பெரியம்மா தலைமுடியை வாரிக் கட்டிக் கொண்டு பெரியப்பாவைக் கெட்ட வார்த்தையிலேயே திட்டியவாறே மேலே வந்தார். அன்றுதான் பெரியம்மா அப்படிப் பேசுவார் எனத் தெரிந்ததும் அதிர்ச்சியாகவும் இருந்தது. பெரியப்பா என்னைத் தூக்கி வரந்தாவில் வீசும்போது அம்மாவும் அங்கு வந்துவிட்டார். அலறிக் கொண்டு எழ முயன்று மீண்டும் விழுந்தேன். தலைச் சுற்றலாக இருந்தது.
“என் சுருட்டெ தொட்டனா… நீ செத்தடா… சும்மா என் ஜாமான்லாம் எடுத்து நோண்டிக்கிட்டு இருந்து பாரு…” எனக் கத்திவிட்டுப் பெரியம்மா அலறுவதைக்கூட பொருட்படுத்தாமல் பெரியப்பா தன் கையில் வைத்திருந்த சுருட்டை எடுத்து நிதானமாகப் பற்ற வைத்தார். அவரைப் பார்க்கும் எவருக்கும் எரிச்சல் மிகாமல் இருக்காது. அப்படிப்பட்ட தோற்றம். எச்சில் வடிந்து தாடையிலுள்ள குறுந்தாடியில் சிதறல்களாக ஒட்டியிருக்கும்.
“கட்டைல போய்ருவ…” பெரியம்மாவின் அலறல் இன்னும் நிற்கவில்லை.
வீரமாணிக்கம் பெரியப்பா எங்கள் வீட்டுக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. எப்பொழுதும் சுருட்டை வாயில் வைத்தப்படியே இருப்பார். அப்பாவிற்கும் பெரியப்பாவிற்கும் இருக்கும் பழக்கமிது. சுருட்டு இந்த வீட்டில் புதிதல்ல. பாதி புகைக்கப்பட்டு மிச்சமாய்க் கிடக்கும் சுருட்டை வீட்டில் எங்கும் பார்க்க முடியும். தரையில், கண்ணாடி சன்னல் பலகையின் விளிம்பில், வானொலிப் பெட்டிக்கு மேல், சமையலறை கதவினோரமிருக்கும் சட்டத்தில், கழிவறையில் என வீடு முழுவதும் சுருட்டும் சுருட்டு வாடையும் நித்தியமாக இருக்கும்.
சுருட்டை எங்குப் பார்த்தாலும் எனக்குக் குமட்டிக் கொண்டு வரும். எச்சிலில் ஊறி காய்ந்து அது உருவாக்கும் வாடை என்னவோ போல் செய்துவிடும். உடனே எடுத்துத் தூக்கி வீசிவிடுவேன். அதுதான் பெரியப்பாவிற்கும் அதீதமான கோபத்தை உருவாக்கியிருந்தது. அப்பாவின் மரணத்திற்குப் பிறகு கம்போங் ராஜாவில் வாடகை வீட்டில் இருந்த பெரியப்பாவையும் பெரியம்மாவையும் அம்மாதான் அழைத்து வந்தார். பெரியப்பா அங்குப் பன்றி வேட்டைக்கும் உடும்பு வேட்டைக்கும் பேர் போனவர். வீட்டின் பின்புறத்திலுள்ள நீர்த்தொட்டியின் அருகே பன்றியையும் உடும்பையும் வெட்டித் துண்டுகளாக்கிக் கம்பத்தில் விற்றுவிடுவார். உடும்பை அதன் கவுச்சி மிகாமல் கறியாக்கும் பக்குவம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. குறிப்பாக உடும்பு இறைச்சி அதிக நீரும் எண்ணெயும் கொண்டு அதன் சுண்டும் அளவை வைத்துச் சமைத்தால் மட்டுமே கவுச்சி வாடை வெளியேறாது. உரைப்பும் ருசியும் சூழ உடும்பைக் கறியாக்கிக் கம்பத்து மூலையிலுள்ள மோட்டார்ப் பட்டறைக்குப் பக்கத்தில் இருக்கும் கள்ளுக் கடைக்குக் கொண்டு போய்விடுவார். பத்து டுவா, குரூண் போன்ற இடங்களிலிருந்து வந்திருப்பவர்கள்கூட அந்தக் கறி வாசத்திற்கு அடிமையாகிப் பெரியப்பாவுடன் நட்பாகிவிடுவார்கள்.
பெரியப்பா நாய்களைப் பிடித்து அதனை உடும்பு வேட்டைக்கு வெறியேற்றும் வித்தை தெரிந்தவர். அவருடைய கம்பத்து வீட்டில் பின்புறம் ஒரு நாய்க் கொட்டாயைக் கட்டிவிட்டுப் பல சமயங்களில் அங்கேதான் நாய்களுடன் இருப்பார். உடும்பின் பித்தப்பையைக் கொண்டு நாயின் மூக்கில் அதை வைத்து அதன் நுகர்வுத்தன்மையை உசுப்பேற்றுவார். அப்படித்தான் நாயின் வெறியை ஏற்ற முடியும். அவரிடம் இருக்கும் ஜோனியும் டைகரும் கம்பத்தில் பிரபலமான வேட்டை நாய்கள். செம்பனைக் காட்டுக்குள் நுழைந்ததும் மட்டைகளுக்கு அடியில் படுத்திருக்கும் உடும்பை அல்லது அவை நகர்ந்து சென்ற வழித்தடங்களை உடனே மோப்பம் பிடித்துத் தெரிந்து கொள்ளும். ஆர்ப்பரித்தும் குரைத்தும் ஜாம்பவான் மாதிரி உடல்வாகை கொண்ட
பெரியப்பாவையே இழுத்துக் கொண்டு ஓடும். ஜோனி தூரத்திலேயே உடும்பு நடமாட்டத்தை அறிந்து கொண்டு விட்டால் விடாமல் அவ்விடத்தைச் சுற்றி ஓடியவாறு பரபரத்துக் குரைத்துக் கொண்டே இருக்கும். புதர் மறைவில் படுத்திருக்கும் உடும்புகளைச் சட்டென ஜோனி அடையாளங்கண்டுவிடும்.
“புதுசா வர்ற நாய்ங்களுக்குப் பயிற்சிலாம் தேவை இல்ல. டைகர் கூட சுத்த விட்டாலே போதும்… வேட்டை நாய்ங்கக்கூடப் பழக விட்டுட்டாலே அது பழகிக்கும்… அவ்ளதான்…” என நாய்களைப் பற்றிப் பெரியப்பாவிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். கத்திகளைக் கூர்தீட்டி அளவுக்கேற்றாற்போல அனைத்தையும் ஒரு வெள்ளை வாளியில் போட்டுக் கட்டி வைத்திருப்பார்.
“நாய்ங்கன்னா சுருட்டு மாதிரி… வாய்லயும் மனசுலயும் போட்டு வச்சிக்கணும்… காலத்துக்கும் நன்றியா இருக்குங்க… என்னா புரியுதாடா?”
எப்பொழுதுதாவது நானும் அம்மாவும் பெரியம்மாவைப் பார்க்கப் போனால் குடித்துவிட்டு நாய் புராணத்தைத்தான் பாடிக் கொண்டிருப்பார். நாய் போல் உறுமி பயமுறுத்துவார். நானும் தம்பியும் பயந்துபோய் அம்மாவின் பின்னால் ஒளிந்து கொள்வோம். பெரியம்மா வீட்டிற்குப் போவதென்றாலே எனக்கு இவருடைய நினைப்பு வந்து அச்சத்தை உண்டாக்கும்.
பெரியப்பா வழக்கமாகச் சாயங்காலம்வரை கம்போங் ராஜா காட்டில் இருந்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவார். காட்டில் மூலை முடுக்கெல்லாம் பெரியப்பாவிற்குப் பழக்கம். எங்குப் பன்றி இருக்கும்; எங்கு உடும்பு அலையும் என அவருக்கும் டைகருக்கும் நன்றாகவே தெரியும். பெருத்து ஆற்றங்கறையில் கிடக்கும் நீர் உடும்புகளை இலாவகமாக வேட்டையாட டைகருக்கு பெரியப்பாவின் உதவி தேவை. இல்லையென்றால் நீர் உடும்பின் பெரிய அளவு வால் டைகரைத் தாக்கினால் அது படுத்துவிடும் என்று பெரியப்பாவிற்குத் தெரியும். அப்படியும் டைகர் சில சமயங்களில் ஆவேசப்பட்டுப் பற்களை இறக்கிவிடும். நாயின் பல் பட்ட பகுதியிலுள்ள இறைச்சியை வெட்டி வீசித்தான் சமைக்க முடியும். மேட்டுடும்பு கிடைக்காத நாள்களில் நீர் உடும்பைக் கொண்டு வந்து வித்தியாசம் அறியாமல் சமைக்க பெரியப்பாவால் மட்டுமே முடியும். இல்லையென்றால் நீர் உடும்பைப் பெரும்பாலும் சாப்பிடமாட்டார்கள். கலந்துகொடுத்துப் பெரியப்பா கம்பத்தில் சமாளித்து வந்தார். பின்னர், கம்பத்தைச் சுற்றியிருந்த காடுகளைப் புதிய வீட்டமைப்புத் திட்டங்களுக்கு அழித்துவிட்டார்கள். பக்கத்துத் தோட்டங்களுக்கும் ஆற்றங்கரைகளுக்கும் சென்று உடும்பு தேடிக் கிடைக்காமல் கள்ளுக் கடையில் குடித்து மட்டும் வீடு திரும்பி நாள்தோறும் புலம்பியிருந்துவிட்டு இரவில் பெரியம்மாவுடன் சண்டை உச்சமடையும். இப்படிப் போனபோக்கில் இருந்த பெரியப்பாவினால் கடன் தொல்லை தான் அதிகமானது. வேலைக்கு ஏதும் போக முடியாததால் இருவருமே அவதிப்பட்டனர்.
“உடும்பு சமைச்சி கொடுத்தா உனக்கு என்ன ஆயிரம் வெள்ளியா கெடைக்கும்? இதுலாம் ஒரு பொழப்பா?” என்று பெரியம்மா கடன்காரர்களிடமிருந்து தப்பிக்கப் பக்கத்து வீட்டு சரோஜா அக்காவின் வீட்டில் ஒளிந்து கொண்டு பின்னர்க் கோபமெடுத்துப் பெரியப்பாவிடம் சண்டைக்கு நிற்பார். இதுவே அவர்களுக்கு வழக்கமாகியும் போனது. பின்னர்த்தான், அம்மா அவர்கள் இருவரையும் வீட்டோடு வந்து இருக்கும்படி சொன்னதும் வசதியாகவே அமைந்துவிட்டது. என்ன ஏது எனக் கேட்காமல் அப்போதைக்குப் பெரியம்மாவுடன் கிளம்பி இங்கு வந்துவிட்டார். சில நாள்களுக்கு இப்படி அடைந்து கிடப்பது அவருக்கு இங்கு இருப்புக்கொள்ளவில்லை.
நாயைக் கொண்டு வந்து வளர்க்கப் பார்த்தார். ஆனால், அங்கு நாய் வளர்க்க அனுமதி இல்லை. தெருவில் அலையும் நாய்களின் தொல்லைகளே பெரும்பாடாக இருந்ததால் நாய் வளர்ப்பதற்கு அங்குக் கடுமையான மறுப்பிருந்தது. ஆகவே, அங்குத் திரியும் நாய்களை நோட்டமிட்டுக் கொண்டும் அதனுடன் விளையாடிக் கொண்டும் இருப்பார். பெரியப்பாவிற்குச் சாதாரணமாகவே எச்சில் நிறைய ஊறும். எப்பொழுதும் துப்பிக் கொண்டே இருப்பார். வாயிலுள்ள சுருட்டும் நனைந்து நஞ்சிவிடும். பாதி நேரம் நெருப்பில்லாமல் வெறுமனே சுருட்டை வாயில் வைத்திருப்பார். நெருப்பு இல்லாவிட்டாலும் சுருட்டு நனைந்து எச்சிலில் பரப்பும் புகையிலை ருசி மூளைக்குப் போதுமானதாக இருந்தது. சுருட்டுப் புகைத்துக் கொண்டிருக்கும் போதையை அது வழங்கிவிடும். மேல் மாடிக்கும் கீழ் மாடிக்கும் வெறுமனே உலாவிக் கொண்டிருப்பார். அவருடைய சுருட்டு வாடை எல்லோருக்கும் பரிச்சயம். அப்பா இருந்தபோது சுருட்டு வாடை வீட்டிற்குள் மட்டும்தான் வியாபித்திருக்கும். இப்பொழுது அந்த வாடை அடுக்குமாடி குடியிருப்பிக் பிரபலமடைந்துவிட்டது.
“சுருட்டுப் போகுது…” என அங்குள்ள சிலர் அவரை ஒரு கேலிப்பொருளாகவே பார்க்கத் தொடங்கியிருந்தனர்.
படிக்கட்டுகளில் எப்பொழுதும் சிறுநீர் வாடை வீசும், இங்கிருப்பவர்கள் நன்கு அறிந்து வைத்திருந்த வாடை அது. இரவு முழுவதும் நாய்கள் படிகளில்தான் படுத்துக் கிடக்கும். அதைத் தாண்டிப் போவதும் சிறுநீர் வாடை மூக்கில் ஏறி பின்னர் சட்டெனச் சகஜமாவதும் அங்கு எல்லோருக்கும் பழக்கம். எவ்வளவு கழுவினாலும் அது தொலையாது. எச்சிலும் வெற்றிலையும் துப்பித் துப்பிக் கரை படிந்து போன வெளிச்சுவர்கள். புதிதாக அவ்விடம் வருபவர்களுக்கு குமட்டலை உண்டாக்கிவிடும். அங்கிருக்கும் கிழவிகளின் கூட்டுச் சதி அது. மேலும், இரண்டாவது மாடியின் மூலையில் டத்தோ சாமிக்கு வைக்கப்பட்ட பீர்ப் போத்தல்கள் கிடக்கும். அது ‘டத்தோ’ சாமிக்கு வைத்துவிட்டுப் பின்னர் யாரோ எடுத்துக் குடித்துப் போட்ட போத்தலா அல்லது கொசு மருந்து பற்ற வைக்கப்பட்டுப் பின்னர் இங்கேயே விடப்பட்ட போத்தலா எனத் தெரியாது. அந்த மாடியில் மட்டும் சீனர்கள் அதிகம். படிக்கட்டின் ஓரத்தில் சிவப்புச் சாயம் பூசப்பட்ட பலகைத் தடுப்பிற்கு உள்ளே சீன டத்தோவை வைத்து வழிப்பட்டனர்.
பெரும்பாலும் அங்குள்ள சில தமிழர்களும் டத்தோவை எல்லை சாமியென நினைத்தனர். வெள்ளிக்கிழமைகளில் கோவிலுக்குப் போக முடியாதவர்கள் டத்தோவிற்கு ஊதுபத்தி கொளுத்தி வேண்டிக்கொண்டனர். ஒரு சிலர் நினைத்தது நடக்க வேண்டுமென டத்தோ சாமிக்குப் பீர் போத்தல்களைத் திறந்து படைக்கத் துவங்கினார். பெரியப்பாதான் டத்தோவிற்குச் சுருட்டை வைத்தார்.
“எல்ல சாமின்னா அப்படியே வாயில சுருட்ட வச்சிக்கிட்டுக் கையில ஒரு கா போத்தைய வச்சிக்கிட்டுக் கம்பீரமா நிக்கணும்!” எனச் சுருட்டுப் படைத்த சாதனையைப் பிதற்றிக் கொள்வார். சீனர்கள் வணங்க வைத்த டத்தோ சாமிக்கு வேறு ஒரு ரூபம் உருவாகியது. மூன்றாவது மாடி வீட்டில் இருக்கும் குழந்தைவேலன் தாத்தா தம் மகனோடு ஏதும் வாய்வம்பு என்றால் பாயைத் தூக்கிக் கொண்டு படிக்கட்டுக்கு நடுவில் இருக்கும் சமவராந்தாவில் படுத்துக் கொள்வார். இரவெல்லாம் டத்தோ சாமியின் முன்னிலையில் உட்கார்ந்து கொண்டு சாபமிடுவார். வேறொருநாள் மறந்து வேறு மாடியில் படுத்துக் கொண்டு இரவெல்லாம் டத்தோ சாமியைக் காணவில்லை எனப் பதற்றமடைவார். அவர்தான் இடம் விட்டு இடமாறி மாடியில் படுத்துக் கொள்வார். எங்கெல்லாம் படுக்கிறாரோ அங்கெல்லாம் அவர் குடித்து முடித்த பீர்ப் போத்தலின் வாயில் கொசுவத்தியின் நுனிகாலைச் செருகி வைத்துக் கொள்வார். பெரியப்பா எரிந்து முடிந்து அப்படிக் காலியாக இருக்கும் போத்தல்களை எடுத்து வெளியில் வீசுவதை ஒரு பொழுதுபோக்காக வைத்திருந்தார். அவர் வேறு எந்த வேலைக்கும் போகவும் இல்லை. வேறு எந்த வேலையும் அவருக்குத் தெரியாது எனப் பெரியம்மா சொல்லிவிட்டார். அம்மாவும் பெரியப்பா வேலைக்குப் போவதை விரும்பவில்லை.
பெரியப்பா, அப்பாவின் குடும்பத்தில் மூத்தவர். இரண்டே பேர் கொண்ட குடும்பம் அது. அப்பாவும் பெரியப்பாவும் இரண்டாண்டுகள்தான் வித்தியாசம். இருவரும் ஒரே மாதிரி முக அமைப்பும் முரட்டுடலும் கொண்டவர்கள். எழுபது வயது என எப்பொழுது சொன்னாலும் யாரும் நம்பமாட்டார்கள். அந்தந்த வயதிற்கு எல்லோரும் ஓர் உடலைக் கற்பனை செய்து வைத்திருக்கிறார்கள். தளர்வு முதுமையின் நீக்க முடியாத அடையாளம். ஆனால், வீரமாணிக்கம் பெரியப்பா பெயருக்கு ஏற்றதைப் போல உடலில் சோர்வு இல்லாமல் விறைப்புடன் மட்டுமே இருப்பார். ஓர் உடும்பு பளபளப்பு மிளிர வளைந்து எம்பித் திடத்துடன் நகர்வதைப் போலக் காலையும் மாலையும் இரவும் பார்க்கும் அனைத்துப் பார்வைகளிலும் பெரியப்பா திடமாக நாக்கை நீட்டியப்படி வளைந்து பளபளப்புக் குறையாமல் நகரும் உடும்பைப் போலவே தெரிந்தார். அவர் மீது வீசும் சுருட்டு வாடை உடும்பைத் தேடியோடும் நாயைப் போன்றே அவரைப் பின் தொடர்ந்தது.
பெரியப்பாவிற்குக் கோபம் வந்துவிட்டால் வீட்டில் ஏதாவது பொருள் உடையும், அடுத்து வீடே உப்பி வெடித்துவிடும் அளவிற்கு அவருடைய சத்தம் அடுக்குமாடிக்கே கேட்கும். பெரியப்பாவின் அலறலும் குரலும் சாதாரணமானதல்ல. ரொம்பவும் கறாரான குரல். பெரும்பாலும் அங்கு வசிப்பவர்கள் சீனர்கள் என்பதால் பலமுறை சொல்லிப் பார்த்தும் பெரியப்பா அடங்கவில்லை. சுருட்டு வாசம் வீசும் பெரியப்பாவை அங்கு யாரும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள். பெரியப்பாவின் முகத்தில் ஒரு கொடூரமான தணியாத கோபம் அப்படியே இருக்கும்.
“செத்தடி மவளே!” எனப் பல சமயங்களில் பெரியம்மாவைத் துரத்திக் கொண்டு வீட்டுக்கு வெளியேயும் பெரியப்பா வீட்டுச் சண்டையைக் கொண்டு வந்ததுண்டு. அப்பொழுதெல்லாம் பெரியம்மா தப்பித்தோம் பிழைத்தோம் என மேல்மாடிக்கு ஓடிவிடுவார். அங்குச் சில இந்தியர்களின் வீடும் இருப்பதால் யாராவது ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்து ஒளிந்து கொள்வார். பெரியப்பா அருள் உடல் முழுவதும் பிரவாகமெடுக்க மேலேயும் கீழேயும் ஓடிக் கொண்டிருப்பார்.
அப்பா இருந்தபோது வருடத்திற்கு இரண்டுமுறைகூட பெரியப்பா இங்கு வருவது ஆச்சரியம்தான். இன்று அப்பா இல்லாத வீட்டில் அவருடைய சத்தம் ஓங்கியிருந்தது. பெரியப்பாவிற்குப் பிள்ளைகளே இல்லை. எனக்கும் ஆசைக்காக ஒரு பொருள்கூட அவர் வாங்கிக் கொடுத்ததும் இல்லை. வீட்டில் இருக்கும் எங்களை அவர் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அவர் பிள்ளைகளிடம் அன்புடன் பேசியும் நான் பார்த்ததே இல்லை. தின்று கொழுத்துக் கறையில் படுத்திருக்கும் உடும்பைப் போலப் பெரியப்பா. அம்மா எங்களுக்காக வாங்கி வைக்கும் உணவுப் பொருள்களைக்கூட பெரியப்பா எடுத்துச் சாப்பிட்டுவிடுவார்.
“ஏன்யா அந்தப் பையன சும்மா சும்மா அடிச்சிக்கிட்டு இருக்கெ?” எனப் பெரியம்மா கேட்கும்போதெல்லாம் மிகவும் அலட்சியமாகச் சிரிப்பார். மேற்கொண்டு பெரியம்மா ஏதும் கேட்டால் கத்திக் கொண்டே வாளியையோ செருப்பையோ பெரியம்மாவின் மீது விட்டடிப்பார். பெரியப்பாவின் இரைச்சல் எப்பொழுதும் குறைந்ததேயில்லை. எல்லோரையும் திட்டிக் கொண்டே இருப்பார். அவருக்கு வாழ்க்கை திருப்தியளிக்கவே இல்லை. கோபம் வந்துவிட்டால் வீட்டில் எல்லாப் பக்கங்களையும் உற்றுக் கவனித்துவிட்டு உடும்பைப் போல நடந்து கொண்டிருப்பார். பின்னர், வீட்டுக்கு வெளியில் போய்க் கத்திக் கொண்டிருப்பார். எப்பொழுதும் அவர் கோபமாக இருக்கும்போது பெரியம்மா உணவைப் போட்டுவிட்டுப் பெரியப்பாவைச் சாப்பிட அழைக்கும் போராட்டம் கொடுமையானது.
“நான் ஏன்டி சாப்டணும்? இப்படியே பட்டினிலெ சாவறேன். அல்சர் வந்து தொலையட்டும்…”
பெரியம்மா கேட்டுச் சலித்த வசனம். பெரியம்மா சாப்பிடச் சொல்லிக் கேட்கும்போதெல்லாம் பெரியப்பா தட்டை ஓங்கிச் சுவரில் அடித்துவிடுவார். சாம்பாரும் சோறும் ஒருவகையான வீச்சத்துடன் குலைந்து ஒழுகும். உடனே அம்மா வழக்கம்போல உள்ளே ஓடித் துடைப்பத்தைக் கொண்டு வந்து துடைக்க ஆரம்பித்துவிடுவார். அம்மாவிற்கு வீடு சுத்தமாக இருக்க வேண்டும். அங்கு நடப்பதைப் பற்றிக் கவலையில்லாமல் அம்மா சாம்பார் விழுந்து கொட்டிய இடத்தைத் துடைக்கத் துவங்கி விடுவார்.
“சாப்பாடு போட்டுக் கொல்றீயா? என்னா சோத்துக்கா பொறந்தேன்? வேட்டையாடின உடம்புடி…”
பெரியம்மா பெரும்பான்மையான சமயங்களில் வாயே திறப்பது இல்லை. வெறுமனே முனகுவார். அதையும் பெரியப்பாவினால் பொறுத்துக் கொள்ள முடியாது.
“உன்னெ அடிச்சி வெளில தொரத்துனாதான் தெரியும்”
பெரியம்மாவின் மீது பாய்வார். பெரியம்மா உதறியடித்துக் கொண்டு எங்காவது ஓடுவார். அவருக்கு வேறு எதுவும் தெரியாது. சண்டையெல்லாம் முடிந்து பெரியம்மா அழுகையுடனோ உடலில் ஏதும் காயங்களுடனோ வீட்டில் வந்து அடங்குவார். சிறிது நேர அமைதிக்குப் பிறகு அம்மா பெரியம்மாவின் முதுகில் தடவிக் கொடுத்துவிடுவார்.
ஜொகூரில் இருக்கும் பாண்டியன் மாமாதான் வீட்டுச் செலவுக்கு அம்மாவிடம் பணம் கொடுப்பார். அவருடைய தயவிலேயே வீடு ஓடிக் கொண்டிருந்தது. அப்பாவின் ஓய்வூதியப் பணமும் மாதம் வந்து கொண்டிருக்கும்.
பணம் பற்றியெல்லாம் பெரியாப்பாவிற்குக் கவலையே இல்லை. மீசையைக் கொஞ்சம் நீவிக் கொண்டே வரவேற்பறையில் விறைத்தவாறு அமர்ந்திருப்பார். அம்மா வழக்கம்போலப் பத்து வெள்ளியை அவர் பார்க்கும்படி மேசையில் வைத்துவிடுவார். பெரியப்பாவும் அம்மாவுங்கூட பேசிக்கொள்ளமாட்டார்கள். பெரியப்பா இருக்கும் இடத்திற்கு அம்மா வரமாட்டார். பெரியப்பாவை நேருக்கு நேர் எதிர்க்கொள்ளாதபடியே ஒதுங்கி நிற்பார். அடுக்குமாடி வீடு சிறியது. பத்தடி எடுத்து வைத்தால் வீடு முடிவடைந்துவிடும். சுற்றிச் சுற்றி வந்தாலும் சீக்கிரமே சலிப்படையச் செய்யும் வீடு. மூன்று சிறிய அறைகள், ஒன்றில் பாதிக்கும் மேற்பட்ட துணிமணிகள் குவித்து மூட்டை மூட்டையாகக் கட்டி வைக்கப்பட்டிருக்கும். பெரியப்பாவும் பெரியம்மாவும் அந்த அறையில்தான் உறங்குவார்கள். அம்மா மட்டும் முதல் அறையில். நானும் தம்பியும் சாமி அறையில் படுத்துக் கொள்வோம். ஒரு வரவேற்பறை. அங்கிருந்து தலையை மட்டும் எக்கினால் சமையலறை. அவ்வளவு சிறிய வீடு.
அம்மாவிற்குப் பக்தி அதிகம். சாமி காரியங்களுக்காக மட்டும்தான் வீட்டில் வாயைத் திறப்பார். மற்றபடி வீட்டில் எல்லோரும் சாப்பிட்டிருக்க வேண்டும். காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து சாமி காரியங்களைத் தொடங்கிவிடுவார். அடுக்குமாடி வீடு என்றாலும் அம்மாவின் பக்திக்கு அளவே இல்லை. பக்கத்து வீட்டுக்கும் சேர்த்துத்தான் மணி அடிப்பார். ஒரு கட்டம் அது அதீதமான எல்லைக்குச் செல்லும். பிறகு, வீடு முழுக்க மஞ்சள் தண்ணீர் தெளித்துவிட்டுச் சமையலறையிலுள்ள சன்னலுக்கு வெளியில் தொங்கும் ரோஜா செடிக்கு அபிஷேகம் செய்யத் துவங்குவார். அம்மாவின் அபிஷேகம் அங்குப் பிரசித்தி பெற்றதாகும். அவர் செடிக்கு நீர் ஊற்றுவதைத்தான் எல்லோரும் ‘அபிஷேகம்’ என்பார்கள். காலை மணி 6.30க்கு அது தொடங்கும். வீட்டின் சமையறையில் உள்ள சன்னலுக்கு வெளியே இருக்கும் கம்பியில் நெகிழிப் பாசியில் ரோஜாவை அம்மா வைத்திருக்கிறார். மாதத்தில் ஒருமுறை அது செழிக்கும். பூக்களைப் பார்க்கலாம். அம்மா அச்செடிக்கு கைகளைச் சன்னல் கம்பிகளுக்கு நடுவே இருக்கும் பெரிய ஓட்டையில் விட்டு நீரை ஊற்றவோ நீண்டு வளர்ந்துவிடும் தண்டை வெட்டவோ முடியும். அம்மா நீரை ஊற்றும்போது அது விலகிச் சுவரில் வடிந்து கீழ்மாடி சுவர்வரை ஒழுகும்.
அம்மாவின் சமையலறைக்கு எப்பொழுது போனாலும் ஒருவகை சாம்பார் வாடையும் சமையல் பட்டை வாடையும் வீசிக் கொண்டே இருக்கும். அம்மா அன்று சமைக்கவில்லை என்றாலும் அந்த வாசம் அப்படியேதான் இருக்கும். குறுகலான அறை. சன்னலைத் திறக்கும்போது மட்டும் சட்டென ரோஜா செடியின் ஒரு சுகந்தமான வாசம் உள்ளே பரவும். அத்துணை நெடிக்கு மத்தியிலும் அதனை நுகர முடியும்.
அம்மா எழுந்து உணவுச் சமைத்துவிட்டு அதனைச் சாமிக்குப் படைக்கும்போது பெரியப்பா எழுந்திருப்பார். எழுந்து குளிக்காமலேயே சுருட்டைப் புகைக்கத் துவங்கிவிடுவார். அந்தச் சுருட்டு வாசம் அம்மாவுக்குப் பிடிக்காது. இருந்தாலும் அவ்வாடை இந்த வீட்டில் அபூர்வமானது இல்லை. காலையில் பெரியப்பாவுக்கு அதுதான் தெம்பு. வெளிவாசலைத் திறந்துவிட்டுச் சுருட்டைப் புகைப்பார். வாயில் ஊறும் எச்சிலையும் துப்பிக் கொள்வார். வீட்டு வாசலில் பெரியப்பாவின் எச்சில் வீச்சம் எப்பொழுதும் பரவியிருக்கும். எல்லா வேலையும் முடிந்த பிறகு வாசலைச் சவர்க்காரத் தூளைப் போட்டு அம்மாவும் பெரியம்மாவும் கழுவுவார்கள். எவ்வளவு கழுவியும் எச்சில் வாடை அகன்றதே இல்லை. சவர்க்காரத் தூள் வாசனையுடன் அது கலந்து வீசும்.
அம்மாவுக்கு எந்த வேலையும் இல்லாவிட்டால் உடனே வாளியைக் கொண்டு வந்து வீட்டைத் துடைக்கத் துவங்கிவிடுவார். பெரியப்பாவிற்கு அது பிடிக்காது. பெரியம்மாவிடம் திட்டிக் கொண்டிருப்பார்.
“இப்படியே துடைச்சிக்கிட்டு இருந்தா சுத்தமா எல்லாம் போய்டும். எதுமே தங்காது…” எனக் கத்துவார்.
“ஆமாம்… நீ அப்படியே சொத்துச் சொத்தா சேர்த்து வச்சிருக்க… எல்லா துடைச்சிட்டுப் போய்டுமாம்…” எனப் பெரியம்மா பதிலுக்கு முனகிவிட்டுப் போய்விடுவார்.
அம்மா துடைப்பதை நிறுத்த மாட்டார். பெரியப்பா அப்படிக் கத்தும்போது இடத்தை மாற்றித் துடைப்பாரே தவிர அவருக்கு வீடு எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும். பெரியப்பா இல்லாதபோது அவருடைய அறையையும் துடைத்துவிடுவார். வீட்டின் ஒட்டுமொத்த அழுக்கே அங்குத்தான் இருக்கிறது என்பதைப் போல அம்மா அழுத்தித் துடைப்பார். பெரியம்மா அங்குள்ள சீனர்களின் வீடுகளுக்கு வீட்டு வேலைக்குச் செல்வதை வைத்துத்தான் பெரியப்பாவின் சில தேவைகள் நிறைவேறின. சுருட்டுப் புகைப்பதைத் தவிர அவருக்குக் குடிப்பழக்கமும் உண்டு. குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் படுத்து உறங்கிவிடுவார். குடிக்காத நாள்களிலேயே அவருடைய சத்தம் வீட்டில் ஓங்கி இருக்கும்.
இருந்தாலும் அவருடைய விறைப்பு, பிடிவாதம், தோற்றம் ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு அவரிடமிருந்து எங்களை ஒதுக்கிவிட்டன. பெரியம்மா ஒரு கலர்த் துண்டைத் தோளில் எப்பொழுதும் போட்டிருப்பார். அம்மாதான் அவருக்கு உலகம். பெரியப்பாவின் மீது எரிச்சலும் கோபமும் தலைக்கேறும் போதெல்லாம் அம்மாவின் கால்களைக் கட்டியணைத்துக் கொண்டு அழுவார். அவருக்கு அதற்கு மேல் தெரியாது. பெரியப்பா எப்பொழுதும் தலையிலேயே அதிகப்படியாக அடித்துப் பெரியம்மா பாதிச் சக்தியையும் நினைவுகளையும் இழந்துவிட்டார். பல விடயங்களைக் கேட்டால் உடனே நினைவுபடுத்திச் சொல்ல முடியாமல் தடுமாறுவார்.
அன்றைய நாளில் நான் அவர் வைத்திருந்த சுருட்டுக் கட்டை எடுத்து மாடியிலிருந்து வீசிவிட்டேன். அதனைப் பார்த்துவிட்டு பெரியப்பா தாண்டவம் ஆடினார். எனது இரு கால்களையும் பிடித்து ஐந்தாவது மாடிக்கு வெளியே தொங்கவிட்டார். அன்று எனக்கும் தம்பிக்கும் மறக்க முடியாத நாள். அம்மாவும் பெரியம்மாவும் வெளியே போய்விட்டார்கள். பெரியப்பா வீட்டில் ஆள் இருக்கும்போதே திமிறாகத்தான் இருப்பார். அன்று யாரும் இல்லை என்பதால் என்னைப் பிடித்து இரண்டு கால்களையும் கயிற்றில் கட்டி ஐந்தாவது மாடியிலிருந்து கீழே இறக்கிப் பயம் காட்டும்போது எனக்குப் பாதி உயிர் போய்விட்டது.
‘அம்மா வந்ததும் பெரியப்பா என்னைத் தூக்கி வரந்தாவில் போட்டார். அப்பொழுது அம்மாவுக்குக் கோபம் திமிறிக் கொண்டு வந்தது. கண்களில் பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு அம்மா முதன்முறையாகப் பெரியப்பாவைப் பார்த்து முறைத்தார். சுருட்டுப் புகைக்கத் துவங்கிய பெரியப்பாவிற்கு அநேகமாகக் கதிகலங்கியிருக்கலாம். என்னைத் தூக்கி அணைத்துக் கொண்டு மீண்டும் வீட்டுக்குள் போய்விட்டார். தம்பியும் ரொம்பவே பயந்து போய்விட்டான்.
“ஏன்யா! உனக்குப் பிள்ளக்குட்டி இருந்திருந்தாதானே அருமை தெரியும்? மொரட்டுத் தடியா! நீ ஒன்னுக்கும் புண்ணியம் இல்லாதவன்…” எனப் பெரியம்மா கத்தினார்.
பெரியப்பா ஒரு கணம் அதிர்ந்துவிட்டார். பெரியம்மா கதறி அழுது கொண்டே அம்மாவின் பின்னே சென்றார். பெரியப்பா அன்று இரவுவரை வீட்டுப் பக்கம் வரவே இல்லை. பெரியம்மா துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு அழுகையும் முகமுமாக அம்மா ஏதும் சொல்லும்வரை அப்படியே அமர்ந்திருந்தார்.
“ஏய் பிள்ள! இந்தா இதுல பத்து வெள்ளி இருக்கு. போய் நான் சொல்ற ஜாமான வாங்கிட்டு அப்படியெ அந்த மனுசனுக்குச் சுருட்டு வாங்கியா… இருந்தா கூட அழைச்சிட்டு வா. மணி என்ன ஆவுது…”
பெரியம்மா உடனே எழுந்து புறப்பட்டு அரைமணிநேரத்தில் பெரியப்பாவுடன் வந்தார். போதையில் இருந்ததால் பெரியப்பா ஏதும் பேசவில்லை. தள்ளாடியப்படியே வரவேற்பறையிலேயே படுத்துவிட்டார். அம்மா அறைக்கு வெளியிலேயே நின்றிருந்தார். பெரியம்மா ஏதோ முனகிவிட்டுப் படுக்கப் போய்விட்டார். நான் உறங்காமல் சாமியறையின் கதவு இடைவெளியிலிருந்து அம்மாவைப் பார்த்தேன். அம்மாவின் கண்கள் பெரியப்பாவையே கவனித்துக் கொண்டிருந்தன.
பெரியப்பா இரு கைகளையும் தொப்பைக்கு மேல் வைத்துக் கொண்டு குரட்டைவிட்டப்படி படுத்திருந்தார். தூரத்திலிருந்து பார்க்கும்போது அப்படியே அப்பாவின் முழு உருவமாய்ப் பெரியப்பா சற்றும் வித்தியாசமில்லாமல் படுத்திருந்தார். அவர் விரல் இடுக்கில் அணைந்து புகைந்து கொண்டிருந்த சுருட்டின் வாடை மெல்ல வீடு முழுவதும் பரவிக் கொண்டிருந்தது.
