருந்த ஆடையில் கூட அந்த மணமே படிந்திருந்தது. மாலைக்குள் வீட்டின் எல்லா இடங்களிலும் அந்த நாற்றம் பரவியிருந்தது. என் மீதுதான் அந்த மணம் எழுகிறதென்று அடாம் என்னருகில் கூட வரவில்லை.
அவாங் சாப்பிட்டு விட்டு மறுபடியும் வெளியே போய் உட்கார்ந்து கொண்டான். அவனுக்குச் செய்ய வேறொன்றும் இல்லை என்பதே பெரும் உளைச்சலாவதை உணர்ந்தேன். குழாயினடியில் வாளியை வைத்து நீரைத் திறந்து வைத்தான். நீர் நிரம்பியிருந்த வாளியில் எலிப் பொறியை வைத்து விட்டு நீரை முழுமையாக நிரப்பி அமர்ந்தான். சிறிது நேரம் கழித்து, பொறியில் செத்திருந்த எலியை எடுத்து கால்வாயில் வீசினான். செர்ரி மரத்தில் வந்து அடைந்து கொண்டிருந்த புறாக்களைக் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.
மகிரிப் தொழுகைக்கு மறுபடியும் உள்ளே வந்தான். தொழுகை முடித்துச் சாப்பிட்டு விட்டுப் படுக்கைக்கு வந்தான். கைகளில் செருகியிருந்த இரும்புக்கம்பிகளை எடுத்துக் கட்டிலுக்குப் பக்கத்தில் வைத்தான். இப்பொழுது அவன் உடலிலிருந்து எழுந்த மணம் நாசியில் நுழைந்து உடலில் அசைவுகளை உருவாக்கியது. என்னிலிருந்துதான் அந்த மணம் எழுந்து கொண்டிருந்ததைப் போல உடல் முழுவதும் நிறைந்திருந்தது. புறமாக இருந்து மெல்ல என் முதுகைத் தொட்டு அணைத்துக் கொண்டான். நான் பிணமாவதைப் போல உணர்ந்தேன். கால்கள் இயல்பாக நடுங்கித் தளர்ந்தன.
இடக்காலை மட்டும் தொங்க விட்டு உடலில் இயங்கிக் கொண்டிருந்தான். உச்சக்கட்ட இயக்கத்தில் ‘சிண்டாய்லா’ என்ற சிணுங்கல் மெல்லியதாகக் கேட்கத் தொடங்கியப்போது வலக் கையால் எனது வாயைப் பொத்தி இடக் கையால் அவன் கழுத்தை இழுத்து அணைத்துக்கொண்டேன்.
(வல்லினம் ஜனவரி 2021)
